Sep 19, 2017 04:34 AM

70 வது வயதில் 38 வயது பெண்ணுடன் திருமணம் - படமாகும் என்.டி.ஆர்-ன் காதல் வாழ்க்கை!

70 வது வயதில் 38 வயது பெண்ணுடன் திருமணம் - படமாகும் என்.டி.ஆர்-ன் காதல் வாழ்க்கை!

ஆந்திர சினிமாவிலும், அரசியலிலும் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்த அம்மாநில முன்னாள் முதல்வர் என்.டி.ராமாராவ், தனது 70 வயதில், 38 வயதுடைய கல்லூரி பேராசிரியையான லட்சுமி சிவபார்வதி என்பவரை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். 

 

அப்போதைய காலக்கட்டத்தில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய என்.டி.ஆர்-ன் இந்த காதல் திருமணம் குறித்தும், லட்சுமி சிவபார்வதி - என்.டி.ஆர் ஆகியோர் இடையிலான உறவு எப்படி ஆரம்பித்தது என்பது குறித்தும், ராம்கோபால் வர்மா திரைப்படம் ஒன்றை எடுக்கப்போவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

 

என்.டி.ஆர்-ன் வாழ்க்கையை புத்தகமாக எழுதப்போவதாக கூறி, லட்சுமி சிவபார்வதி, என்.டி.ஆரை அனுகினார். அவரும் சம்மதம் தெரிவித்ததை தொடர்ந்து, புத்தகம் எழுதுவதற்காக அவரை லட்சுமி அடிக்கடி சந்தித்து வந்த நிலையில், இருவருக்கும் இடையே ஏற்பட்ட நெருக்கம் காதலாக மாறியது. இதையடுத்து இருவரும் திருமணம் செய்துக்கொள்ளப் போவதாக பத்திர்கைகளில் செய்திகள் வெளியாக, இதை முதலில் இருவரும் மறுத்தார்கள்.

 

ஆனால், சினிமா விழா ஒன்றில் என்.டி.ஆர் லட்சுமி சிவபார்வதியை தான் திருமணம் செய்துக்கொள்ளப் போவதாக பகிரங்கமாக அறிவித்ததோடு, திருமணமும் செய்துக்கொண்டவர், பிள்ளை வரம் வேண்டி பல கோவில்களில் சிறப்பு பூஜைகளையும் செய்தாராம். அவருக்கு 11 பிள்ளைகள் மற்றும் 30 பேரக்குழந்தைகள் இருக்கும் போது, மறுமணம் செய்துக்கொண்டதால் அவரது குடும்பத்திலும், கட்சியிலும் அவருக்கு எதிராக அதிருப்தி ஏற்பட்டதை தொடர்ந்து, சந்திரபாபு நாயுடு தெலுங்கு தேசத்தில் இருந்து பிரிந்து தனி அணியை உருவாக்க, என்.டி.ஆர்-ன் மூத்த மகன் பாலகிருஷ்ணாவும் அவருக்கு ஆதரவு தெரிவித்தார். பிறகு என்.டி.ஆர் உயிரிழந்ததும் தெலுங்கு தேசம் கட்சியை சந்திரபாபு நாயுடு தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார்.

 

தெலுங்கு தேசம் கட்சியை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர லட்சுமி சிவபார்வதி மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியிலேயே முடிந்தது.

 

இப்படிப்பட்ட என்.டி.ஆர்-ன் இரண்டாம் திருமணம் குறித்து ராம்கோபல் வர்மா எடுக்க உள்ள படம் குறித்து, லட்சுமியிடம் நிருபர்கள் கேட்டதற்கு, “என்.டி.ஆர்-ன் வாழ்க்கையை படமாக எடுப்பது வர்வேற்க தக்கது. ஆனால், இதில் உண்மையை மட்டுமே சொல்ல வேண்டும். என்.டி.ஆரை அவமானப்படுத்தியவர்கள், அவரது முதுகில் குத்தியவர்கள் பற்றி உண்மையை சொல்ல வேண்டும்.” என்று கூறியுள்ளார்.