Aug 28, 2023 08:36 AM

‘ரெட் சாண்டல் வுட்’ படத்திற்கு தேசிய விருது கிடைக்கும் - பிரபலங்கள் நம்பிக்கை

‘ரெட் சாண்டல் வுட்’ படத்திற்கு தேசிய விருது கிடைக்கும் - பிரபலங்கள் நம்பிக்கை

செம்மரம் கடத்தியதாக ஆந்திராவில் சுட்டுக்கொல்லப்பட்ட அப்பாவி தமிழர்களின் வாழ்வையும் வலியையும் கதையாக கொண்டு  உருவாகியுள்ள திரைப்படம் ‘ரெட் சாண்டல் வுட்’. ஜெ.என்.சினிமாஸ் நிறுவனம் சார்பில் ஜெ.பார்த்தசாரதி தயாரிப்பில் குரு ராமானுஜம் இயக்கியுள்ள இப்படத்தில் வெற்றி நாயகனாக நடித்திருக்கிறார். என்.எஸ்.பாஸ்கர் மனதை நெகிழ செய்யும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவர்களுடன் மேலும் கணேஷ் வெங்கட்ராம்,  ‘கேஜிஎஃப்’ புகழ் ராம், கபாலி விஷ்வா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

 

இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. வணிகர் சங்கத்தலைவர் விக்கிரமராஜா தலைமையில் நடந்த விழாவில் தயாரிப்பாளர் பார்த்தசாரதி அனைவரையும் வரவேற்று பேசினார். அப்போது அவர், “நான் முதன் முதலாக தயாரித்திருக்கும் படம் இது. துயர சம்பவத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் இப்படம் நன்றாக வந்துள்ளது. இதை வெற்றிபெறச்செய்யவேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

 

படத்தின் நாயகன் வெற்றி பேசுகையில், “இயக்குநர் இந்த கதையை சொன்னபோது இது உண்மை சம்பவம் என்று பல சம்பவங்களை சொன்னார். பல வருடங்களுக்கு முன்பு கிராமங்களில் குழந்தைகளுக்கு விளையாட கொடுக்கும் மரப்பாச்சி மொம்மைகள் செம்மர மரத்தில்தான் செய்வார்களாம். அதில் புற்று நோயை தீர்க்ககூடிய மருந்து உள்ளது. ஆனால் இன்று அதை ஏற்றுமதி செய்துவிட்டு சீனாவில் இருந்து பிளாஸ்டிக் பொம்மைகளை இறக்குமதி செய்கிறோம். இது சமுதாயத்தில் எல்லோரும் பார்க்கவேண்டிய படம்.” என்றார்.

 

நடிகர் எம்.எஸ். பாஸ்கர் பேசுகையில், ”தன் உயிரையும் பொருட்படுத்தாமல் தன் குடும்பத்திற்காக செம்மரம் வெட்டச்சென்று தன்னையே தியாகம் செய்யும் குடும்பத்தலைவனாக இந்தப்படத்தில் நடித்திருக்கிறேன். இதில் நடித்தபோது.  இருப்போமா இல்லையா என்று கூட யோசித்தது உண்டு. அந்த அளவுக்கு உயிரை பணயம் வைத்து வேலை செய்ய வேண்டியிருந்தது. ஒருநாள் இரவில் காட்டில் ஷூட்டிங் நடந்தபோது வன அதிகாரி ஒருவர் என்னிடம் வந்து ஷூட்டிங் எப்போது முடியும் என்று கேட்டார். இன்னும் ஆரம்பிக்கவே இல்லை இப்படி கேட்குறீங்களே என்று கேட்டேன். அதற்கு அவர், “இல்ல சார் இது யானைகள் நடமாடும் இடம். பக்கத்தில்தான் 20 யானைகள் இருக்கிறது” என்றார். எனக்கு பயம் வந்துவிட்டது. இருந்தாலும் யாரிடமும் சொல்லாமல் வேண்டாத தெய்வங்களையும் வேண்டிக்கொண்டிருந்தேன். அப்படி கஷ்டப்பட்டு இந்த படத்தை எடுத்திருக்கிறார்கள்” என்றார்.

 

இயக்குனர் பேரரசு பேசுகையில், “எம்.எஸ்.பாஸ்கர் சார் என் படங்களில் நடித்திருக்கிறார். ஆனால் இந்தப்படத்தில் அவர் வேறொரு அவதாரம் எடுத்துள்ளார். டிரைலரை பார்த்துவிட்டு மனது இறுகிப்போனது. தமிழன் எந்தப்பக்கம் போனாலும் பிரச்சனைதான். காரணமின்றி தாக்கப்படுவார்கள்; தண்டிக்கப்படுவார்கள். ஆனால் பின்னணியில் யாரோ இருப்பார்கள்.. அப்பாவி தமிழன்தான் அநியாயமாக பாதிக்கப்படுவான். இப்போது இரண்டு வகையான படங்கள் தான் வெற்றி பெருகின்றன. ஒன்று பெரிய ஹீரோக்கள் நடிக்கும் படங்கள். இன்னொன்று உயிரோட்டமான மக்களின் வலியை பிரதிபலிக்கக்கூடிய படங்கள் ஓடுகின்றன. நல்ல படங்கள் ஓடும். ‘தேசிய விருது பெற்ற ‘கடைசி விவசாயி’ நல்ல படம். அதேபோல் ‘ரெட் சாண்டல் வுட்’ படமும் நல்ல படம். இந்த படமும் தேசி விருது வாங்கும் என்று வாழ்த்துகிறேன்” என்றார்.

 

இயக்குநர் ஆர்.வி.உதயக்குமார் பேசுகையில், “இந்தப்படத்தின் டிரைலரை பார்த்துவிட்டு மனசு கஷ்டமானது. எத்தனையோ இளைஞர்கள் படிப்பறிவு இல்லாமல் வேலைக்கு போக நாதியில்லாமல் எங்கெங்கோ தவறாக மாட்டிக்கொண்டு தங்களை மாய்த்துக்கொள்கிறார்கள்.இந்தமாதிரி உண்மை நிகழ்வை படமாக்கிய இயக்குனர் குரு ராமானுஜம் மற்றும் தயாரிப்பாளர் பார்த்தசாரதிக்கு எனது வாழ்த்துகள். ஒவ்வொரு ஷாட்டும் பிரமாதமாக இருந்தது. இசை, எடிட்டிங், ஒளிப்பதிவு எல்லாமே சிறப்பாக இருந்தது. இந்தப்படத்தை எடுக்க ஒரு தைரியம் வேண்டும். இந்தப்படத்தை பத்திரிகை, ஊடக நண்பர்கள் மக்களுக்கு கொண்டுபோய் சேர்க்கவேண்டும்.” என்றார்.

 

இயக்குநரும் நடிகருமான மாரிமுத்து பேசுகையில், “இந்த நூற்றாண்டில் இலங்கை தமிழர் பிரச்சனைக்குப் பிறகு நம் காதுகளில் கேட்ட மரண ஓலம் செம்மர கடத்தல் பிரச்சனையில் நடந்த இரக்கமற்ற கொலைகள்தான். வெள்ளம் வந்து, மழை வந்து, சுனாமி வந்து, கொரோனா வந்து செத்துப்போனார்கள். ஆனால் மரம் வெட்ட போனவர்கள் செத்துப்போன அவலம், மனிதனை மனிதனே சுட்டுக்கொன்ற கொடூரத்தை இந்தப்படம் பதிவு செய்துள்ளது. லாபத்தை கணக்குப்பார்த்து கதை பண்ணாமல் இந்தப்படத்தை எடுத்திருக்கும் இயக்குனருக்கும் தயாரிப்பாளருக்கும் எனது பாராட்டுகள்” என்றார்.

 

நடிகர் கணேஷ் வெங்கட்ராம் பேசுகையில், “இந்த கதையை கேட்ட ஐந்தாவது நிமிடமே படத்தில் நடிக்க  முடிவு செய்துவிட்டேன்.  செம்மரம் நம் பாரம்பரிய சொத்து. இதுபற்றி இந்த தலைமுறை தெரிந்துகொள்ள வேண்டும். நிறைய ஆய்வு செய்து இயக்குனர் இந்த கதையை எழுதியிருக்கிறார். படத்தின் நாயகன் வெற்றி நல்ல கதைகளை தேர்வு செய்து நடிப்பவர்.  அவருடன் சேர்ந்து நடிப்பதற்கு இந்த படம் நல்ல வாய்ப்பாக இருந்தது. எம்.எஸ்.பாஸ்கர் சார் இதில் வேற லெவல் நடிப்பை கொடுத்திருக்கிறார். நான் வித்தியாசமான போலீஸ் அதிகாரியாக வருகிறேன். இந்தப் படத்தை பார்த்துவிட்டு வெளியே வரும் மக்கள் மனதை இந்த கதை ஏதோ பண்ணும். அப்படி ஒரு படம் இது” என்றார்.

 

இயக்குனர் வி.இசட். துரை பேசுகையில், ”இந்த மாதிரி கதை எடுக்க; தயாரிக்க ஒரு தைரியம் வேணும். அதற்காக இயக்குனரையும் தயாரிப்பாளரையும் பாராட்டுகிறேன். நாயகன் வெற்றி, என் மனசுக்கு நெருக்கமானவர். இந்த படம் அனைவரும் பாராட்டும் படமாக வரும் என்பதில் சந்தேகமில்லை”என்றார்.

 

இறுதியாக விநியோகஸ்தர்கள் சங்க தலைவர் கே.ராஜன் பேசியபோது, “சினிமா ஒற்றுமை, கட்டுப்பாடுகள் இல்லாத தொழில். கார்பரேட் கம்பெனிகள்தான் இப்போது படம் தயாரிக்கிறது. சிறுபட தயாரிப்பாளர்கள் அழிந்துவிட்டார்கள். தயாரிப்பாளர்களுக்கு அடையாளம் இல்லை; அட்ரஸ் இல்லை. இங்கு கட்டுப்பாடுகள் இருந்தால் சினிமா மிகச்சிறந்த தொழில். இந்தப்படத்தின் டிரைலர் அற்புதமாக இருந்தது. வெற்றி பெறுவதற்கான அத்தனை தகுதிகளும் இந்தப் படத்தில் இருக்கிறது. படம் வெற்றிபெற எனது வாழ்த்துகள்” என்றார்.

 

வணிகர் சங்க சென்னை மாவட்ட தலைவரும் தயாரிப்பாளர் பார்த்தசாரதியின் தந்தையுமான ஜெயபால் பேசுகையில், ”இது புஷ்பா படத்திற்கு முன்பே எடுத்திருக்க வேண்டிய படம். சில காரணங்களால் தள்ளிப் போனது. இந்த படத்தை உயிரை கொடுத்து எடுத்திருக்கிறார்கள். இந்த படத்தை பார்த்துவிட்டு கமர்ஷியலாக ‘காவாலா..’ பாட்டு போல ஒரு பாடலை சேர்க்கச் சொன்னேன்.ஆனால் இந்த கதைக்கு அது தேவையற்றது. இந்தப்படத்தை இப்படித்தான் எடுக்கவேண்டும் என்பதில் இயக்குனர் உறுதியாக இருந்தார். இந்த படத்திற்கு எம்.எஸ்.பாஸ்கரின் நடிப்பு, இதயம் போல இருந்து உயிரை கொடுத்திருக்கிறது” என்றார்.

 

படத்தின் இயக்குநர் குரு ராமானுஜம் பேசுகையில், “2015 ஆண்டு நடந்த உண்மை சம்பவமே இந்தப்படம். என்னை பாதித்த உண்மை சம்பவத்திற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என்று நினைத்தேன். எனது வலி, வேதனை திரைக்கதையாக மாறியது. இந்தக் கதையை எப்படி பண்ணப்போறோம், எந்த நடிகர்களை வைத்து எடுக்கப்போறோம்; எந்த லொகேஷன்களின் படமாக்கப்போறோம் என்பதில் உறுதியாக இருந்தேன். தலைக்கோணம், ரேணிகுண்டா என்று பெரும்பகுதி காடுகளில்தான் எடுத்தோம். அங்கு படப்பிடிப்பு நடத்த அனுமதி வாங்கவே கஷ்டமாக இருந்தது. நிறைய பிரச்சனைகளை சந்தித்துதான் இந்தப் படத்தை எடுத்திருக்கிறோம். கடைசிவரை எனக்கு உறுதுணையாக இருந்த தயாரிப்பாளருக்கு என் நன்றிகள்.

எனது வலியை, வேதனையை  அரசியல் அதிகாரத்தை எதிர்த்து இந்த படத்தின்மூலம் கேள்வி கேட்கிறேன். அதற்கான தீர்வையும் சொல்கிறேன்.  ‘புஷ்பா’ படத்திற்கும் இதற்கும் எந்த தொடர்பும் இருக்காது. இது விசாரணை மாதிரியான படம். இந்த படத்தில் ஒலிப்பதிவை ரசூல் பூக்குட்டி செய்திருக்கிறார். அவர் இந்தபடத்திற்குள் வந்தபிறகு பெரிய படமாக ‘ரெட் சாண்டல் வுட்’ மாறியது. பெரிய நம்பிக்கையை கொடுத்துள்ளது” என்றார்.

 

வணிகர் சங்கத் தலைவர் விக்கிரமராஜா பேசுகையில், “வணிக குடும்பத்தை சார்ந்த ஒருவர் இந்தப்படத்தை எடுத்திருக்கிறார். படத்தின் தயாரிப்பாளரின் தந்தை ஒரு மர வியாபாரி. அவருக்கு மரத்தை பற்றி நன்றாகவே தெரியும். எனவே மரம் சம்பந்தப்பட்ட இந்த படத்தை நன்றாகவே எடுத்திருப்பார்கள். படம் பற்றி இங்கு பேசியவர்களின் பேச்சை கேட்ட போது உருக்கமாக இருந்தது. இளைஞர்களை சுட்டுக்கொன்ற செய்தியே வலியை கொடுத்தது. இயக்குநர் குரு ராமானுஜம் பார்ப்பதற்கு சிறியவர் போல் இருந்தாலும் விவரமான வலிமையான ஆளாக இருக்கிறார். இந்தப்படத்தை வியாபார நோக்கத்திற்காக எடுக்காமல் நாளை இதுபோன்ற சம்பவம் சமூகத்தில் நடக்கக்கூடாது என்ற அக்கறையில் எடுத்திருக்கிறார்கள். ஆனால் வியாபார ரீதியாகவும் இந்தப்படம் வெற்றிபெற வேண்டும். அப்போது தான் தயாரிப்பாளர் அடுத்த படத்தை எடுக்க முன்வருவார். லட்சியத்துடன் படம் எடுத்த இவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். இந்தப்படம் வெற்றிபெற வணிகர் சங்கத்தை சார்ந்தவர்கள் துணை நிற்பார்கள்” என்றார்.