”மாயாஜாலத்தை தொடரும் உதயநிதி ஸ்டாலின்” - உற்சாகத்தில் தயாரிப்பாளர்
நேற்று வெளியான ‘நெஞ்சுக்கு நீதி’ திரைப்படம் விமர்சன ரீதியாக வரவேற்பு பெற்றதோடு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக நேற்றிய சிறப்பு காட்சியிலேயே மிகப்பெரிய ஓப்பனிங் கிடைத்திருப்பது தமிழ் திரையுலகை வியக்க வைத்திருக்கிறது.
இதன் மூலம் படத்தின் இணை தயாரிப்பாளரான ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் உற்சாகமடைந்திருப்பதோடு, தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “நெஞ்சுக்கு நீதி நேர்மறையான விமர்சனங்களுடன் பார்வையாளர்களிடம் மிகப்பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இது எங்களுக்கு பெரும் மகிழ்ச்சியை தந்துள்ளது. ரசிகர்களிடம் வரவேற்பை பெறும் நல்ல ஓப்பனிங் கொண்ட திரைப்படங்கள் நல்ல விமர்சனங்களை பெறாமல் போகலாம் என்ற அனுமானம் எப்போதும் உண்டு, ஆனால் இந்த திரைப்படம் அவற்றை தவறென நிரூபித்துள்ளது. சிறப்பு திரையிடல்கள் ரசிகர்கள் ஆரவாரங்களால் கொண்டாடப்பட்டது. மேலும் பார்வையாளர்கள் மாநிலம் முழுவதும் நேர்மறையான விமர்சனங்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள். படம் திரையரங்குகளில் (தமிழகம் முழுவதும் 247 திரைகளில்) பெரும் வரவேற்பைப் பெற்று வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.
இந்த சிறப்புமிகு திரைப்படத்தில் என்னையும் ஒரு பகுதியாக மாற்றியதற்காக போனி கபூர் சார் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் அவர்களுக்கு நன்றி. தனது இயல்பான மற்றும் சிறப்பான நடிப்பால் பொதுமக்களின் மனதை கவரும் மாயாஜாலத்தை தொடரும் உதயநிதி ஸ்டாலினுக்கு எனது நன்றிகள். அநீதியை சகிக்காத மனிதனாக சமுதாயத்தில் வளர்ந்து வரும் அவருக்கு இத்திரைப்படம் ஒரு சான்றாக நிற்கிறது. ஆரி அர்ஜுனன், தன்யா ரவிச்சந்திரன், ஷிவானி ராஜசேகர் மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தி உள்ளிட்ட ஒட்டுமொத்த நட்சத்திரக் குழுவின் தீவிர முயற்சிகளை பார்வையாளர்கள் கவனித்து அவர்களைப் பாராட்டுவது மகிழ்ச்சி அளிக்கிறது. தொழில்நுட்ப வல்லுநர்கள் இந்தத் திரைப்படத்தின் முதுகெலும்பாக இருந்துள்ளனர், மேலும் திரைப்படத்தின் தரத்தை அதிகரிப்பதில் அவர்களின் அர்ப்பணிப்பு சிறந்த பலனைத் தந்துள்ளது.
தமிழரசன் பச்சமுத்துவின் வலிமையான வசனங்கள் திரையரங்குகளில் பெருத்த கைதட்டலை பெற்று வருகிறது. இந்த திரைப்படத்திற்காக இவ்வளவு அற்புதமான அர்ப்பணிப்புக்காக அவருக்கு நன்றி கூறிக்கொள்கிறேன். எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த மொத்தக்குழுவின் கேப்டன் அருண்ராஜா காமராஜின் அற்புதமான படைப்பு. அவர் தனது தனித்த திறமையால் அற்புதமான திரைப்படத்தை உருவாக்கியுள்ளார். ஒவ்வொரு காட்சியையும் அவர் அக்கறையுடனும் அர்ப்பணிப்புடனும் வளர்த்த விதம் அற்புதமானது. இந்தத் திரைப்படத்தின் வெற்றி எங்களுக்கு மேலும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது, மேலும் ரோமியோ பிக்சர்ஸ் எதிர்காலத்தில் மதிப்புமிக்க தரமான தமிழ்த் திரைப்படங்களை உருவாக்கி, தயாரித்து வழங்கும்.” என்றார்.