Feb 25, 2025 06:38 PM

கோலிவுட்டுக்கு குறிவைக்கும் சேலம் வேங்கை அய்யனார்!

கோலிவுட்டுக்கு குறிவைக்கும் சேலம் வேங்கை அய்யனார்!

தமிழ் சினிமாவில் நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் என புதியவர்களின் வருகை வழக்கமானதாக இருந்தாலும், இதில் சிலர் தங்களது நடிப்பு மற்றும் திரைப்படங்கள் மூலம் எளிதில் கவனம் ஈர்த்து விடுவார்கள். அந்த வகையில், விஜயின் ‘சர்க்கார்’ படத்தில் விஜய் கட்சியின் சார்பில் விவசாய அணியில் இருந்து போட்டியிடும் கதாபாத்திரத்தில் நடித்து நடிகராக கோலிவுட்டில் கால்பதித்தவர் சேலம் வேங்கை அய்யனார்.

 

பேரூராட்சி தலைவராக தொடர்ந்து சுயேட்சையாக வெற்றி பெற்று பொதுமக்களின் ஆதரவை பெற்றுள்ள சேலம் வேங்கை அய்யனார், தற்போது சினிமாவிலும் தனது திறமையை நிரூபிப்பதற்காக முழு வீச்சில் இறங்கியுள்ளார். நடிகராக மட்டும் இன்றி தயாரிப்பாளராகவும் கோலிவுட்டில் தனது பயணத்தை தொடங்கியிருப்பவர், ’கரா’ படத்தில் தாதா வேடத்தில் நடித்து மிரட்டியிருக்கிறார். 

 

மேலும், அம்மா ராஜசேகர் இயக்கத்தில் தெலுங்கில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘தல’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.  இந்த படம் தமிழில் 'வெட்டு' என்ற பெயரில் வெளிவர உள்ளது. இந்தப் படத்தில் காட்டுவாசி சமூகத்தின் தலைவராக நடித்துள்ளார். விஜய் ஆதிராஜ் இயக்கத்தில் 'நொடிக்கு நொடி' படத்தில் வில்லனாக நடித்து வருகிறார்.

 

ஒரு பக்கம் பல படங்களில் நடித்து வந்தாலும், திரைப்பட தயாரிப்பிலும் கவனம் செலுத்தும் வேங்கை அய்யனார், ஸ்ரீ பூவாயி அம்மன் மூவிஸ் நிறுவனம் மூலம் ‘எண்டர் தி டிராகன்’ என்ற படத்தை தயாரித்து வருகிறார். இதில் கதாநாயகனாக ‘8 தோட்டாக்கள்’ வெற்றி நடிக்க, யோகி பாபு, எம்.எஸ்.பாஸ்கர், கஞ்சா கருப்பு உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். பார்த்திபன்.ஜெ இயக்குகிறார். இந்த படத்தில் சேலம் வேங்கை அய்யனார் அரசியல்வாதியாக நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு விரைவில் முடியும் தருவாயில் உள்ளது. 

 

இதைத் தொடர்ந்து 'லில்லி புட்' என்ற பெயரில் புதிய படத்தை விரைவில் தொடங்க உள்ளார். லில்லி புட் என்பது ஒரு வகையான மிருகம், இதை வீட்டில் வைத்து வணங்கினால், நினைத்ததை சாதிக்கும் வல்லமை வரும். இந்தியாவின் மிகமுக்கிய அரசியல்வாதி ஒருவர் வைத்துள்ளதாக நம்பப்படுகிறது. இயக்குநர் அவதார் பிரமாணாடமாக இயக்கவுள்ளார்.  பெரிய கதாநாயகன் ஒருவர் நடிப்பதாக உள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பான் இந்தியா திரைப்படமாக சேலம் வேங்கை அய்யனார் தயாரிக்கிறார்.

 

அரசியலிலும், பொது சேவையிலும் பயணித்துக் கொண்டிருக்கும் நீங்கள் திடீரென்று சினிமாவுக்கு வந்தது ஏன்?  என்ற கேள்விக்கு பதில் அளித்தவர், ”நான் அரசியலில் பயணித்தாலும், சினிமா கலைஞர்களுடன் எனக்கு பல வருடங்களாக தொடர்பு உண்டு. என் ஊரில் ஒவ்வொரு ஆண்டும் கோவில் திருவிழாவின் போது, தமிழ் சினிமா கலைஞர்களை அழைத்து வந்து நிகழ்ச்சி நடத்துவேன், அப்படி எனக்கு நிறைய கலைஞர்கள், இயக்குநர்களுடன் தொடர்பு ஏற்பட்டது. அப்படி தான் விஜயின் ‘சர்க்கார்’ படத்திலும் விவசாயி வேட்பாளராக நடித்தேன். அந்த படத்தில் சிறிய வேடமாக இருந்தாலும், எனது திறை இருப்பை பலர் பாராட்டினார்கள். அதன் பிறகு தொடர்ந்து பல வாய்ப்புகளும் வந்ததால் நடிக்க முடிவு செய்தேன்.” என்றார்.