Aug 17, 2023 04:01 PM

”சமந்தா முகத்தில் சிரிப்பை காண வேண்டும்” - நடிகர் விஜய் தேவரகொண்டா விருப்பம்

”சமந்தா முகத்தில் சிரிப்பை காண வேண்டும்” - நடிகர் விஜய் தேவரகொண்டா விருப்பம்

விஜய் தேவரகொண்டா - சமந்தா நடிப்பில் உருவாகும் பான் இந்தியா காதல் திரைப்படம் ‘குஷி’. சிவ நிர்வானா இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் நவீன் யெர்னேனி மற்றும் ஒய்.ரவிசங்கர் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஹேஷாம் அப்துல் இசையமைத்துள்ளார். முரளி ஒளிப்பதிவு செய்துள்ளார். 

 

வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி வெளியாக உள்ள இப்படத்தின் இசை நிகழ்ச்சி ஐதரபாத்தில் பிரமாண்டமான முறையில் ஆகஸ்ட் 15 ஆம் தேதி நடைபெற்றது. இந்த இசை நிகழ்ச்சியில் பாடகர்கள் ஜாவேத் அலி, சித் ஸ்ரீராம், மஞ்சுஷா,  சின்மயி மற்றும் இசையமைப்பாளர் ஹேஷாம் அப்துல் வஹாப் ஆகியோர் 'குஷி' படத்தில் இடம்பெற்ற அழகான பாடல்களை பாடி அனைவரையும் கவர்ந்தனர். 'குஷி' படத்தின் டைட்டில் பாடலுக்கு விஜய் தேவரகொண்டாவும்- சமந்தாவும் கைகோர்த்து ஒன்றாக நடித்து, நடனமாடி காண்பித்தது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

 

நிகழ்ச்சியில் பேசிய நடிகர் விஜய் தேவரகொண்டா, “இங்கு குஷி இசை நிகழ்ச்சிக்கு வருகை தந்திருக்கும் அனைவருக்கும் மற்றும் தொலைக்காட்சி மற்றும் யூடியூப் இணையதளத்தில் பார்வையிடும் பார்வையாளர்கள் அனைவருக்கும் எனது நன்றி. செப்டம்பர் ஒன்றாம் தேதி அன்று உங்களுக்கு 'குஷி'யாக இருக்க வாழ்த்துக்கள். நீங்கள் உலகின் எந்தப் பகுதியில் இருந்தாலும் நீங்கள் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என எந்த மொழியில் பேசினாலும்.. உங்களுக்கு மகிழ்ச்சியை பரப்ப நாங்கள் வருவோம். உங்களுக்காக ஒரு படத்தை கொடுத்து எவ்வளவு நாளாகிவிட்டது என்று நினைவில்லை. உங்கள் அனைவருக்கும் இது ஒரு சூப்பர் ஹிட்டாக இருந்தாலும், கடந்த ஒரு மாதமாக இந்த படத்தின் பணிகள் குறித்து இயக்குநர் சிவாவிடம் தொடர்ந்து பேசி வருகிறேன். ஒவ்வொரு முறையும் அவர் என்னிடம் அதையே சொல்கிறார், ''செப்டம்பர் ஒன்றாம் தேதி அன்று உங்கள் முகத்தில் ஒரு புன்னகையை நான் பார்க்க வேண்டும் விஜய் தேவரகொண்டா சகோதரரே''. அதை மட்டும் மனதில் வைத்துக் கொண்டு வேலை செய்கிறார். சிவாவுக்கு என் மீது அவ்வளவு அன்பு இருக்கிறது. எவ்வளவு அன்பு இருக்கிறது என்பதை அவர் என்னிடம் சொல்ல விரும்பவில்லை. ஆனால் எனக்குத் தெரியும் செப்டம்பர் ஒன்றாம் தேதி அன்று திரையரங்குகளில் படத்தை பார்க்கும் உங்கள் அனைவருக்கும் இந்தப் படத்தை சிவா எந்த அளவிற்கு ரசித்தார் என்பதை அறிவீர்கள். இந்தப் படத்தின் வெற்றியை என் முகத்தில் பார்க்காமல்.. சமந்தாவின் முகத்தில் பார்க்க வேண்டும்.  

 

இந்தப் படத்திற்காக அவர் எவ்வளவு கஷ்டப்பட்டார் என்பதை சொல்ல முடியாது. ஏப்ரல் மாதம் படத்தை மிகவும் மகிழ்ச்சியுடன் தொடங்கினோம். முக்கிய பகுதியில் படப்பிடிப்பு நிறைவடைந்தது. ஜூலையில் 30 முதல் 35 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்த போது, 'தனக்கு உடல்நிலை சரியில்லை' என்று சமந்தா கூறினார். 'நீ மிகவும் அழகாக இருக்கிறாய்' என நானும், சிவாவும் சமந்தாவிடம் கூறுவது வழக்கம். முதலில் மூன்று நாள் நீடிக்கும் என நினைத்தேன். பிறகு இரண்டு வாரங்களாகும் என்று நினைத்தோம். ஆனால் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. மற்றொரு திரைப்படத்தின் விளம்பர நிகழ்வில் நான் கலந்து கொண்டிருந்த போதுதான் அவரது உடல்நிலை குறித்து அறிந்தேன். ஏனென்றால் கலைஞர்களாகிய நாம் பார்வையாளர்களை சிரிக்க வைக்க வேண்டும். எங்கள் துயரங்களை சொல்ல விரும்பவில்லை. சமந்தா சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால், எங்களுடன் பேசுவதை நிறுத்திவிட்டார். அவர் மிகவும் போராடினார். ஆனால் ஒரு சந்தர்ப்பத்தில் சமந்தா தனது உடல்நிலை குறித்து பேச முன்வந்தார். ஏனெனில் கொரோனா தொற்று பாதிப்பிற்குப் பிறகு பலர் இதே போன்ற உடல்நல பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். நானும் உங்களை போலவே போராடுகிறேன் என்று அவர்களுக்கு தைரியம் அளிக்கும் வகையில் தனது உடல்நிலை குறித்து வெளிப்படுத்தினார் சமந்தா. இன்று நாம் விளம்பர நிகழ்வுகளை முன்னெடுக்கும் போது பலர் வந்து, 'சமந்தா தான் எங்களுக்கு இன்ஸ்பிரேஷன்' என்று கூறுகிறார்கள். அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை பகிர்ந்து கொள்கிறார்கள். அவருக்கு இன்னும் உடல்நிலை சரியில்லை. ஆனால் அவர் இன்று எங்களுக்காக இங்கு வந்து என்னுடன் நடனமாடினார். செப்டம்பர் ஒன்றாம் தேதி சமந்தா முகத்தில் சிரிப்பை காண வேண்டும். மேலும் எங்கள் இயக்குநர் சிவாவிற்கு ஒரு ஹிட் கொடுக்க விரும்புகிறோம். சிவா இந்த திரைக்கதையை 'டியர் காம்ரேட் ' படப்பிடிப்பின் போது சொன்ன போது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஆனால் காதல் கதைகள் வேண்டாம் என்று நான் ஒதுங்கிக் கொண்டிருக்கிறேன்.

 

படப்பிடிப்பில் எத்தனை இடையூறுகள் வந்தாலும் ஒரு நாள் கூட சிவா.. எதற்கும் குறை சொல்லவில்லை. சினிமாவை விரும்பி சிரித்துக் கொண்டே படத்தை ஹிட்டாக்க வேண்டும் என பணியாற்றினார். எங்கள் ஒளிப்பதிவாளர் மிகவும் அர்ப்பணிப்புடன் பணியாற்றி உள்ளார். இசையமைப்பாளர் ஹேஷாம் சூப்பர் ஹிட் இசையை கொடுத்திருக்கிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்திற்கு 'புஷ்பா- தி ரூல்ஸ்' இருக்கிறது. அவர்களுக்கு முழு பணமும் கிடைக்கும்.

 

ஆறு வருடங்களாக இத்துறையில் இருக்கிறேன். நீங்கள் அனைவரும் என்னை மிகவும் நேசிக்கிறீர்கள். என்னுடைய வெற்றி தோல்வியில் என்னை சுற்றி எத்தனை பேர் மாறினாலும்.. நீங்கள் மாறவில்லை. நீங்கள் எப்போதும் என்னிடம் அன்பை காட்டி, என்னுடன் இருக்கிறீர்கள். செப்டம்பர் ஒன்றாம் தேதி உங்கள் அனைவரின் முகத்திலும் புன்னகையை காண விரும்புகிறேன்.” என்றார்.

 

Samantha and Vijay Devarakonda

 

நடிகை சமந்தா பேசுகையில், “படப்பிடிப்பு தருணத்திலேயே இப்படத்தின் பாடல்களைக் கேட்டு 'குஷி' ஆல்பம் மீது காதல் கொண்டேன். பாடல்களை இங்கே நேரலையில் கேட்கும்போது செப்டம்பர் 1ஆம் தேதி உங்கள் அனைவரோடும் சேர்ந்து படத்தை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுகிறது. நீங்கள் அனைவரும் விரும்பும் ஒரு திரைப்படத்தை எப்போதும் உங்களுக்கு வழங்க விரும்புகிறோம். அப்படி ஒரு முயற்சியை இந்த படத்தின் மூலம் செய்துள்ளோம். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பாளர்கள் எனக்கு பிடித்த தயாரிப்பாளர்கள். அவர்களும் எனக்கு பிடித்த மனிதர்கள். கடந்த ஒரு வருடமாக அவர்கள் எனக்கு அளித்து வரும் ஆதரவை என்னால் மறக்க இயலாது. என் திரையுலக பயணத்தில் மறக்க முடியாத படம் 'குஷி'. இதில் நடிக்க வாய்ப்பு கொடுத்த இயக்குநர் சிவ நிர்வானாவிற்கு நன்றி. இசையமைப்பாளர் ஹேஷாமை தெலுங்கு பார்வையாளர்கள் தங்களது சொந்தக்காரர்களைப் போல் காண விரும்புகிறார்கள். 'குஷி' திரைப்படத்தில் மூத்த கலைஞர்கள் பலர் உள்ளனர். அவர்களின் பங்களிப்பு திரைப்படத்தை வலிமையாக்கி இருக்கிறது. நீங்கள் என் மீது காட்டும் அன்பினால் நான் ஆரோக்கியத்துடன் மீண்டு வருவேன். 'குஷி' பிளாக்பஸ்டர் ஹிட் என்பது உறுதி.‌” என்றார்.

 

இயக்குநர் சிவ நிர்வானா பேசுகையில், “திருமணமான தம்பதிகள்... திருமணம் ஆகாதவர்கள்... வாழ்க்கையில் திருமணம் செய்து கொள்ள விரும்பாதவர்கள்... என அனைவரும் 'குஷி' படத்தை பார்த்து தங்கள் காதல் வாழ்க்கையின் நினைவுகளை பகிர்ந்து கொள்வார்கள். படத்தை விரும்பி. பார்த்து விட்டு வீட்டுக்கு வந்த பிறகு ஒருவரை ஒருவர் ஆரத் தழுவி கட்டிப்பிடித்துக் கொள்வார்கள். படம் முழுக்க விஜய் தேவரகொண்டா- சமந்தாவுக்கு பதிலாக, விப்லவ் -ஆராத்யாவை காண்பீர்கள். இது புது கதை என்று சொல்ல மாட்டேன். திருப்பங்கள் இருக்கும். ஆனால் அது உங்கள் இதயத்தை தொடும். எனக்கு திருமணமாகி நான்கு வருடங்களாகிறது. என் மனைவியுடன் காதல், கோபம், சந்தோஷம், சோகம் என எல்லா நேரமும் என்னையும் அறியாமல் இந்த படத்தில் பிரதிபலித்தது. குஷி சிரிக்கவும் வைக்கும். அழவும் வைக்கும். திரையரங்கை விட்டு வெளியே வந்ததும் மீண்டும் இந்த படத்தை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் வரும். எங்கள் படத்தை எந்த பிரச்சினையும் இல்லாமல் முழு குடும்பமும் பார்க்கலாம். படத்தை பார்த்த பிறகு எனக்கு ஒரு நல்ல குடும்பம் இருப்பது போல் உணர்வீர்கள். இந்த கதையை திட்டமிட்டபடி நடக்க எனக்கு கிடைத்த இரண்டு வைரங்கள் தான் விஜய் மற்றும் சமந்தா. அர்ஜுன் ரெட்டி படத்தை பார்த்துவிட்டு விஜயின் தீவிர ரசிகனாகி விட்டேன். விஜய் தேவரகொண்டா மீதான அத்தனை அன்பையும் இந்த படத்தில் வெளிப்படுத்தி இருக்கிறேன். நான் யாருடைய ரசிகன் என்று சொல்லவில்லை. ஆனால் நான் சமந்தாவின் ரசிகன் என்று எந்நாளும் சொல்லிக் கொள்வேன். இரண்டரை மணி நேரம் குஷியை பார்க்க வாருங்கள். உங்களுக்கு எமோஷனல் மற்றும் பொழுதுபோக்கு உத்தரவாதம்.” என்றார்.

 

Vijay Devarakonta and Samantha

 

ஒளிப்பதிவாளர் ஜி. முரளி பேசுகையில், “தெலுங்கில் அந்தல ராட்சசிக்கு பிறகு நான் ஒளிப்பதிவு செய்யும் மற்றொரு காதல் கதை இது. எனது தொழிலில் என்னை ஊக்குவித்த எனது குடும்பத்தினருக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். அவர்களால் தான் நான் இந்த நிலையில் இருக்கிறேன். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்திற்கு நன்றி. ரவி மற்றும் நவீன் போன்ற நல்ல தயாரிப்பாளர்களை முதன் முறையாக பார்க்கிறேன். நான் வேறு வகையான திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்து கொண்டிருந்தேன். இயக்குநர் சிவ நிர்வானா எனக்கு காதல் கதையில் பணிபுரியும் வாய்ப்பை அளித்தார். 'குஷி'யில் ஆராத்யா - விப்லவ் கதாபாத்திரங்கள் விரும்பத்தக்கவை. படம் பார்த்த பிறகு இந்த இரண்டு கதாபாத்திரங்களையும் மறக்க முடியாது. செப்டம்பர் ஒன்றாம் தேதி இந்த படத்தை அனைவரும் ரசிப்பார்கள்.‌” என்றார்.

 

மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி செர்ரி பேசுகையில், “குஷி இசை நிகழ்ச்சியை இவ்வளவு பிரம்மாண்டமாக நடத்துவதில் மகிழ்ச்சி அடைகிறோம். இசையமைப்பாளர் ஹேஷாம் ஒவ்வொரு பாடகர்கள், இசை கலைஞர்களை வரவழைத்து இவ்வளவு நல்ல நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். அருமையான இசையை அளித்த அவருக்கு நன்றி தெரிவிக்கிறேன். விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவான 'டியர் காம்ரேட்' எங்களால் தயாரிக்கப்பட்டது. புஷ்பா படத்தில் சமந்தாவின் ஸ்பெஷல் பாடல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது நீங்கள் அனைவரும் அறிந்ததே. அவர்கள் இருவரும் மீண்டும் எங்கள் தயாரிப்பில் பணியாற்றுவது மகிழ்ச்சி அளிக்கிறது. எங்களுக்காக மறக்க முடியாத படத்தை உருவாக்கிய இயக்குநர் சிவ நிர்வனாவிற்கும் நன்றி. குஷி படத்திற்காக ஏதாவது பெரிய நிகழ்ச்சி நடத்த வேண்டும் என்று நினைத்திருந்தோம். ஒரு இசை நிகழ்ச்சிபாக இருந்தால் நன்றாக இருக்கும் எனவும் நினைத்தோம். இந்நிகழ்வை அனைவரும் ரசிப்பார்கள் என்று நம்புகிறேன்.” என்றார்.

 

இசையமைப்பாளர் ஹேஷாம் அப்துல் வஹாப் பேசுகையில், “குஷி இசை நிகழ்ச்சியை நடத்த உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி. மேலும் இந்த படத்திற்கு அழகான இசையை வழங்க.. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் பட தயாரிப்பாளர்கள் அளித்த ஆதரவை என்னால் மறக்க இயலாது. இந்த படத்தின் இசைக்காக 15 நாட்கள் எடுத்துக்கொண்டோம். நானும், இயக்குநர் சிவாவும் ஹோட்டல் அறையில் அடைந்து கிடந்தோம். குஷியில் காதல் உணர்வுடன் பாடல்கள் மற்றும் பின்னணி இசையமைக்க எனக்கு உத்வேகம் அளித்தவர் என் அன்பு மனைவி ஆயிஷா. இந்த கச்சேரிக்கு எனது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் வருகை தந்திருக்கின்றனர். செப்டம்பர் ஒன்றாம் தேதி திரையரங்குகளில் காதலையும், இசையையும் கொண்டாடுவோம்.” என்றார்.

 

தயாரிப்பாளர் நவீன் யெர்னேனி பேசுகையில், “எங்கள் நிறுவனம் சார்பில் இதுவரை பல நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்துள்ளோம். ஆனால் இவ்வளவு அழகான இசை கச்சேரி நடைபெறவில்லை. விஜய் தேவரகொண்டா எங்கள் தயாரிப்பில் 'டியர் காம்ரேட்' படத்தில் நடித்தார். அந்தப் படம் நாங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. ஆனால் குஷி படத்தின் மீது மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறேன். இந்தப் படம் பெரிய வெற்றி படமாக அமையும். எங்கள் தயாரிப்பில் சமந்தா நடித்த அனைத்து படமும் பிளாக் பஸ்டர் ஹிட்டாகியிருக்கிறது. 'ஜனதா கரேஜ்', 'ரங்கஸ்தலம்', 'புஷ்பா ' போன்ற படங்கள் எவ்வளவு பெரிய வெற்றியை பெற்றன என்பதனை நீங்கள் கண்டிருக்கிறீர்கள். குஷியும் வெற்றிபெறும் என்பதற்கு இதுவே உதாரணம். இவ்வளவு நல்ல படத்தை எங்களுக்கு தந்த இயக்குநர் சிவ நிர்வானாவிற்கு நன்றி. குஷி பட குழுவினர் அனைவருக்கும் நன்றி. செப்டம்பர் ஒன்றாம் தேதி திரையரங்குகளில் எங்களின் திரைப்படத்தை காணலாம்.” என்றார்.

 

Kushi Music Event

 

தயாரிப்பாளர் ஒய். ரவிசங்கர் பேசுகையில், “விஜய் தேவரகொண்டாவும் சமந்தாவும் மீண்டும் எங்கள் நிறுவனத்தில் பணி புரிவது மகிழ்ச்சியை அளிக்கிறது. நாம் ரசித்து தயாரித்த படங்களில் 'குஷி' படம் தான் பெஸ்ட் என்று சொல்ல வேண்டும். இயக்குநர் சிவ நிர்வானா உடன் பயணம் செய்தது மறக்க முடியாத அனுபவம். விரைவில் அவரது இயக்கத்தில் மீண்டும் புதிய படத்தை தயாரிக்க திட்டமிட்டிருக்கிறோம். சமந்தா எங்களுடைய தயாரிப்பில் நடிக்க மாட்டேன் என்று சொல்லவே இல்லை. செப்டம்பர் ஒன்றாம் தேதி திரையரங்குகளில் சந்திப்போம்.” என்றார்.

 

தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள ‘குஷி’ வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.