சமுத்திரக்கனி கதையின் நாயகனாக நடிக்கும் ‘பைலா’!

’ராசய்யா’ படத்தை இயக்கிய இயக்குநர் ராசய்யா கண்ணன், ’கதையல்ல நிஜம்’ திரைப்படத்தை தொடர்ந்து தனது கலா தியேட்டர்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கும் இரண்டாவது படத்திற்கு ‘பைலா’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
இப்படத்தில் கதையின் நாயகனாக வித்தியாசமான கதாபாத்திரத்தில் சமுத்திரக்கனி நடிக்கிறார். அவரது மனைவியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார். தம்பியாக ராஜ்குமார் நடிக்க, அவருக்கு ஜோடியாக இலங்கையைச் சேர்ந்த பிரபல நட்சத்திர நடிகை மிச்சலா நடிக்கிறார். இவர்களுடன் யோகி பாபு, இளவரசு, சிங்கம்புலி, மதுமிதா, விஜய் டிவி ஆண்ட்ரூ, என்.இளங்கோ உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
’சேஸிங்’ படத்தை இயக்கிய K.வீரக்குமார் இப்படத்தின் கதை எழுதி இயக்குகிறார். தயாரிப்பாளர் ராசய்யா கண்ணன் திரைக்கதை எழுத, ’அழகிய தீயே’, ‘மொழி’, ’36 வயதினிலே’, ‘கோட்’ ஆகிய படங்களுக்கு வசனம் எழுதியிருக்கும் இயக்குநர் விஜி வசனம் எழுதியுள்ளார்.
”அய்யோ சாமி..” ஆல்பம் பாடல் புகழ் இலங்கை இசையமைப்பாளர் சனுகா இசையமைக்கும் இப்படத்தின் பாடல்களை இலங்கை புகழ் கவிஞர் பொத்துவில் அஸ்வின் எழுதியிருக்கிறார். பாலுமகேந்திரா, ரத்தினவேல், ஆர்த்தர் ஏ.வில்சன் ஆகியோரிடம் உதவி ஒளிப்பதிவாளராக பணியாற்றிய ஏ.எஸ்.செந்தில்குமார் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். விஜய் தென்னரசு கலை இயக்குநராக பணியாற்ற, திலீப் சுப்புராயன் சண்டைக்காட்சிகளை வடிவமைக்கிறார். தினேஷ் நடனக் காட்சிகளை வடிவமைக்கிறார் நிர்வாக தயாரிப்பாளர் சுகிந்தன் சக்திவேல் கவனிக்க தயாரிப்பு மேற்பார்வை கோகுல்நாத் பணியாற்றுகிறார்.
நீல்கிரிஸ் முருகன் ட்ரீம் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் நீலகிரி முருகன் மற்றும் கே.ஆர்.எம் மூவிஸ் நிறுவனம் சார்பில் கே.ஆர்.முருகானந்தம் இணை தயாரிப்பில் உருவாகும் ‘பைலா’ படத்தின் படப்பிடிப்பு இராமேஸ்வரம், உத்திரகோச மங்கை அம்மன் கோவில், வழி விடு முருகன் கோவில்களில் தொடங்கி, தற்போது இராமேஸ்வரம், இலங்கை ஆகிய இடங்களில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.