பிரபல தெலுங்கு நடிகர் இயக்கத்தில் சமுத்திரக்கனி நடிக்கும் ‘ராமம் ராகவம்’ முதல் பார்வை வெளியீடு!

தெலுங்கு சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர் மற்றும் குணச்சித்திர நடிகராக வலம் வரும் தன்ராஜ் கொரனானி இயக்கத்தில், சமுத்திரக்கனி கதையின் நாயகனாக நடிக்கும் படம் ‘ராமம் ராகவம்’. அப்பா - மகன் உறவை கருவாக கொண்டு உருவாகியுள்ள இப்படத்தில் சமுத்திரக்கனி அப்பா வேடத்திலும், தன்ராஜ் கொரனானி மகன் வேடத்திலும் நடிக்கிறார்கள்.
ஸ்லேட் பென்சில் ஸ்டோரீஸ் நிறுவனம் சார்பில் பிரபாகர் ஆரிபாக வழங்க, ப்ருத்வி போலவரபு தயாரிக்கும் இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகிறது.
ஐதராபாத், ராஜமந்திரி, சென்னை, மதுரை, தேனி, திண்டுக்கல் ஆகிய பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், படத்தின் முதல் பார்வை போஸ்டரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.
‘ராமம் ராகவம்’ என்ற தலைப்பை போல், தற்போது வெளியாகியிருக்கும் முதல் பார்வை போஸ்டரும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.
சிவ பிரசாத் யானல கதை எழுத, மாலி வசனம் எழுதுகிறார். திரைக்கதை எழுதி தன்ராஜ் கொரனாணி இயக்க, துர்கா பிரசாத் கொல்லி ஒளிப்பதிவு செய்கிறார். அருண் சிலுவ்ஃபேறு இசையமைக்க, டெளலூரி நாராயணன் கலை இயக்குநராக பணியாற்றுகிறார். மார்த்தாண்டம் கே.வெங்கடேஷ் படத்தொகுப்பு செய்ய, நட்ராஜ் சண்டைக்காட்சிகளை வடிவமைக்கிறார்.