’80ஸ் பில்டப்’ பட இயக்குநரால் அதிர்ச்சியடைந்த சந்தானம்!
ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா தயாரிப்பில், கல்யாண் இயக்கத்தில் சந்தானம் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘80ஸ் பில்டப்’. இதில் நாயகியாக ப்ரீத்தி நடித்திருக்கிறார். இவர்களுடன் ஆடுகளம் நரேன், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், மொட்டை ராஜேந்திரன், ஆனந்த்ராஜ், இயக்குநர் சுந்தர்ராஜன், தங்கதுரை, சுவாமிநாதன், கும்கி அஷ்வின், சுபாஷினி கண்ணன், சங்கீதா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். ஜேக்கப் ரத்தினராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.
வரும் நவம்பர் 24 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் ஏராளமான திரையுலக பிரமுகர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்டார்கள்.
நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சந்தானம், “நடிகர் சந்தானம் பேசும் போது, “எல்லோருக்குமே வாழ்வில் ஒரு பயம் வரும். அப்படி ஒரு பயம் வரும் போதெல்லாம் என் பின்னால் இருந்து என்னை தாங்கிப் பிடிக்கும் என் ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி. இந்த டைட்டிலை தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா சார் தான் வைத்திருப்பாரோ என்று தோன்றுகிறது. நான் அவரை “அண்ணா” என்று அழைப்பேன். அவரும் என்னை பதிலுக்கு அண்ணா என்று அழைப்பார். கோயமுத்தூர் ஸ்லாங்கில் பேசிக் கொள்வது போல் பேசிக் கொள்வோம். நான் நாள்கணக்கில் கொஞ்சம் அதிகம் சம்பளம் வாங்கிக் கொண்டு இருந்த காலத்தில் என்னை அணுகி, இடம் வாங்கி விட்டீர்களா..? என்று கேட்டார். இல்லை என்றதும் இந்த நாள் கணக்கில் சம்பளம் வாங்குவதை விட்டுவிட்டு மூன்று படங்களுக்கு மொத்தமாக சம்பளம் வாங்கிக் கொள்ளுங்கள். அதில் முதலில் ஒரு இடத்தை வாங்குங்கள்” என்று வழிகாட்டி என்னை முதன்முதலாக இடம் வாங்க வைத்த தயாரிப்பாளர் அவர் தான். தானும் வளர வேண்டும். தன்னுடன் சேர்ந்து மற்றவர்களும் வளர வேண்டும் என்கின்ற நல்லெண்ணம் அவருக்கு உண்டு. ரொம்பவே ஞானம் உள்ள புரொடியூஷர் ஞானவேல்ராஜா. 2024ம் ஆண்டு ஞானவேல்ராஜாவுக்கான ஆண்டு என்று கூறினார்கள். இது எனக்கு முன்பே தெரியும். ஏனென்றால் அவர் எப்படி சிந்திப்பார் என்பதை நான் அறிவேன். என் படங்கள் சரியாக போகாத போது, வீட்டிற்கு வந்து என்னுடன் கலந்தாலோசித்து எனக்கு ஆலோசனைகள் வழங்குவார். அது போல் தனஞ்ஜெயன் சார் தயாரிப்பில் கண்டேன் காதலை படத்தில் நடிக்கும் போது ஒரு கிராமத்து கெட்டப் கொடுத்து ஒட்டு மீசையோடு நடிக்க வைத்தது தனஞ்ஜெயன் சாரின் முடிவு தான். தயாரிப்பாளராக மட்டுமின்றி கதாபாத்திர வடிவமைப்பையும் யோசிக்கும் தனஞ்ஜெயன் உடன் இருக்கும் போது ஸ்டுடியோ க்ரீன் இன்னும் பல உச்சங்களை தொடும் என்று நம்புகிறேன்.
இயக்குநர் கல்யாண் என்னிடம் எப்போதுமே கால்ஷீட் கேட்டுக் கொண்டே இருப்பார். நான் என்னிடம் தேதி இல்லை என்று சொல்லிக் கொண்டே இருப்பேன். அப்படி ஒரு முறை கேட்கும் போது 15 நாள் மட்டுமே எனக்கு ப்ரேக் இருக்கிறது என்று சொன்னேன். உடனே அப்படி என்றால் வாருங்கள் சார் நாம் டாக்கி போர்ஷனை முடித்துவிடுவோம் என்று கூறினார். எனக்கு அதிர்ச்சி ஆகிவிட்டது. எப்படி முடிப்பீர்கள், மீது உள்ளதை எப்போது எடுப்பீர்கள் என்று கேட்டேன். ஒரு படப்பிடிப்புக்கு செல்வதற்கு 20 நாட்கள் முன்பே எப்படி படப்பிடிப்பை நடத்துவது என்று திட்டம் இடுவார்கள். இவர் 20 நாளில் மொத்த படப்பிடிப்பையே எப்படி முடிப்பது என்று திட்டமிடுகிறார். பிக் பாஸ் ஹவுஸை விட எங்கள் படப்பிடிப்பு தளத்தில் அதிக கேமராக்கள் இருக்கும். எல்லோரும் அனகோண்டா முட்டையில் ஆம்லேட் போடுவார்கள் என்றார், இயக்குநர் கல்யாண் அவிச்ச முட்டையில் ஆம்லேட் போட்டுவிடுவார். சாப்பிட்டுக் கொண்டு இருக்கும் போது ஐ போனில் ஒரு குளோஷப் ஷாட் எடுத்துக் கொண்டு போவார். சூட்டிங் ஸ்பாட் டாஸ்மாக் கடையின் முன்புறம் போல் எப்பொழுதும் கூட்டமாகத் தான் இருக்கும். எல்லோரும் கிம்பலை வைத்து படப்பிடிப்பு நடத்துவார்கள். இவர் கும்பலை வைத்துக் கொண்டு தான் படப்பிடிப்பு நடத்துவார். எனக்கே எப்படி இவ்வளவு ஆர்ட்டிஸ்டுகளை வைத்துக் கொண்டு இவ்வளவு வேகமாக படப்பிடிப்பு நடத்துகிறார் என்று ஆச்சரியமாக இருக்கும். என்ன நினைத்தாரோ அதை சிறப்பாக எடுத்து முடித்திருக்கிறார் இயக்குநர் கல்யாண். அவருக்கு மிக உறுதுணையாக இருந்தது ஒளிப்பதிவாளர் ஜேக்கப், நான் வீட்டுக்கு கிளம்புகிறேன் என்றால் என் காரில் ஒரு ரிக்கை கட்டி அனுப்பிவிடுவார்கள். எனக்கு மட்டும் இல்லை. எல்லா ஆர்டிஸ்டையும் ஒரு கேமரா துரத்திக் கொண்டு செல்லும். இசையமைப்பாளர் ஜிப்ரான் உடன் ‘ஓடி ஓடி உழைக்கணும்’ என்கின்ற படத்தில் பணியாற்றினேன். அப்படம் வெளியாகவில்லை. அதில் மிகச்சிறப்பான ஒரு மெலடி பாடலை கொடுத்து இருந்தார். இப்படத்தில் அவரோடு பணியாற்ற முடிந்தது சிறப்பான அனுபவம். படத்தில் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் சார், சுந்தர்ராஜன் சார், முனிஷ்காந்த், கிங்க்ஸ்லி இவர்கள் நால்வரும் ஒரு அணி, ஒரு கிண்டலான வசனம் வரும். அதை சிறப்பாக ரவிக்குமார் சார் செய்திருக்கிறார்.
இயக்குநர் சுந்தர்ராஜன் சார் இறந்த பிணமாக நடித்திருக்கிறார். இறந்த பின் காமெடி செய்யும் கதாபாத்திரம். மனோபாலா சார், மொட்டை ராஜேந்திரன் மற்றும் மன்சூரலிகான் சார் மூவரும் ஒரு கேங். பாட்ஷா படத்தில ரஜினி சாரை கம்பத்துல கட்டி வைச்சி அடிச்ச ஆனந்தராஜ் சாரை காட்டன் புடவை கட்ட வைச்சி காமெடி பண்ணியிருக்காங்க, ஆடுகளம் நரேன் சாரை வேற மாதிரி இந்தப் படத்துல மாத்தி வச்சிருக்காங்க, அதை பார்க்கும் போதே இந்த காமெடி எல்லாம் வொர்கவுட் ஆகும்ங்குற நம்பிக்கை வருது. படத்துல வேலை பார்த்த தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி.
சந்தானம் படம் என்றாலே ஹீரோயின் கிடைக்கவில்லை என்கின்ற நியூஸ் வைரல் ஆகும். ஆனா இந்த படத்துல தமிழ் பேசத் தெரிஞ்ச ராதிகா அழகான ஹீரோயினா கிடைச்சிருக்காங்க… இந்தக் கதைக்குள்ள லவ்வை ரொம்ப அழகா இயக்குநர் கொண்டு வந்திருக்காரு… என் தங்கச்சி கதாபாத்திரத்துல சங்கீதா நடிச்சிருக்காங்க… அவுங்ககிட்ட நான் போடுற ஒரு சவால்ல தான் மொத்த கதையும் மூவ் ஆகும். 80 காலகட்டத்துல எடுக்க வேண்டிய படத்தை இப்ப எடுத்திருக்காங்கன்னு நினைக்காம, 80ஸ்ல நடக்குற ஒரு கதையை 80ஸ் காலகட்டத்துக்கே போயி நாம பாக்குறோம்னு நினைச்சி நீங்க பாத்தீங்கன்னா இந்தப் படம் உங்களுக்கு ரொம்ப பிடிக்கும். குடும்பத்தோடு பாக்கலாம். லாஜிக் இதெல்லாம் தூக்கி ஓரமா வச்சிட்டுப் பாத்தீங்கன்னா இந்தப் படம் குடும் பத்தோட பாத்து குதூகலிக்கிற ஒரு படமா இருக்கும். பத்திரிக்கை நண்பர்கள் இந்தப் படத்திற்கு ஆதரவு தருவீர்கள் என்று நம்புகிறேன். “ என்றார்.
தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் பேசுகையில், “இப்படத்தின் இயக்குநர் கல்யாண் அவர்களை 2015 காலகட்டத்தில் இருந்தே எனக்குத் தெரியும். அவர் வரிசையாக ஆறு படங்களை இயக்கி இருந்தாலும் கூட அவருடைய மொபைல் எண்ணை நான் KSP கல்யாண், அதாவது கதை சொல்லப் போறோம் கல்யாண் என்று தான் பதிவு செய்திருக்கிறேன். அவரது இயக்கத்தில் வந்த படங்களில் எனக்கு கதை சொல்லப் போறோம் திரைப்படம் மிகவும் பிடிக்கும். அதுபோல் ஜாக்பாட், குலேபகாவலி படத்தில் வரும் அந்தப் பாடலை யாரும் மறந்திருக்க மாட்டோம். இயக்குநர் கல்யாணின் காமெடி சென்ஸ் எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் இப்படத்தின் படப்பிடிப்பை 15 நாட்களில் முடித்துவிட்டார், 18 நாட்களில் முடித்துவிட்டார் என்றெல்லாம் பத்திரிக்கைகளில் செய்திகளைப் பார்க்கும் போது பயமாக இருக்கிறது. ஏனென்றால் அவை எதுவும் உண்மையில்லை. ஒரு குறிப்பிட்ட டாக்கி போர்ஷனை மட்டும் அவர் 15 நாட்களில் முடித்தார் என்பதே உண்மை. ஆனால் உண்மையாகவே அவரின் உழைப்பின் வேகம் என்னை பிரமிக்க வைக்கிறது. மல்டி கேமரா செட்டப்பை வைத்துக் கொண்டு இவ்வளவு வேகமாக ஒரு படப்பிடிப்பை முடித்துவிட முடியுமா..? என்று எனக்கு இன்னும் ஆச்சரியமாகவே உள்ளது. இப்பொழுது கல்யாண் இயக்கத்தில் எனக்கும் உங்கள் எல்லோருக்கும் பிடித்த நாயகன் சந்தானத்தை வைத்துக் கொண்டு 80’s பில்டப் படத்தை முடித்திருக்கிறார். எப்பொழுதுமே சந்தானம் பேய்-உடன் முட்டுக் கொடுத்தால் அந்தப் படம் வெற்றி பெற்றுவிடும். இப்படத்தில் அவர் மூன்று ஆவிகளுடன் முட்டுக் கொடுத்து நடித்திருக்கிறார். இது மிகவும் கஷ்டம், இல்லாத ஒன்றை இருப்பது போல் நினைத்துக் கொண்டு நகைச்சுவையாக நடிப்பது சவால் நிறைந்தது. இதை எப்படி இவ்வளவு எளிதாக சந்தானம் செய்து முடிக்கிறார் என்று நான் எப்பொழுதுமே ஆச்சரியப்படுவேன். மேலும் சந்தானம் ஒரு சாவு வீட்டில் இருப்பது போல் அமையும் திரைப்படங்கள் பெரும் வெற்றி பெறும். A1 திரைப்படம் உங்களுக்கு நினைவு இருக்கும். சுமார் 5 வருடங்களுக்கு முன்பாக அப்படத்தை நான் பலாஸோவில் பார்த்தேன். A சென்டர் ஆடியன்ஸ் கூட மிகவும் ரசித்த திரைப்படம் அது. அப்படத்தின் வெற்றியைப் போல் 80’s பில்டப் படத்தின் வெற்றியும் அமையும் என்று நம்புகிறேன். சந்தானம் காமெடியில் கலக்கும் திரைப்படங்கள் எதுவுமே சோடை போனதில்லை. மேலும் பெரும் நட்சத்திரப் பட்டாளமே இப்படத்தில் இருக்கிறது. இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். சின்ன புரட்சி தலைவர் ஆனந்த்ராஜ் ஒரு கவர்ச்சிக் கன்னியாகவே மாறி வளவளப்பான இடுப்பைக் காட்டி வசீகரிக்கிறார். அந்த இடுப்பை பார்க்கும் போதே தொட வேண்டும் போல் இருக்கிறது. இன்னும் பல்வேறு காமெடி நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். படத்தின் கதைப்படி நாயகன் சந்தானம் கமல் ரசிகர், அவரின் தாத்தா ரஜினி ரசிகர் என்று வித்தியாசமாக கதையை அமைத்து அதகளம் செய்திருக்கிறார் இயக்குநர். இப்படம் நவம்பர் 24ல் திரைக்கு வருகிறது. இப்படம் இயக்குநர் கல்யாண் அவர்களுக்கும் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா அவர்களுக்கும் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைய வாழ்த்துகிறேன். படத்தில் நடித்திருக்கும் பிற நடிகர் நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் இசையமைப்பாளர் ஜிப்ரான், பாடலாசிரியர்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இப்படத்தை வாங்கி வெளியிடும் சக்தி பிலிம் ஃபேக்டரி சக்திவேலன் அவர்களுக்கும், இசை உரிமத்தை பெற்றிருக்கும் ஜங்லி மியுசிக் பாஸ்கர் அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.” என்றார்.
இயக்குநர் கல்யாண் பேசுகையில், “இப்படத்தை இயக்குவதற்கு வாய்ப்பு அளித்த ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். நான் நாளைய இயக்குநர் சீசனில் இருந்து வெளிவந்த உடனே ஒரு தயாரிப்பு நிறுவனத்தில் படம் செய்ய வேண்டும் என்று நினைத்தது ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தில் தான். அந்த கனவு இன்று நனவாகி இருக்கிறது. எல்லோருமே நான் வேகமாக படப்பிடிப்பை முடித்து விடுகிறேன் என்று பேசினார்கள். ஆனால் அது என் தனிப்பட்ட ஒருவனால் சாத்தியமான விசயம் அல்ல. என்னோடு பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள், நடிகர் நடிகைகள் அனைவரும் ஒத்துழைத்ததால் தான் சாத்தியமானது. அவர்களுக்கு என் நன்றிகள். நான் இந்தக் கதையை சந்தானம் சாருக்காகவே தான் உருவாக்கினேன். கிட்டத்தட்ட ஒரு வருடம் அவருக்காக காத்திருந்தேன். இடையில் பல்வேறு சிக்கல்கள் வந்தது. இருப்பினும் இப்பொழுது திரைப்படம் முழுமையடைந்து வெளியாக இருக்கிறது. வாய்ப்பளித்த சந்தானம் சாருக்கு நன்றி. பத்திரிக்கை நண்பர்கள் இப்படத்திற்கு ஆதரவு தர வேண்டும்..” என்றார்.
தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா பேசுகையில், “ஆனந்தராஜ் சார் கேட்டுக் கொண்டபடியே கண்டிப்பாக மூத்த கலைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும். எங்கள் நிறுவனத்தில் படம் செய்த இயக்குநர்களை விட நான் அதிகமாக பழகிய இயக்குநர் என்றால் அது கே.எஸ்.ரவிக்குமார் சார் தான். ‘சகுனி’ பட டைட்டில் முதலில் சூர்யா நடிக்கும் ஒரு படத்திற்காக முடிவான டைட்டில். சூர்யாவைக் கொண்டு கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ஒரு படம் தயாரிப்பதற்கான முயற்சி இருந்தது. அப்பொழுது நான் கற்றுக் கொண்ட சினிமா அறிவு மிகப்பெரியது. ஒரு கதை, கதை விவாதத்தில் எப்படி வளருகிறது என்று நான் பார்த்துக் கற்றுக் கொண்டது அவரிடம் தான். சிலருடைய வளர்ச்சி நம்மை பொறாமைபடச் செய்யும், சிலருடைய வளர்ச்சி நம்மை எரிச்சலடையச் செய்யும், இன்னும் சிலரின் வளர்ச்சி நம்மை உண்மையாகவே சந்தோசப்படுத்தும். நடிகர் சந்தானத்தின் வளர்ச்சி அப்படிப்பட்டது. ஆரம்பத்தில் ஜில்லுனு ஒரு காதல் படத்தில் நடிக்கும் போது ஒன்றே முக்கால் இலட்சம் நான் சந்தானத்திற்கு சம்பளமாகக் கொடுத்தேன். அடுத்து 18 இலட்சம், அடுத்து 56 இலட்சம் இன்று 3 கோடி வரை சம்பளமாக கொடுக்கிறேன். 30 கோடி சம்பளமாக கொடுக்கும் இடத்திற்கு அவர் வளர வேண்டும் என்று உண்மையாகவே விரும்புகிறேன். அவருடன் சேர்ந்து நானும் வளர வேண்டும் என்று விரும்புகிறேன். இயக்குநர் கல்யாணைப் பற்றி சொல்ல வேண்டும் என்றால், தயாரிப்பாளரே சற்று மெதுவாக செல்லலாமா..? என்று கேட்கும் அளவிற்கு வேகமாக செல்பவர். திரில்லர் மற்றும் ஆக்சன் படங்கள் வேகமாக எடுத்துவிடலாம். ஆனால் ஒரு காமெடி படத்தினை இவ்வளவு வேகமாக எடுப்பது என்பது மிகப்பெரிய சவால். அதை சிறப்பாக செய்து காட்டியிருக்கிறார். எனக்கே யார் யார் நடிக்கிறார்கள் என்பது ஒரு கட்டம் வரை தெரியாது. ஆடுகளம் நரேன் ஆல் இன் ஆல் அழகுராஜாவில் கலக்கியதைப் போல் இதிலும் கலக்கி இருக்கிறார். விழா நாயகன் ஜிப்ரானுடன் இப்படத்தில் இணைந்திருப்பது மிகவும் மகிழ்ச்சி. இப்பாடல்களை கேட்கும் போது எனக்கு ஆடுகளம் பாடல்கள் நினைவு வருகிறது. எனக்கு படத்தில் தங்கள் முழு ஒத்துழைப்பை கொடுக்கும் தொழில்நுட்பக்கலைஞர்களை மிகவும் பிடிக்கும். அப்படி ஜிப்ரானையும் பிடித்திருக்கிறது. ஒளிப்பதிவாளர் ஜேக்கப்னின் வேகம் கல்யாணின் வேகத்திற்கு இணையானது. அவருக்கும் வாழ்த்துக்கள். இயக்குநர் கெளரவ் இயக்கத்தில் ஹிந்தியில் ஒரு பிரபல நாயகனை வைத்து படம் தயாரிக்க இருக்கிறோம். அது குறித்த அறிவிப்பு விரைவில் வரும். இந்த தகவல் இன்னும் கெளரவிற்கு கூட தெரியாது. படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி.” என்றார்.