சத்யம் சினிமாஸின் ’டூ நாட் டிஸ்டர்ப்’ - இது சினிமா விரும்பிகளுக்காக!
திரைப்படம் தொடங்குவதற்கு சில நிமிடங்கள் முன்பாக தியேட்டருக்கு சென்று சீட்டில் உட்கார்ந்து படம் பார்க்கும் பலர், திரையரங்கில் தங்களுக்கு ஏற்படும் தொந்தரவுகளால் உள்ளுக்குள்ளே நொந்துக் கொள்வார்கள். எந்தவித டிஸ்டப்பன்ஸும் இல்லாமல் படம் பார்க்க விரும்பும் இவர்களிடம், லேட்டாக வரும் நபர் ஒருவர், என் ரோ எங்கிருக்கு, அதில் 16 எண் சீட் எங்கிருக்கு, என்று கேட்டு தொந்தரவு செய்வார்கள்.
இது மட்டுமா, படம் தொடங்கிய சில நிமிடங்களில், பாப் கார்ன் வாங்க செல்லுபவர்கள் இவர்களை மறைப்பதோடு, இவர்கள் கால்களையும் மிதித்து விட்டு சாரி என்று சொல்லி, மேலும் சில நொடிகள் படத்தை மறைத்து தொந்தரவு செய்வார்கள்
இதை விடவும் பெரிய தொந்தரவு, செல்போனில் பேசும் நபர்களால் தான். இப்படி பல தொந்தரவுகளுக்கு இடையே படம் பார்க்க விரும்பாத சினிமா விரும்பிகளுக்காக சத்யம் திரையரங்கம் புது வசதி ஒன்றை ஏற்படுத்தியுள்ளது.
‘டூ நாட் டிஸ்டர்ப்’ என்ற தலைப்பில் சத்யம் திரையரங்கம் தொடங்கியிருக்கும் இந்த சிறப்பு காட்சியில், மேலே சொன்ன எந்த தொந்தரவுகளும் இருக்காது என்பதற்கு, திரையரங்க நிர்வாகம் உத்தரவாதம் கொடுக்கிறது.
ஒவ்வொரு புதன்கிழமையும் திரையிடப்படும் இந்த ‘டூ நாட் டிஸ்டர்ப்’ சிறப்பு காட்சியின் சிறப்பு என்னவென்றால், படம் தொடங்குவதற்கு முன்பாக அனைவரும் இருக்கையில் இருக்க வேண்டும். படம் தொடங்கியவுடன் தியேட்டரின் கதவுகள் மூடப்பட்டுவிடும். படம் தொடங்கி ஒரு நிமிடம் தாமதமாக வந்தால் கூட, அவர்கள் திரையரங்கத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். அதே போல், செல்போன் உள்ளிட்டவை அனுமதியில்லை. மேலும், சிறுவர்கள் மற்றும் குழந்தைகளும் இந்த காட்சியில் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
15 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் இந்த சிறப்பு காட்சியில், எந்தவித தொந்தரவும் இல்லாமல் ஒரு படத்தை முழுமையாக பார்க்கலாம்.