ஒரே நாளில் 19 லொக்கேஷன்களில் படப்பிடிப்பு! - நாயகி டாலி ஐஸ்வர்யாவின் அசத்தல் அறிமுகம்
சினிமாவில் எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் அறிமுகமாவதே பெரிய சாதனையாக இருக்க, நடிகை டாலி ஐஸ்வர்யா, சாதனைக்காக எடுக்கப்பட்டுள்ள திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகிறார்.
மாடலிங் துறையில் 8 வருடங்களுக்கு மேலாக இயங்கிக் கொண்டிருக்கும் டாலி ஐஸ்வரா, விரைவில் வெளியாக இருக்கும் ‘கலைஞர் நகர்’ படம் மூலம் நாயகியாக கோலிவுட்டில் அறிமுகமாகிறார். அதுமட்டும் இன்றி, தனது முதல் படம் வெளியீட்டுக்கு முன்பாகவே மூன்று படங்களில் நடித்து வருகிறார்.
எஸ்.ஆர்.பிலிம் பேக்டரி சார்பில் சிவராஜ் தயாரித்துள்ள ‘கலைஞர் நகர்’ திரைப்படத்தை சுகன் குமார் இயக்கியுள்ளார். நரேஷ் இசையமைத்துள்ளார். இளையராஜா ஒளிப்பதிவு செய்ய, பாபா கென்னடி வசனம் எழுதியுள்ளார்.
பிரஜின் நாயகனாக நடித்திருக்கும் இந்த படத்தில் ‘மிக மிக அவசரம்’ புகழ் பிரியங்கா நாயகியாக நடித்திருக்கிறார். இதே படத்தில் தான் டாலி ஐஸ்வர்யா மற்றொரு நாயகியாக நடித்து தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமாகியிருக்கிறார்.
யுனிவர்சல் ஜீனியஸ் என்ற சாதனைக்காக எடுக்கப்பட்டிருக்கும் இப்படத்தில் நடித்தது குறித்து நடிகை டாலி ஐஸ்வர்யா, தனது நடிப்பு அனுபவம் மற்றும் தனது மற்ற படங்கள் குறித்து கூறுகையில், “நடிப்பு தான் ஆர்வம் என்றாலும் மாடலிங் மூலமாக பயணத்தை ஆரம்பித்து சினிமாவில் நுழைவது தான் சரியாக இருக்கும் என நினைத்தேன். ஏற்கனவே காதலே கோமாளி என்கிற குறும்படத்திலும் நடித்துள்ளேன். கலைஞர் நகர் படப்பிடிப்பு துவங்குவதற்கு முன்னதாக அதில் நடித்த ஒரு நடிகை எதிர்பாராத விபத்தில் சிக்கியதால் படப்பிடிப்பு துவங்குவதற்கு இரண்டு நாட்கள் முன்பு தான் அந்த வாய்ப்பு என்னை தேடி வந்தது. இரண்டாம் நாளே படப்பிடிப்பு, அதுவும் 23 மணி நேரத்தில் எடுக்கப்படுகின்ற சாதனை படத்தில் நடிக்க வேண்டும் என்கிற பிரமிப்பும் படபடப்பும் கொஞ்சம் இருக்கத்தான் செய்தது,
அதேசமயம் முதல் நாளே படத்தின் ஸ்கிரிப்டை படித்ததும் நம்பிக்கை பிறந்தது. படப்பிடிப்பு தளத்தில் ஒரே நாளில் அதுவும் 19 லொக்கேஷன்களில் மாற்றி மாற்றி படப்பிடிப்பு நடைபெற்றது. ஒவ்வொரு லொக்கேஷனுக்கும் மாறுவதற்கு 10 முதல் 15 நிமிட இடைவெளி மட்டுமே இருந்தது.
இந்தப்படம் மேடை நடனக்கலைஞர்களின் வாழ்வாதாரம் மற்றும் சமூகத்தில் அவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை சொல்லும் கதையாக உருவாகி இருக்கிறது, அவர்கள் மீது பலர் கொண்டுள்ள தவறான அபிப்ராயத்தை மாற்றும் படமாக இது இருக்கும். இதில் பிரஜின், பிரியங்கா என நடிப்பு அனுபவம் மிகுந்த இருவருடன் நடித்தது எனக்கு மிகப்பெரிய அனுபவமாக இருந்தது,
ஒரேநாளில் படமாக்கப்பட்டாலும் கூட இந்த படத்தில் இடம்பெறும் திருவிழா காட்சிகள் மிக பிரமாண்டமானதாக இருக்கும். பல துணை நடிகர்கள் பங்கு பெற்ற இந்த திருவிழா காட்சியை இந்த படத்திற்காகவே உருவாக்கினார்கள். படத்தின் இயக்குநர் சுகன் குமார் ஏற்கனவே ‘பிதா’ என்ற குறும்படத்தை 23.23 மணி நேரத்தில் இயக்கி சாதனை செய்தவர். இந்தமுறை முழு நீள திரைப்படத்தை 23 மணி நேரத்தில் ஏழு நிமிடம் முன்னதாகவே படப்பிடிப்பை முடித்து விட்டார்.
யுனிவர்சல் ஜீனியஸ் என்கிற சாதனைக்காக இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. சினிமாவில் எனது அறிமுகமே இப்படி ஒரு சாதனை படம் மூலமாக அமைந்ததில் மகிழ்ச்சி.
இதுதவிர தற்போது இரவின் கண்கள் என்கிற சயின்டிஃபிக் திரில்லர் படத்திலும் ஹேப்பி பர்த்டே ஜூலி என்கிற திரில்லர் மற்றும் கடைசி தோட்டா என்கிற கிரைம் திரில்லர் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறேன். இப்படி ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான ஜானரில் உருவாகி வருகின்றன.
மிகவும் துணிச்சலான கதாபாத்திரங்கள், அதிக வசனம் கொண்ட, நாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதைகள், லவ் மற்றும் திரில்லர் கதையம்சம் கொண்ட படங்களில் நடிப்பதற்கு அதிகம் விரும்புகிறேன்.
சினிமாவில் ஏற்கனவே நிறைய ஐஸ்வர்யாக்கள் இருக்கின்றனர். அதே சமயம் மாடலிங் உலகில் டாலி ஐஸ்வர்யா என்று தான் என்னை பலருக்கும் தெரியும். அதனால சினிமாவிற்கும் அதே பெயரை பயன்படுத்த ஆரம்பித்து விட்டேன்”.என்று தெரிவித்துள்ளார்.