Jul 27, 2022 07:00 AM

வெற்றி, தோல்விகளை எப்படி எதிர்கொள்வது என்பதை கற்றுக்கொண்டேன் - நடிகை ஸ்ருதி ஹாசன்

வெற்றி, தோல்விகளை எப்படி எதிர்கொள்வது என்பதை கற்றுக்கொண்டேன் - நடிகை ஸ்ருதி ஹாசன்

கமல்ஹாசனின் மூத்த மகளான ஸ்ருதி ஹாசன், தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார். முன்னணி நடிகையாக இருந்தவர் திடீரென்று காதல் காரணமாக நடிப்பதை குறைத்துக்கொண்டார். தற்போது மீண்டும் நடிப்பில் தீவிரம் காட்டி வரும் ஸ்ருதி ஹாசன், பிரபாஸ் நடிப்பில் தயாராகி வரும் ’சலார்’ சிரஞ்சீவி நடிக்கும் ’வால்டர் வீரய்யா’ பாலகிருஷ்ணா நடித்து வரும் பெயரிடப்படாத படம் என்று மீண்டும் பிஸியாகியுள்ளார்.

 

இந்த நிலையில், நடிகையாக அறிமுகமாகி 13 வருடங்கள் நிறைவடைந்ததை நினைவு கூர்ந்துள்ள ஸ்ருதி ஹாசன், 14 வது வருடத்தில் மகிழ்ச்சியாகவும், உற்சாகவும் அடியெத்து வைப்பதோடு, வெற்றி, தோல்விகளை எப்படி எதிர்கொள்வது என்பதையும் கற்றுக்கொண்டதாக தெரிவித்துள்ளார்.

 

இது குறித்து ஸ்ருதி ஹாசன் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “திரையுலகில் நடிகையாக அறிமுகமாகி பதிமூன்று ஆண்டுகளை அற்புதமான ஆண்டுகளாக நிறைவு செய்திருக்கிறேன். வாழ்நாள் முழுவதும் ரசிகர்களின் அன்பிற்கும், ஆதரவிற்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். படப்பிடிப்பு தளத்தில் பணியாற்றிக் கொண்டே இந்த பதிமூன்று ஆண்டு நிறைவை உற்சாகத்துடன் கொண்டாடுகிறேன்.

 

என்னுடைய திரையுலக வாழ்க்கை, ஒரு மாயாஜாலமிக்கது. திரைப்படத்தில் நடிப்பேன் என்று ஒருபோதும் நினைக்கவில்லை. ஏதேனும் எனக்கு விருப்பமான துறையில் பணியாற்ற வேண்டும் என்பதுதான் என்னுடைய எண்ணமாக இருந்தது. அதே தருணத்தில் எனக்கு விருப்பமான வேலையை எப்படி நேசிக்க வேண்டும் என்பதையும் கற்றுக் கொண்டேன்.

 

மாயாஜாலம் மிக்கதாக கடந்த பதிமூன்று ஆண்டுகள் கழிந்தது. ஒரே ஒரு படத்தில் தான் நடிப்பேன் என நினைத்திருந்தேன். அதே தருணத்தில் நான் நடிகையாக இருக்க வேண்டும் என்றும் நினைக்கவில்லை. பிறகு அதனை நேசிக்க கற்றுக் கொண்டேன். சினிமா என் வாழ்க்கையில் மிகப்பெரிய மகிழ்ச்சியாக மாறியுள்ளது. இதற்கு நான் உண்மையில் நன்றி உள்ளவளாக இருக்கும் வகையில் வாழ்க்கை என்னை மாற்றி அமைத்திருக்கிறது.

 

வெற்றி, தோல்விகளை எப்படி எதிர்கொள்வது என்பதையும், நம்பிக்கையுடன் எப்படி பணியாற்றுவது என்பதையும், கதைகளை கேட்பதிலும், அதனை தேர்ந்தெடுப்பதிலும் அதிலுள்ள நேர்மறையான விசயங்களை பாராட்டுவது எப்படி என்பதனையும் கற்றுக் கொண்டேன். இதனை இதற்கு முன் கற்றுக் கொண்டதில்லை.

 

எனக்கு கிடைத்து வரும் அன்பு மற்றும் பாராட்டிற்கு நான் மிகவும் நன்றி உள்ளவளாக இருக்கிறேன். பதிமூன்று ஆண்டுகளாக என் மீது மாறாத அன்பு காட்டி வரும் அனைவருக்கும் என்னுடைய பணிவான நன்றி நன்றி நன்றி.” என்று தெரிவித்துள்ளார்.