Dec 14, 2017 03:15 PM

தெலுங்கு படங்களில் நடிக்க ஆசைப்படும் சிபிராஜ்!

தெலுங்கு படங்களில் நடிக்க ஆசைப்படும் சிபிராஜ்!

தெலுங்கில் மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படமான ‘ஷணம்’ படத்தை தமிழில் சிபிராஜ் ‘சத்யா’ என்ற தலைப்பில் ரீமேக் செய்து நடித்துள்ளார். கடந்த வாரம் வெளியான இப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

 

நடிகர் சத்யராஜ் தயாரித்த இப்படத்தை பிரதீப் கிருஷ்ணா இயக்க, வரலட்சுமி சரத்குமார், ரம்யா நம்பீசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.

 

படத்தின் வெற்றியை கொண்டாடும் விதத்தில் இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் ஒட்டுமொத்த படக்குழுவினரோடு, தெலுங் ஷணம் பட ஹீரோ அதிவிசேஷும் கலந்துக் கொண்டார்.

 

நிகழ்ச்சியில் பேசிய சிபிராஜ், “சத்யா திரைப்படத்தின் பத்திரிகையாளர்  ஷோ முடிந்த பின்னர் அனைவரும் என்னுடைய நடிப்பை பற்றியும், படத்தை பற்றியும் என்ன சொல்வார்கள் என்று பயத்தோடு இருந்தேன். அனைவரும் பாசிடிவாக கூறியது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. என்னுடைய நடிப்பை கேலி செய்து படத்தில் ஒரு வசனம் வரும். ஆனால் படத்தை ரசிகர்கள் அனைவரும் பார்த்து முடிக்கும் போது அனைவரும் என்னுடைய நடிப்பை பாராட்டினார்கள். ஒவ்வொரு விமர்சனமும் என்னை ஊக்குவிக்கும் வகையில் இருந்தது. 

தெலுங்கில் ஷணம் படத்தில் எழுதி நடித்த ஆத்விஷேஷ் இங்கு வந்துள்ளார். ஆத்விசேஷ் தெலுங்கில் நடித்த ஷணம் படத்தை நாங்கள் தமிழில் ரீமேக் செய்திருந்தோம். வருங்காலத்தில் அவர் தெலுங்கில் நடிக்கும் படத்தை தமிழில் நான் ரீமேக் செய்யும் ஆவலில் இருக்கிறேன். அதே போல் நான் தமிழில் நடிக்கும் படத்தை அவர் தெலுங்கில் ரீமேக் செய்வேன் என்று கூறியுள்ளார். ஆத்விசேஷும் நானும் தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரு படத்தில் இணைந்து நடிக்கவுள்ளோம். எனக்கும் தெலுங்கில் நடிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. விஜய் அண்ணா ‘சத்யா’ படத்துக்கு நல்ல விமர்சனம் வருவதை பார்த்து என்னை போனில் அழைத்து பாராட்டினார். மிகப்பெரிய நடிகராக இருந்தாலும் விஜய் அண்ணா எப்போதும் இளைஞர்களை ஊக்குவிக்க தவறுவதில்லை.” என்றார்.

 

வரலட்சுமி சரத்குமார் பேசுகையில், “சத்யா திரைப்படத்துக்கு நல்ல விமர்சனங்களை கொடுத்த அனைத்து பத்திரிகையாளர், தொலைக்காட்சி மற்றும் இணையதள நண்பர்களுக்கு நன்றி. சேவ் சக்தி அமைப்பு விஷயமாக தான் நான் முதல்வரை சந்தித்தேன். நான் அரசியலில் இணைய போகிறேனா? என்று அனைவரும் கேட்கிறார்கள். கண்டிப்பாக இப்போது நான் அரசியலில் சேரவில்லை. அப்படி நான் அரசியலுக்கு வரும் போது அதை பற்றி உங்களிடம் தனியாக பிரஸ் மீட் வைத்து தெரிவிக்கிறேன். என்னுடைய தந்தையின் பார்ட்டியில் கூட நான் இணையவில்லை. நான் இப்போதைக்கு சத்யா சக்சஸ் பார்ட்டியில் தான் உள்ளேன். இந்த வருடத்தில் விக்ரம் வேதா, சத்யா என எனக்கு இரண்டு வெற்றி படங்கள் உள்ளது மகிழ்ச்சி.” என்றார்.

 

மற்றும் வெற்றி விழாவுக்கு வந்திருந்த சிறப்பு விருந்தினர், நடிகர், நடிகை மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பேசினார்கள்.