Dec 08, 2020 05:10 PM

டி.ராஜேந்தரால் சிம்புக்கு வந்த புதிய சிக்கல்!

டி.ராஜேந்தரால் சிம்புக்கு வந்த புதிய சிக்கல்!

வம்புகளில் சிக்குவதை தவிர்த்துவிட்டு, திரைப்படங்களை விரைவாக முடித்துக் கொடுப்பதில் கவனம் செலுத்தி வரும் சிம்பு, தற்போது ‘மாநாடு’ படத்தில் நடித்து வருவதோடு, கைவிடப்பட்ட தனது மற்றொரு படத்தையும் விரைவாக முடித்துக் கொடுக்க முடிவு செய்துள்ளார். அதேபோல், தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பதில் தீவிரம் காட்டி வருபவருக்கு ஏராளமான பட வாய்ப்புகளும் வர தொடங்கியதால், அவரது குடும்பமும், ரசிகர்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

 

இதற்கிடையே, நல்ல வழிக்கு திரும்பிய சிம்பு, அவரது தந்தை டி.ராஜேந்தர் மூலம் புதிய சிக்கலில் சிக்கியுள்ளார். அதாவது, கடந்த நவம்பர் 22 ஆம் தேதி நடைபெற்ற தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில், தேனாண்டாள் முரளி தலைமையிலான அணி பெருவாரியாக வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற நிர்வாகிகள் டிசம்பர் 2 ஆம் தேதி பதவி ஏற்றுக் கொண்டனர். 

 

இதே தேர்தலில், டி.ராஜேந்தர் தலைமையில் போட்டியிட்ட அணி கடும் தோல்வியை சந்தித்தது. தோல்வியடைந்த டி.ராஜேந்தர், தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த சிலரை ஒன்று சேர்த்துக் கொண்டு தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் என்ற பெயரில் புதிய சங்கத்தை தொடங்கியுள்ளார். இந்த சங்கத்தில், தனது மகன் சிலம்பரசன் உறுப்பினராக சேர்ந்துள்ளதாக தகவல் வெளியிட்டவர், சங்கத்திற்காக அவர் திரைப்படம் ஒன்றில் நடித்துக் கொடுக்கப் போகிறார், என்ற தகவலும் கசிந்துள்ளது.

 

இந்த நிலையில், புதிதாக பதவி ஏற்றுக் கொண்ட தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகளின் செயற்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட நிலையில், தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன், நடிகர் சிம்பு மீது கொடுத்த புகாரை விசாரிக்கும் தீர்மானம் ஒன்றும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

 

சிம்புவை வைத்து ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ என்ற படத்தை தயாரித்த மைக்கேல் ராயப்பன், அப்படத்தின் மூலம் பெரும் நஷ்ட்டத்தை சந்தித்துள்ளார். மேலும், சிம்பு சரியான ஒத்துழைப்பு கொடுக்காததால் தான், அப்படத்தின் பட்ஜெட் உயர்ந்ததோடு, படத்தின் கதையே மாற்றம் செய்யப்பட்டது என்றும், அதனால் தான் படம் மிகப்பெரிய தோல்வியை தழுவியது என்றும் புகாரில் தெரிவித்தவர், தனக்கு இழப்பீடு வேண்டும், என்று கோரிக்கை வைத்திருந்தார்.

 

அப்போதைய தயாரிப்பாளர் சங்க தலைவராக இருந்த விஷால், இது குறித்து விசாரணை நடத்திய நிலையில், திடீரென்று சங்கத்தில் ஏற்பட்ட சில மாற்றங்களால் இந்த விவகாரம் கிடப்பில் போடப்பட்டது. தற்போது முரளி தலைமையிலான தயாரிப்பாளர் சங்கம் நிர்வாகம், முதல் செயற்குழுவிலேயே இந்த விவகாரத்தை கையில் எடுத்திருப்பதால், நடிகர் சிம்புக்கு பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.