கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘அமரன்’!
நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பில், சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் படத்திற்கு ‘அமரன்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. நடிகர் சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் தலைப்பு மற்றும் முதல் பார்வை போஸ்டரை படக்குழு இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
இந்தப் படத்தை எழுதி இயக்குபவர் ராஜ்குமார் பெரியசாமி. மேஜர் முகுந்த் வரதராஜனின் நிஜ வாழ்க்கை சம்பவங்கள் மற்றும் ராஹுல் சிங் ஷிவ் அரூர் எழுதிய 'இந்தியாஸ் மோஸ்ட் ஃபியர்லெஸ்' தொடரிலிருந்து ஒரு அத்தியாயம் ஆகியவற்றின் அடிப்படையில் இந்தப் படத்தின் கதை அமைந்துள்ளது.
எழுதி-இயக்கும் ராஜ்குமார் பெரியசாமி, நெடிய ஆய்வுகளுக்குப் பிறகு, கவனமாக 'அமரன்' திரைப்படத்தின் கதையை உருவாக்கியிருக்கிறார், இது நிச்சயமாக தமிழ் மற்றும் இந்திய சினிமா வரலாற்றில் ஒரு சாதனையை நிகழ்த்தும்! தமிழ்த் திரை நட்சத்திரமான சிவகார்த்திகேயன், நிஜவாழ்வின் நாயகனான ஒருவரின், தனித்துவமிக்க கதாபாத்திரத்தை ஏற்று, அட்டகாசமான நடிப்பை வழங்கியிருக்கிறார். மேலும், மிகுந்த திறமைசாலியான சாய் பல்லவியுடன் அவர் இணைந்து நடித்திருக்கிறார். சாய் பல்லவி, இந்தப் படத்திற்கு இன்னொரு புதிய பரிமாணத்தை அளித்திருக்கிறார்.
’அமரன்’ திரைப்படத்தில் மிகச்சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்களிப்பு உள்ளது. இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், தயாரிப்பு வடிவமைப்பாளர் ராஜீவன், ஒளிப்பதிவாளர் சி.ஹெச்.சாய், படத்தொகுப்பாளர் ஆர்.கலைவாணன், சண்டைக்காட்சி இயக்குனர் ஸ்டீஃபன் ரிச்டர், உடை வடிவமைப்பாளர்கள் அம்ரிதா ராம் மற்றும் சமீரா சனீஷ் ஆகியோர் தொழில்நுட்பக் குழுவில் இடம்பெற்றுள்ளார்கள்.
ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷ்னல் சார்பில் கமல்ஹாசன், சோனி பிக்சர்ஸ் இண்டர்நேசனல் புரொடக்ஷன்ஸ் மற்றும் ஆர்,மகேந்திரன் ஆகியோர் தயாரிக்க, இவர்களுடன் இணை-தயாரிப்பாளராக வக்கில் கானின் காட் ப்ளஸ் எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் இணைகிறது.
சோனி பிக்சர்ஸ் இண்டர்நேசனல் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தெலுகு திரையுலகில் தங்கள் முதல் தயாரிப்பான 'மேஜர்' மூலம் மிகுந்த புகழ்பெற்றவர்கள்,இப்போது 'அமரன்' திரைப்படத்தின் மூலமாக தமிழ்த் திரையுலகில் நுழைகிறார்கள். இந்தப் படமும் இந்தியாவையும் அதன் கதாநாயகர்களையும் கொண்டாடும் விதமாக அமைந்து, உலகெங்கும் சினிமா ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமே இல்லை.
RKFI நிறுவனத்தின் 50-வது படமான 'விக்ரம்' 2022-ஆம் ஆண்டு, திரையுலகில் சூறாவளியாக நுழைந்து, மாபெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, அவர்களின் 51-வது முயற்சியான 'அமரன்' திரைப்படமும் வெற்றிகரமானதாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.