’வேலைக்காரன்’ படத்தின் ஹீரோ நான் அல்ல - சிவகார்த்திகேயன்
மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ள ‘வேலைக்காரன்’ படம் அட்வான்ஸ் டிக்கெட் புக்கிங்கிலேயே பெரிய சாதனையை படைத்துள்ளது.
இந்த நிலையில், படம் குறித்து பேசிய சிவகார்த்திகேயன், “அதிர்ஷ்டம் வாய்ப்புகள் தரலாம், ஆனால் கடும் உழைப்பு மட்டுமே வெற்றியை தரும் என்பதை நம்புபவன் நான். 'வேலைக்காரன்' படம் எனக்கு கிடைத்தது ஒரு அதிர்ஷ்டம். மோகன் ராஜா சாரின் இந்த அற்புதமான கதையில் வெற்றி பெற கூடுதல் உழைப்பு போட்டுள்ளேன். 'வேலைக்காரன்' படத்தின் ஹீரோ கதைதான். இந்த ஹீரோவுக்கு ஈடு கொடுக்க நான் உள்ளிட்ட எல்லா நடிகர்களும், அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் உழைத்துள்ளோம். எந்த ஒரு சமுதாயத்துக்கும் இதய துடிப்பாக இருக்கும் உழைக்கும் வர்கத்தை பற்றிய படம் இது. எல்லோரின் வாழ்விலும் நடக்கும் நிகழ்வுகள் தான் இந்த படம்.
இந்த படத்தின் ஒவ்வொரு நடிகரும், தொழில்நுட்ப கலைஞரும் தங்களது பெஸ்டுக்கும் மேல் தந்துள்ளனர். இது போன்ற அணியுடன் பணிபுரிந்தது எனது அதிர்ஷ்டம். தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா அவர்களின் ஆதரவு, ஊக்கம், கனவு மற்றும் இயக்குநர் மோகன் ராஜா சாரின் கதை, எழுத்து மற்றும் அதை படமாக்கியுள்ள விதமே 'வேலைக்காரன்' படத்தை இவ்வளவு சிறப்பாகியுள்ளது. தமிழ் சினிமா ரசிகர்கள் 'வேலைக்காரன்' படத்தை ரசித்து, கொண்டாடி பாராட்டுவார்கள் என நம்புகிறேன்.” என்றார்.