கொரோனா பாதிப்பால் சூர்யா பட தயாரிப்பாளர் மரணம்!
இந்தியாவில் கொரோனாவின் இரண்டாம் அலை கோரதாண்டவம் ஆடி வருகிறது. கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனைகளில் போதிய படுக்கை, மருந்து, ஆக்சிஜன் வசதிகள் இல்லை, என்ற குற்றச்சாட்டு எழுந்த நிலையில், தற்போது பிணங்களை அடக்கம் செய்ய சுடுகாடுகளில் இடம் இல்லை, என்ற நிலை உருவாகியுள்ளது.
இதற்கிடையே, தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த புதிய அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியிருந்தாலும், கொரோனவால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும், திரையுலக பிரபலங்கள் பலர் கொரோனாவால் பாதிக்கப்படுவதோடு, உயிரிழக்கும் சம்பவங்களும் தொடர்ந்து அதிகரிப்பதால் தமிழ் திரையுலகினர் பெரும் அச்சமடைந்துள்ளனர்.
இயக்குநர்கள் தாமிரா, கே.வி.ஆனந்த், நடிகர்கள் பாண்டு, ஜோக்கர் துளசி ஆகியோர் கொரோனாவால் பலியான நிலையில், சூர்யாவின் ‘கஜினி’ உள்ளிட்ட பல திரைப்படங்களை தயாரித்த தயாரிப்பாளர் சேலம் சந்திரசேகர், கொரோனவால் பாதிக்கப்பட்டு பலியாகியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பரத் நடித்த ’பிப்ரவரி 14’, ‘கில்லாடி’, சூர்யா நடித்த ‘கஜினி’, தனுஷ் நடித்த ‘சுள்ளான்’, விஜயகாந்த் நடித்த ‘சபரி’ உள்ளிட்ட பல படங்களை தயாரித்திருக்கும் தயாரிப்பாளர் சேலம் சந்திரசேகர், கொரோனவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.