Feb 07, 2023 04:22 PM

’டாடா’ தமிழ் சினிமாவில் என் சிறந்த தொடக்கமாக இருக்கும் - நாயகி அபரணா தாஸ் நம்பிக்கை

’டாடா’ தமிழ் சினிமாவில் என் சிறந்த தொடக்கமாக இருக்கும் - நாயகி அபரணா தாஸ் நம்பிக்கை

ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் எஸ்.அம்பேத் குமார் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் கணேஷ் கே.பாபு இயக்கத்தில் கவின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘டாடா’. இப்படத்தில் நாயகியாக ‘மாஸ்டர்’ படத்தில் நடித்த அபர்ணா தாஸ் அறிமுகமாகிறார். இவர்களுடன் கே.பாக்யராஜ், விடிவி கணேஷ், பிரதீப் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

 

வரும் பிப்ரவரி 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

 

இந்த நிலையில், படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா பொதுமக்கள் முன்னிலையில் சமீபத்தில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர்கள் கலந்துக்கொண்டதோடு, திரையிடப்பட்ட பாடல்கள் மற்றும் டிரைலரை மக்கள் வெகுவாக பாராட்டினார்கள்.

 

கதாநாயகி அபர்ணாதாஸ் பேசுகயில்,, “கதாநாயகியாக நான் நடித்த முதல் தமிழ்ப் படம் இது என்பதால் எனக்கு எமோஷனலாக இருக்கிறது. கேரளாவுக்கு வந்து கதை சொன்னதில் இருந்து படம் முடியும் வரை எனக்கு உறுதுணையாக நின்ற என் இயக்குநர் கணேஷூக்கு நன்றி. என்னை இயக்குநரிடம் அறிமுகப்படுத்தியது கவின் தான். கவின் இல்லை என்றால் இந்தப் படத்தில் நான் இல்லை. தமிழ் சினிமால் இது என் சிறந்த தொடக்கமாக இருக்கும்” என்றார்.  

 

படத்தின் இசையமைப்பாளர் ஜென் மார்ட்டின் பேசுகையில், “டாடா’ திரைப்படம் ஒரு ஃபேமிலி எண்டர்டெயினர். இந்தப் படத்தில் நிறைய குழந்தைகள் நடித்துள்ளனர். அதனால் இந்தப் படம் அனைத்து வயதினரையும் கவரும் வகையில் இருக்கும். ’டாடா’ உருவாக காரணமாக இருந்த தயாரிப்பாளர் அம்பேத் குமார் சார் மற்றும் உதயநிதி சார் இருவருக்கும் நன்றி. எல்லாரும் இந்த படத்தைப் பார்த்து ஆதரவு தரவேண்டும்” என்றார். 

 

Dada

 

நடிகர் கவின் பேசுகையில், ”நான்கு வருடங்களாக ‘டாடா’ படத்திற்காக நாங்கள் திட்டமிட்டோம். இத்தனை வருடங்களும் நாங்கள் இந்தப் படம் சிறப்பாக வரவேண்டும் என்றுதான் உழைத்தோம். பிரதீப், பாலு நாங்கள் அனைவருமே கல்லூரி காலத்தில் இருந்தே நண்பர்கள். என் மேல் அவர் வைத்திருந்த நம்பிக்கைதான் இவ்வளவு தூரம் படத்தைக் கொண்டு வந்துள்ளது. எனக்குத் தெரிந்த பாபு இவ்வளவு மெச்சூர்டான கண்டெண்ட் யோசிப்பானா என்பது தெரியாது. எங்கள் கதை மீது நம்பிக்கை வைத்த தயாரிப்பாளர் அம்பேத் சாருக்கு நன்றி. ஜென் மார்ட்டின் அருமையான இசையைக் கொடுத்துள்ளார். எழில் பிரதரும் சிறப்பான அவுட்புட்டைக் கொடுத்துள்ளார். இந்தக் கதாபாத்திரத்தை ஒத்துக் கொண்ட அபர்ணா தாஸூக்கு நன்றி. அபர்ணாவை நான் முதன் முதலில் ‘பீஸ்ட்’ செட்டில் தான் பார்த்தேன். கதை மேல் இருந்த நம்பிக்கை அவர் மேலேயும் இருந்தது. சிறப்பாக நடித்துக் கொடுத்துள்ளார்.  படத்தில் நடித்துள்ள என் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. ஹரிஷ் கதாபாத்திரம் அனைவராலும் கவனிக்கப்பட்டு நிச்சயம் பாராட்டப்படும். விடிவி சார் போர்ஷன்ஸ் அனைவராலும் ரசிக்கப்படும். ரெட் ஜெயண்ட் மூவீஸ் இந்தப் படத்தை ஒத்துக் கொண்டதற்கு நன்றி. ’டாடா’ திரைப்படம் பிப்ரவரி 10ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. அனைவரும் திரையரங்குகளில் வந்து படத்தைப் பார்த்து உங்கள் ஆதரவைக் கொடுக்க வேண்டும்”. என்றார்.

 

இயக்குநர் கணேஷ் கே பாபு பேசுகையில், “கவின் மற்றும் அபர்ணா இருவருமே தங்களை முழுமையாக ஒப்படைத்து இந்தப் படத்தைக் கொடுத்துள்ளனர். இவர்கள் இடத்தில் வேறு எந்த நடிகர் இருந்தாலும் இவர்கள் அளவிற்கு நடித்திருப்பார்களா என்பது சந்தேகம்தான். கவினுக்கு என்னுடைய நன்றி. தமிழ் சினிமாவில் 2023-ல்  சிறந்த நடிகராக கவின் இருப்பார். அபர்ணா அவருடைய அறிமுகத்துக்காக நிறைய விருதுகள் வாங்குவார். பொதுவாக ரெட்ஜெயண்ட் மூவிஸ் அனைத்துப் படங்களையும் வாங்க மாட்டார்கள். ஆனால், அவர்கள் இதில் ஆர்வம் காட்டி வாங்கியதில் மகிழ்ச்சி. தயாரிப்பாளர் அம்பேத் குமார் சார் இந்தப் படத்தை முழுமையாக எடுத்து வந்ததற்கு அவருக்கு நன்றி” என்றார்.