’கொன்றால் பாவம்’ படம் வெளியான பிறகு தமிழ் சினிமாவும் வரலட்சுமியை கொண்டாடும் - படக்குழு நம்பிக்கை
கதாநாயகி, வில்லி, குணச்சித்திர வேடம் என்று நடிப்பில் மிரட்டி வரும் வரலட்சுமி சரத்குமார் தமிழ்ப் படங்களை விட அதிகமான தெலுங்குப் படங்களில் நடித்து வருகிறார். தற்போது தமிழில் ‘கொன்றால் பாவம்’ என்ற படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் கதையின் நாயகியாக நடித்திருக்கிறார். பிரபல கன்னட இயக்குநரும் தயாரிப்பாளருமான தயாள் பத்மநாபன் இயக்கியிருக்கும் இப்படம் வெளியான பிறகு தமிழ் திரையுலகினரும் வரலட்சுமி சரத்குமாரை கொண்டாடுவார்கள், என்று படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
தமிழை தாய்மொழியாக கொண்ட இயக்குநர் தயாள் பத்மநாபன், கன்னட சினிமாவில் சுமார் 20 திரைப்படங்களை இயக்கியிருப்பதோடு, 8 திரைப்படங்களை தயாரித்தும் இருக்கிறார். இவர் பிரபல கன்னட நாடகத்தின் உரிமையை வாங்கி இயக்கிய ’கரால ராத்திரி’ என்ற திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதோடு, சிறந்த இயக்குநர், சிறந்த துணை நடிகை மற்றும் சிறந்த படத்திற்கான கர்நாடக மாநில விருதுகளை வென்றது. மேலும், இதே படத்தை தெலுங்கில் ரீமேக் செய்து தெலுங்கு சினிமாவிலும் வெற்றி இயக்குநராக வலம் வருபவர், தற்போது தனது தாய்மொழியான தமிழில் இதே படத்தை ரீமேக் செய்து இயக்குநராக அறிமுகமாகிறார்.
1981-களில் நடக்கும் க்ளாஸிக் கிரைம் திரில்லர் கதையான இதில் வரலட்சுமி சரத்குமார், சந்தோஷ் பிரதாப், சார்லி, ஈஸ்வரி ராவ் ஆகிய நான்கு பேரும் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். கன்னடம், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் மிகப்பெரிய வெற்றி பெற்றிருக்கும் இந்த கதை தமிழில் சில மாற்றங்களுடனும், மிகப்பெரிய பொருட்ச் செலவிலும் தயாரிக்கப்பட்டுள்ளது.
படப்பிடிப்பு முடிவடைந்து பின்னணி வேலைகள் முழு வீச்சில் நடைபெற்று வரும் ‘கொன்றால் பாவம்’ திரைப்படத்தை மார்ச் மாதம் திரையரங்குகளில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ள நிலையில், நடிகை வரலட்சுமி சரத்குமார், நடிகர் சந்தோஷ் பிரதாப், இயக்குநர் தயாள் பத்மநாபன் மற்றும் தயாரிப்பாளர்கள் சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்து படம் குறித்து பகிர்ந்துக்கொண்டார்கள்.
படம் குறித்து இயக்குநர் தயாள் பத்மநாபன் கூறுகையில், “தமிழில் எனக்கு இது தான் முதல் படம், ஆனால் கன்னடத்தில் நான் 20 படங்களை இயக்கியிருக்கிறேன், 8 படங்களை தயாரித்திருக்கிறேன். என் தாய்மொழியான தமிழில் இயக்குநராக அறிமுகமாவதற்கு சரியான கதைக்காக காத்திருந்தேன், அந்த கதை தான் ‘கொன்றால் பாவம்’. உலக அளவிலான ஒரு சஸ்பென்ஸ் திரில்லர் கதை இது. இதை பல வடிவங்களில் பல எழுத்தாளர்கள் எழுதியிருக்கிறார்கள். அப்படி கன்னடத்தில் வெளியான நாடகத்தின் உரிமையை பெற்று அதை திரைப்படமாக நான் எடுத்தேன். அங்கு பெரிய வெற்றி பெற்றது. பிறகு தமிழ் மற்றும் தெலுங்கில் ரீமேக் செய்ய திட்டமிட்டேன், ஆனால் அது நடக்கவில்லை. அதனால் தெலுங்கில் மட்டும் எடுத்தேன், அங்கேயும் பெரிய வெற்றி பெற்றது. இப்போது தான் தமிழில் எடுக்க முடிந்தது. கன்னடம் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளை விட தமிழில் இந்த படத்தை மிகப்பெரிய அளவில் எடுத்திருக்கிறோம். தமிழுக்கு ஏற்றபடி சில மாற்றங்களை செய்திருப்பதோடு, பட்ஜெட் ரீதியாகவும் மிகப்பெரிய அளவில் படத்தை உருவாக்கியிருக்கிறோம்.
ஒரு இரவில், ஒரு வீட்டில் நடக்கும் சம்பவம் தான் கதை. பொதுவாக சஸ்பென்ஸ் த்ரில்லர் படம் என்றால் வழக்கமான ஒரு ஃபார்முலா இருக்கும். ஆனால், அப்படிப்பட்ட வழக்கமான ஃபார்முலா எதுவும் இல்லாத ஒரு சஸ்பென்ஸ் திரில்லர் படம் தான் ‘கொன்றால் பாவம்’. 1981-களில் நடக்கும் க்ளாஸிக் கிரைம் திரில்லர் கதை தான் படம். இந்த படத்தில் வரலட்சுமி சரத்குமார் நடிக்க வேண்டும் என்பது கதை எழுதும் போதே முடிவு செய்து விட்டேன். அவருடன் சந்தோஷ் பிரதாப், சார்லி, ஈஸ்வரி ராவ் என அனைத்து கதாபாத்திரங்களும் படத்தில் முக்கிய பங்கு வகிக்கும். இந்த படம் நிச்சயம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அதே சமயம், இந்த படம் வெளியான பிறகு வரலட்சுமி சரத்குமாரை தமிழ் திரையுலகினரும் கொண்டாடுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.” என்றார்.
நடிகை வரலட்சுமி சரத்குமார் பேசுகையில், “படத்தின் டிரைலரை பார்த்தாலே இந்த படம் எப்படிப்பட்ட படம் என்பது புரிந்துவிடும். அதே சமயம், டிரைலர் பல கேள்விகளை எழுப்பும். நீங்கள் எதை எல்லாம் யூகிக்கிறீர்களோ அது படத்தில் வேறு மாதிரியாக இருக்கும், அது தான் படத்தின் சிறப்பம்சம். கதாநாயகியாக நடிக்க வில்லையே ஏன்? என்று என்னிடம் அடிக்கடி கேட்பீர்கள், அதற்கு பதில் இந்த படம் தான். இந்த படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறேன். மிகவும் பலம் வாய்ந்த கதாபாத்திரம், நிச்சயம் அனைவருக்கும் பிடிக்கும்.
தமிழ்ப் படங்களை விட தெலுங்குப் படங்களில் அதிகம் நடிப்பதற்கு காரணம், அங்கு எனக்கு கிடைக்கும் மரியாதை தான். அங்கு ஒரு படத்தில் நான் நடித்தால் அந்த படம் வெற்றி பெறும் என்று நம்புகிறார்கள், எனக்கான அங்கீகாரம், வரவேற்பு அதிகமாக கிடைக்கிறது, அதனால் தெலுங்கில் அதிகம் படம் நடிக்கிறேன். விஜயின் ‘சர்க்கார்’ படத்திற்குப் பிறகு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய இடத்தை பிடிப்பேன் என்று சொன்னார்கள், ஆனால் அதன் பிறகு சரியான வாய்ப்புகள் எனக்கு வரவில்லை, அது ஏன் என்று தெரியவில்லை. ஆனால், தெலுங்கு சினிமாவில் நான் நடித்த படங்கள் தொடர்ந்து வெற்றி பெறுவதோடு, முன்னணி நடிகர்களின் படங்களில் அவர்களுக்கு இணையான வேடம் கொடுக்கிறார்கள், அதனால் தொடர்ந்து அங்கு நடிக்கிறேன்.
தமிழ் திரையுலகினரை நான் குறை சொல்லவில்லை, ஆனால் எனக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்பது உண்மை தான். அந்த அங்கீகாரத்தை ‘கொன்றால் பாவம்’ படம் பெற்று தரும் என்று நம்புகிறேன். தயாள் பத்மநாபன் சார் இந்த படத்தை இயக்கிய விதம், மற்ற நடிகர்களை கையாண்ட விதம் என அனைத்தும் புதிதாக இருந்தது. படம் நிச்சயம் அனைத்து தரப்பினருக்கும் பிடிக்கும்.” என்றார்.
நடிகர் சந்தோஷ் பிரதாப் படம் குறித்து கூறுகையில், “வரலட்சுமி சரத்குமாருக்கு இருக்கும் அதே வருத்தம் எனக்கும் இருக்கிறது. சார்பட்டா பரமப்ரை படத்திற்கு பிறகு நான் எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதற்கு மேல் என்னதான் செய்ய வேண்டும் என்ற எண்ணம் வந்தது. அப்போது தான் எனக்கு இந்த ‘கொன்றால் பாவம்’ படத்தின் வாய்ப்பு வந்தது. பொதுவாக நடிகர்கள் சில கதாபாத்திரங்களையோ, படங்களையோ எதிர்பார்ப்பார்கள் அல்லவா, அப்படிப்பட்ட ஒரு படம் தான் ‘கொன்றால் பாவம்’. நிச்சயம் எனக்கும் இந்த படம் திருப்புமுனையாக இருக்கும்.” என்றார்.
ஐந்பேஃக் ஸ்டுடியோஸ் சார்பில் ப்ரதாப் கிருஷ்ணா மற்றும் மனோஜ் குமார் இணைந்து தயாரித்திருக்கும் ‘கொன்றால் பாவம்’ படத்தின் பின்னணி வேலைகள் வேகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், படத்தை பார்த்த சில நிறுவனங்கள் படத்தை வெளியிட விருப்பம் தெரிவித்துள்ளதாம். அதேபோல், சில தொலைக்காட்சி நிறுவனங்களும் வெளியீட்டுக்கு முன்பாகவே படத்தின் உரிமையை வாங்க முன் வந்திருக்கிறதாம்.
முன்னணி நடிகர்களின் படங்களைப் போல் ‘கொன்றால் பாவம்’ படத்திற்கும் வெளியீட்டுக்கு முன்பே வியாபாரம் தொடர்பாக பலர் படக்குழுவினரை அனுகி வருவதால் படக்குழுவினர் உற்சாகமடைந்துள்ளனர்.
விரைவில் பிரமாண்ட விழா மூலம் டிரைலரை வெளியிட இருக்கும் படக்குழுவினர் படத்தின் விளம்பர பணிகளையும் பிரமாண்டமான முறையில் மேற்கொள்ள இருக்கிறார்களாம்.