மிரள வைக்கும் ஆக்ஷன் காட்சிகள்! - ’மிஷன் - சாப்டர் 1’ படம் மூலம் மீண்டும் கவனம் ஈர்த்த ஸ்டண்ட் சில்வா

தமிழ் சினிமா மட்டும் இன்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, சிங்களம் உள்ளிட்ட பல்வேறு மொழி திரைப்படங்களில் ஸ்டண்ட் இயக்குநராக பணியாற்றி முன்னணி ஸ்டண்ட் இயக்குநராக வலம் வரும் ஸ்டண்ட் சில்வா, தனது ஒவ்வொரு படத்திலும் சண்டைக்காட்சிகளின் மூலம் கவனம் ஈர்த்து வருகிறார். விஜய், அஜித் உள்ளிட்ட தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் மட்டும் இன்றி தெலுங்கு உள்ளிட்ட பிற மொழி திரையுலகின் முன்னணி நடிகர்கள் விரும்பும் ஸ்டண்ட் இயக்குநரான ஸ்டண்ட் சில்வா, இந்த ஆண்டின் துவக்கத்திலேயே தனது மிரள வைக்கும் ஆக்ஷன் காட்சிகளின் மூலம் மீண்டும் இந்திய திரையுலகின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்துள்ளார்.
இயக்குநர் விஜய் இயக்கத்தில், அருண் விஜய் நடிப்பில், லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் பொங்கல் வெளியீடாக கடந்த ஜனவரி 12 ஆம் தேதி வெளியான ‘மிஷன் - சாப்டர் 1’ திரைப்படம் கடும் போட்டியை சந்தித்தாலும், அப்படத்தில் இடம்பெற்ற சண்டைக்காட்சிகள் அப்படத்தை முதலிடத்தில் உட்கார வைத்துவிட்டது. காரணம், முழுக்க முழுக்க ஒரு சிறைச்சாலையில் நடக்கும் மோதலை மையமாக வைத்தே அப்படத்தின் திரைக்கதை அமைந்திருந்ததால், சண்டைக்காட்சிகளில் அதிரடி உணர்வு மட்டும் இன்றி பயம், தைரியம், தடுமாற்றம், பரபரப்பு உள்ளிட்ட பல்வேறு உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டிய சவாலை ஸ்டண்ட் சில்வா மிக சாமர்த்தியமாக செய்துக்காட்டியது தான்.
படத்தின் நாயகன் அருண் விஜய் மட்டும் இன்றி சிறை அதிகாரியாக நடித்த நாயகி எமி ஜாக்சன் மற்றும் சிறைச்சாலையில் இருக்கும் கைதிகள் என அனைத்து நடிகர்களிடமும் சண்டைக்காட்சிகளில் மிக நேர்த்தியாக வேலை வாங்கிய ஸ்டண்ட் சில்வா, பெரும்பாலான காட்சிகள் சிறைச்சாலையில் நடந்தாலும், சண்டைக்காட்சிகளை வெவ்வேறு கோணங்களில் வடிவமைத்ததோடு, ரசிகர்கள் சீட் நுணியில் உட்கார்ந்து பார்க்கும் வகையில் வடிவமைத்த விதம் விமர்சன ரீதியாகவும் பாராட்டு பெற்றது.
ஸ்டண்ட் கலைஞராக அறிமுகமாகி, எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் வெளியான ‘எமதொங்கா’ தெலுங்கு படம் மூலம் ஸ்டண்ட் இயக்குநராக அறிமுகமான ஸ்டண்ட் சில்வா, தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் ஸ்டண்ட் இயக்குநராக பணியாற்றி வருகிறார். தற்போது வரை பல்வேறு மொழிகளில் சுமார் 300-க்கும் மேற்பட்ட படங்களில் ஸ்டண்ட் இயக்குநராக பணியாற்றி, பல விருதுகளை வென்றுள்ளார்.
ஸ்டண்ட் இயக்குநராக மட்டும் இன்றி பல படங்களில் நடிகராகவும் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்திருப்பவர், ‘சித்திரை செவ்வானம்’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகாகினார். தான் ஒரு ஸ்டண்ட் இயக்குநராக இருந்தாலும் தனது முதல் படத்தை உணர்வுப்பூர்வமான படமாக இயக்கி பாராட்டு பெற்றார். சமுத்திரக்கனி மற்றும் பிரபல நடிகை சாய் பல்லவியின் தங்கை பூஜா நடிப்பில் 2022ஆம் ஆண்டு வெளியாகி பார்த்த அனைவரது நெஞ்சையும் நெகிழ வைத்து மிகபெரிய எமோஷனல் வெற்றி படமாக அப்படம் அமைந்தது.
பல படங்களுக்கு ஸ்டண்ட் இயக்குநராக ஒப்பந்தமாகியிருந்ததால் தொடர்ந்து படம் இயக்க முடியாமல் இருந்த ஸ்டண்ட் சில்வா, தற்போது பிரமாண்டமான ஆக்ஷன் திரைப்படம் ஒன்றை இயக்குவதற்கான பணிகளில் ஈடுபட்டிருக்கிறார். அதே சமயம், பல பெரிய படங்களில் ஸ்டண்ட் இயக்குநராகவும் பணியாற்றி வருகிறார்.
2024 ஆம் ஆண்டின் ஆரம்பத்திலேயே ‘மிஷன் - சாப்டர் 1’ படத்தின் ஆக்ஷன் காட்சிகள் மூலம் ரசிகர்களை மட்டும் இன்றி திரையுலகினரையும் மிரள வைத்திருக்கும் ஸ்டண்ட் சில்வா, எப்போதும் போல் இந்த வருடமும் பிஸியான ஸ்டண்ட் இயக்குநராக அடுத்தடுத்த படங்கள் மூலம் தனது ஆக்ஷன் திருவிழாவை அமர்க்களமாக நடத்துவார் என்பது பிரகாசமாக தெரிகிறது.