”’டெஸ்ட்’ படம் எனக்கு சவாலாக இருந்தது” - நடிகர் மாதவன்

ஒய் நாட் (YNOT) ஸ்டுடியோஸ் தயாரிப்பில், எஸ்.சஷிகாந்த் இயக்கத்தில், மாதவன், சித்தார்த், நயன்தாரா, மீரா ஜாஸ்மின் ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள ‘டெஸ்ட்’ திரைப்படம் வரும் ஏப்ரல் 4 ஆம் தேதி நெட்ஃபிலிக்ஸ் ஒடிடி தளத்தில் நேராடியாக வெளியாக உள்ளது.
இந்த நிலையில், இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று செனனையில் நடைபெற்றது. இதில், நடிகை நயன்தாராவை தவிர படக்குழுவை சேர்ந்த அனைவரும் கலந்து கொண்டு படம் பற்றிய தகவல்களை பகிர்ந்துக் கொண்டார்கள்.
நடிகர் மாதவன் படம் குறித்து கூறுகையில், “ஒரு கதாபாத்திரம் எடுத்து வந்தால் நல்லவராக இருந்தாலும் சரி வில்லனாக இருந்தாலும் சரி அதை எந்த அளவிற்கு சிறப்பாக செய்ய வேண்டும் என்பதில் தான் கவனமாக இருப்பேன் அப்படி இருக்கும் பொழுது இந்த கதாபாத்திரம் எனக்கு சவாலாக இருந்தது என்னுடைய பெஸ்ட் கொடுத்து இருக்கிறேன்” என்றார்.
நடிகர் சித்தார்த் பேசுகையில், “நம் நாட்டில் கிரிக்கெட் என்பது வாழ்க்கை. யாரைக் கேட்டாலும் கிரிக்கெட் பிடிக்கும் என்பார்கள். நானும் அதில் ஒருவன். தினமும் பல மணி நேரம் கிரிக்கெட் பலரும் பார்த்து, விளையாடி அந்த விளையாட்டுடன் பழக்கமாகி இருப்பார்கள். அதனால், கிரிக்கெட்டராக வெறுமனே நடித்து ஒப்பேத்த முடியாது. டெஸ்ட் கிரிக்கெட்டர் ரோல் நடிப்பது எளிது கிடையாது. நிறைய பேரிடம் இருந்து இன்ஸ்பையர் ஆகிதான் இந்த கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். கிரிக்கெட் பார்க்கும்போது வரும் பதட்டம் இந்தப் படம் பார்க்கும்போதும் உங்களுக்கு வந்தால் அதுவே எங்களுக்கு வெற்றிதான். எனக்கு கிரிக்கெட்டர் ராகுல் டிராவிட் பிடிக்கும். அவருக்கு என் கதாபாத்திரத்தை டெடிகேட் செய்ய விரும்புகிறேன்” என்றார்.
நடிகை மீரா ஜாஸ்மின் பேசுகையில், “’டெஸ்ட்’ படம் நெட்ஃபிலிக்ஸூடன் இணைந்து பணிபுரிந்திருப்பதில் மகிழ்ச்சி. அழகான படம் இது. கண்டிப்பாக நீங்கள் பார்க்க வேண்டும். மேடியும் நானும் திரையில் அதிகம் கொண்டாடப்பட்ட ஜோடிகளில் ஒன்று. ‘ரன்’, ‘ஆயுத எழுத்து’ ஆகிய படங்களில் பணிபுரிந்திருக்கிறோம். YNOT ஸ்டியோஸ் படத்தை தயாரித்திருக்கிறது. இயக்குநர் சஷி, நயன்தாராவுடன் பணிபுரிந்தது மகிழ்ச்சி” என்றார்.
இயக்குநர் சஷிகாந்த் பேசுகையில், “நான் சினிமாவுக்கு வந்ததே படம் இயக்கதான். ஆனால், இயக்கம் தெரியாததால் அதை கற்றுக் கொள்ளவே YNOT ஸ்டியோஸ் தொடங்கினேன். இந்த ‘டெஸ்ட்’ படத்தின் கதாபாத்திரங்களை புரிந்து கொள்ள மெச்சூர்டான நடிகர்கள் தேவைப்பட்டார்கள். எனக்குமே பல டெஸ்ட் இந்தப் படத்திற்காகத் தேவைப்பட்டது. அதனால்தான், படம் வெளியாக இவ்வளவு நாட்கள் எடுத்துக் கொண்டேன்.” என்றார்.
நெட்ஃபிலிக்ஸ் இந்தியாவின் துணைத் தலைவர் மோனிகா ஷெர்கில் பேசுகையில், ”தமிழ் சினிமாவில் திறமையான கதைகள் பல வெளியாகி இருக்கிறது. இதில் 'டெஸ்ட்' திரைப்படமும் ஒன்று. இந்த ஸ்போர்ட்ஸ் டிராமா கதை குடும்பம், முக்கிய கதாபாத்திரங்கள் எதிர்கொள்ளும் சவால்களையும் பேசும். இயக்குநர் சஷிகாந்த் அதைத் திறமையாகக் கையாண்டிருக்கிறார். ஆர். மாதவன், நயன்தாரா, சித்தார்த், மீரா ஜாஸ்மின் என திறமையான நடிகர்கள் அனைவரும் முதல் முறையாக இந்த படத்திற்காக ஒன்று சேர்ந்து நடித்துள்ளனர். இந்த வருடம் எங்களுடைய முதல் ஒரிஜினல் தமிழ் திரைப்படம் 'டெஸ்ட்'. உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்கள் இந்த படத்தை பார்க்க ஆர்வமாக இருக்கிறோம்.” என்றார்.