Aug 18, 2023 11:29 AM

எனக்குள் பல வருடங்களாக இருந்த ஆதங்கம்! - ‘மாமன்னன்’ 50வது நாள் விழாவில் மனம் திறந்த ஏ.ஆர்.ரஹ்மான்

எனக்குள் பல வருடங்களாக இருந்த ஆதங்கம்! - ‘மாமன்னன்’ 50வது நாள் விழாவில் மனம் திறந்த ஏ.ஆர்.ரஹ்மான்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், உதயநிதி, வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் ஆகியோரது நடிப்பில் வெளியான ‘மாமன்னன்’ மிகப்பெரிய வரவேற்பு பெற்றதோடு, வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி பெற்று, தற்போதும் பல திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

 

இந்த நிலையில், ‘மாமன்னன்’ படம் 50 நாட்களை கடந்து வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருப்பதை கொண்டாடும் வகையில், படக்குழுவினர் நேற்று 50 வது நாள் விழாவை கோலாகலமாக கொண்டாடினர். இதில், படக்குழுவினருடன் திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் திரைப்பட விநியோகஸ்தர்கள் கலந்துக் கொண்டார்கள். நிகழ்ச்சியில் படத்தில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் நடிகர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

 

Maamannan 50th Day Celebration

 

நிகழ்ச்சியில் பேசிய நடிகர் உதயநிதி ஸ்டாலின்  “ஏ.ஆர்.ரஹ்மான் சாருக்கு மிகப்பெரிய நன்றி. இந்தப்படத்தில் பணியாற்றிய கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. பத்திரிக்கையாளர்கள் தந்த மிகப்பெரிய ஆதரவுக்கு நன்றி. இந்தப் படம் ஆரம்பித்த போதே இந்த பாடல் முக்கியமானதாக இருக்கும் என்று தெரியும் ஆனால் இவ்வளவு பெரிய படைப்பாக மாறியதற்கு மாரி செல்வராஜ் தான் காரணம். ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்தார். அவருக்கு நன்றி. கீர்த்தி படத்தில் எனக்கு அடிபட்ட போது படம் மிகப்பெரிய வெற்றி பெறும் என்றார், அடிபட்டால் வெற்றி பெறுமா என்று கிண்டல் செய்தேன். ஆனால் படம் மிகப்பெரிய வெற்றி. என் முதல் படம் மிகப்பெரிய வெற்றி அதே போல் என் கடைசி படமும்  வெற்றி பெற்றது மிகப்பெரிய மகிழ்ச்சி. வடிவேலு அவர் நடிக்கவில்லை என்று சொன்னால் இந்தப்படத்தை எடுக்க வேண்டாம் என்று முடிவு செய்திருந்தோம். அவர் தான் இந்த படமே, அவர் ஒப்புக்கொண்டு நடித்ததற்கு நன்றி. பகத் பாசில் படத்தில் முக்கியமான தூணாக இருந்தார். அவருக்கு நன்றி. அனைவருக்கும் நன்றி.” என்றார்.

 

நடிகர் வடிவேலு பேசுகையில், “இன்று மிக மகிழ்ச்சியான நாள். உதயநிதி இந்த மாமன்னன் திரைப்படத்தை மிகப்பெரிய வெற்றிப்படமாக மாற்றிவிட்டார். நான் எத்தனையோ நகைச்சுவை படம் செய்துள்ளேன். என் வாழ்நாளின் மொத்த படத்திற்கும் இந்த படம் சமமானதாக ஆகிவிட்டது. என்னால் மறக்க முடியாத படம். மாரி செல்வராஜ் கதை சொன்ன போதே அவரிடம் மிகப்பெரிய தெளிவு இருந்தது. 30 படத்திற்கான கதை அவரிடம் இருந்தது. இந்தப் படத்தைக் கண் இமைக்காமல் பார்க்க வைத்தது அய்யா ஏ.ஆர்.ரஹ்மான் அவர்கள் தான், அவருக்கு நன்றி. இந்த படத்தில் பல காட்சிகள் என்னைத் தூங்கவிடவில்லை, உலுக்கி எடுத்துவிட்டது. ஒவ்வொரு காட்சியிலும் உயிர் இருந்தது. பலர் என்னை இப்படத்திற்காக அழைத்துப் பாராட்டினார்கள், மாரி செல்வராஜ் மேன்மேலும் வளர வேண்டும். அவர் நகைச்சுவை படம் எடுக்க வேண்டும். இந்த வாய்ப்பை தந்த ரெட் ஜெயன்ட் மூவிஸ்க்கு மிகப்பெரிய நன்றி. இந்த மேடையில் இருப்பது மிகப்பெரிய மகிழ்ச்சி. மக்களுக்கு நன்றி.” என்றார். 

 

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பேசுகையில், “20, 30 வருடங்களாக எனக்குள் ஏன் இந்த மாதிரி நடக்கிறது என்ற ஆதங்கம் இருந்தது. இசையில் என்னால் எதுவும் செய்ய முடியவில்லை, அதனால் அதைச் செய்பவர்களுடன் சேர்ந்து கொண்டேன் அவ்வளவு தான். உதயநிதி, மாரி செல்வராஜ் வந்து சொன்ன போது, இவ்வளவு பெரிய வெற்றி பெறும் என நினைக்கவில்லை. எனக்கு மிகப்பிடித்த வடிவேலு சார், அட்டகாசமாக நடித்துள்ளார். கீர்த்தி நன்றாக நடித்துள்ளார். உதயநிதி மிகச் சிறந்த நடிகர், பைக்கில் செல்லும் காட்சியில் அவர் கண்ணில் தெரியும் வலி, அதனால் தான் ஒரு பாடல் உருவானது.  படத்தில் எல்லோரும் மிகப்பெரிய உழைப்பைத் தந்துள்ளார்கள் அனைவருக்கும் நன்றி.” என்றார்.

 

Maamannan 50th Day Celebration

 

இயக்குநர் மாரி செல்வராஜ் பேசுகையில், “மாமன்னன் 50 வது நாள். உதய் சார் அழைத்து என் கடைசி படம் எடுத்து தாருங்கள் என்றார். அவர் கேட்டது போல் நல்ல படத்தை எடுத்து தந்து விட்டேன். அதற்கு ஒத்துழைத்த படக்கலைஞர்கள் அத்தனை பேருக்கும் நன்றி. ஒன்றே ஒன்று தான் சொல்ல ஆசை, நான் பாடிக்கொண்டிருப்பது ஒரே பாடலாக இருக்கலாம் ஆனால் அதை என் வாழ்நாள் முழுதும் பாடிக்கொண்டிருப்பேன், என் வயிற்றிலிருந்து குடலை உருவி அதை யாழாக மாற்றி தெருத்தெருவாக மீட்டி வருவேன், உண்மையை கேட்கக் கூடிய காதுகளை நான் தேடிக்கொண்டே இருப்பேன் நன்றி.” என்றார்.

 

நடிகை கீர்த்தி சுரேஷ் பேசுகையில், “படம் வெற்றி பெறக் காரணமான பத்திரிக்கையாளர்களுக்கு நன்றி. நடிப்பிற்கு பாராட்டு கிடைக்கிறது என்றால் அதை உருவாக்கிய இயக்குனர்கள் தான் காரணம், மாரி சார் நன்றி.  உதயநிதி சார் உங்களுடன் இருந்த இந்தப் பயணம் மிகச் சிறப்பாக இருந்தது. வடிவேலு சாருடன் நடிப்பேன் என்று நினைத்துப் பார்க்கவில்லை. மிக மகிழ்ச்சி. ஏ.ஆர்.ரஹ்மான் எனக்காக பாட்டுப் போட்டார் அவருக்கு நன்றி. பகத் பாசில், ரவீனா மற்றும் அனைத்து கலைஞர்களுக்கும் நன்றி.” என்றார்.

 

udhayanithi and Keerthy Suresh

 

ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணை தயாரிப்பாளர் அர்ஜூன் துரை பேசுகையில், “மாமன்னன் திரைப்படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ்க்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக ஆக்கிய திரையரங்கு உரிமையாளர்கள் விநியோகஸ்தர்களுக்கு நன்றி. பத்திரிக்கையாளர்கள் தந்த மிகப்பெரிய ஆதரவுக்கு நன்றி. படத்தில் பணிபுரிந்த அனைவரும் தங்கள் சொந்த படம் போல உழைத்தார்கள். அவர்கள் அனைவருக்கும் எங்கள் நன்றி. மாரி செல்வராஜ் அவர்களுக்கு எங்கள் நன்றி.” என்றார்.