”‘தி ஃபேமிலி ஸ்டார்’ பல மடங்கு உயரத்திற்கு என்னை அழைத்துச் செல்லும்” - விஜய் தேவரகொண்டா நம்பிக்கை

விஜய் தேவர்கொண்டா மற்றும் மிர்னாள் தாகூர் நடிப்பில் உருவாகியுள்ள ‘தி ஃபேமிலி ஸ்டார்’ திரைப்படத்தை ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் நிருவனம் சார்பில் தில் ராஜு மற்றும் சிரிஷ் தயாரித்துள்ளனர். விஜய் தேவரகொண்டாவின் நடிப்பில் மிகப்பெரிய வெற்றி பெற்ற ‘கீதா கோவிந்தம்’ படத்தை இயக்கிய பரசுராம் பெட்லா இயக்கியிருக்கும் இப்படம் வரும் ஏப்ரல் 5 ஆம் தேதி தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாகிறது.
இந்த நிலையில், ‘தி ஃபேமிலி ஸ்டார்’ படத்தின் விளம்பர பணிகளில் ஈடுபட்டு வரும் படக்குழுவினர், நேற்று சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்து படம் குறித்த தகவல்களை பகிர்ந்துக் கொண்டார்கள்.
நிகழ்ச்சியில் பேசிய நடிகர் விஜய் தேவரகொண்டா, “தமிழ் இயக்குநர்களின் திரைப்படங்களில் நடிப்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு இப்படத்தினை விளம்பரப்படுத்துவதற்காக சென்னை வந்த போது அந்தப் பயணம் மிகவும் இனிமையாக இருந்தது. சென்னைக்கு வரும்போதெல்லாம் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். கடந்த முறை ஊடகவியலாளர்களை சந்தித்தபோது, தமிழில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு, அதனை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து ஊடகவியலாளர்கள் விளக்கினர். நானும் அதற்கு பதிலளித்தேன்.
என்னுடைய நடிப்பில் வெளியான முதல் படம் 'அர்ஜுன் ரெட்டி'க்கு நீங்கள் அளித்த ஆதரவு மறக்க இயலாது. தற்போது மீண்டும் இயக்குநர் பரசுராமுடனும், தயாரிப்பாளர் தில் ராஜுடனும் இணைந்து 'தி ஃபேமிலி ஸ்டார்' படத்தின் மூலம் உங்களை சந்திக்கிறேன். இயக்குநர் பரசுராமுடன் இணைந்து 'கீதா கோவிந்தம்' எனும் திரைப்படத்தில் நடித்திருந்தேன். அதனைத் தொடர்ந்து 'தி ஃபேமிலி ஸ்டார்' படத்தில் நடித்திருக்கிறேன். இது அந்த படத்தை விட கூடுதல் உயரத்திற்கு என்னை அழைத்துச் செல்லும் என நம்புகிறேன். இதற்கு முன் எனது நடிப்பில் வெளியான 'குஷி' திரைப்படத்திற்கும் உங்களின் ஆதரவு பிரமிப்பாக இருந்தது. இதே போல் இந்த படத்திற்கும் உங்களின் ஆதரவும் அன்பும் கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன்.
இந்தப் படத்தில் கதையின் நாயகனாக நடுத்தர வர்க்கத்தை இளைஞராக நடித்திருக்கிறேன். அன்பு செலுத்துவதிலும், காதலிப்பதிலும், நேசிப்பதிலும், கோபத்திலும் ஒரு எக்ஸ்ட்ரீம் நிலையை எதிர்கொள்பவன் தான் இப்படத்தில் நாயகன். இது ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும்.
படத்தின் நாயகியான மிருனாள் தாக்கூர் அற்புதமான ஒத்துழைப்பை வழங்கிய சக கலைஞர். மும்பையில் வேறு ஒரு பணியில் இருப்பதால், அவரால் இங்கு வர இயலவில்லை. இருந்தாலும் அவர் அந்த கதாபாத்திரத்தில் திறமையாக நடித்து, தன்னுடைய நடிப்பு முத்திரையை பதித்திருக்கிறார். அவருக்கும் படக்குழுவின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தப் படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி பெரும் வெற்றியை பெற்றிருக்கிறது. தற்போது இப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதுவும் ரசிகர்களை வெகுவாக கவரும். இந்தத் திரைப்படம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 5ஆம் தேதி அன்று தெலுங்கிலும், தமிழிலும் வெளியாகிறது.” என்றார்.
தயாரிப்பாளர் தில் ராஜு பேசுகையில், ”விஜய் நடிக்கும் 'வாரிசு' திரைப்படத்திற்கு பிறகு, விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள 'தி ஃபேமிலி ஸ்டார்' என்ற திரைப்படத்தை இரண்டாவது படமாக தயாரித்திருக்கிறேன். இந்த திரைப்படம் நடுத்தர வர்க்கத் இளைஞரின் கதை. ஒவ்வொரு குடும்பத்திலும் தங்களுடைய குடும்ப முன்னேற்றத்திற்காக பாடுபடுபவர்கள் தான் 'தி ஃபேமிலி ஸ்டார். இதை வலியுறுத்தும் வகையில் இப்படம் உருவாகி இருக்கிறது. இதில் விஜய் தேவரகொண்டா கதாநாயகனாகவும், அவருக்கு ஜோடியாக மிருனாள் தாக்கூரும் நடித்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்தை 'கீதா கோவிந்தம்' படத்தை தொடர்ந்து இயக்குநர் பரசுராம் பெட்லாவும், விஜய் தேவரகொண்டாவும் இணைந்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்தில் தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த காபி இருக்கிறது. இட்லி சாம்பார் இருக்கிறது. தாலி இருக்கிறது. .ஃபுல் மீல்ஸ் ஆகியவையும் இடம்பெற்றிருக்கிறது. இது ஒரு கம்ப்ளீட் ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கிறது. நடுத்தர வர்க்கத்து மக்களின் பொருளாதார ஸ்டேட்டஸ் உயரவும், குடும்பங்கள் மகிழ்ச்சியாக இருக்கவும் போராடும் ஒரு இளைஞனின் கதை தான் இப்படத்தின் கதை. இந்தப் படத்தில் அனைத்து தரப்பு ரசிகர்களும் கொண்டாடும் வகையில் காதல், காமெடி, சென்டிமென்ட், ஆக்சன் என கமர்சியல் விசயங்கள் இடம் பிடித்திருக்கிறது. இந்த திரைப்படம் தமிழ் ரசிகர்களுக்கும் பிடிக்கும். என்னுடைய நண்பரும் திங்க் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் உரிமையாளருமான ஸ்வரூப் - இந்த படத்தை தமிழக முழுவதும் வெளியிடுகிறார். விஜய் தேவரகொண்டாவும் - பரசுராமும் இணைந்து நிகழ்த்தி இருக்கும் மேஜிக்கைக் காண ஏப்ரல் ஐந்தாம் தேதி திரையரங்கத்தில் வருகை தந்து ஆதரவு தாருங்கள்.” என்றார்.
படத்தினை தமிழகம் முழுவதும் வெளியிடும் திங்க் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ஸ்வரூப் பேசுகையில், ”தயாரிப்பாளர் தில் ராஜு அருமையான நண்பர். இந்தப் படம் படத்தை தமிழகத்தில் வெளியிடுவதில் பெருமிதம் கொள்கிறேன். மேலும் ஆசீர்வதிக்கப்பட்டவராகவும் உணர்கிறேன்.” என்றார்.