Feb 08, 2025 05:17 PM

ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற ‘பேட் கேர்ள்’ திரைப்படம்!

ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற ‘பேட் கேர்ள்’ திரைப்படம்!

அறிமுக இயக்குநர் வர்ஷா பாரத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பேட் கேர்ள்’ (Bad Girl) திரைப்படம் ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு, உயரிய விருதான NETPAC விருதை வென்று தமிழ் திரையுலகிற்கு பெருமை சேர்த்துள்ளது.

 

NETPAC விருதானது (Network for the Promotion of Asian Cinema) ஆசியா மற்றும் பசிபிக் பிராந்தியங்களைச் சேர்ந்த ஒரு தனித்துவமான திரைப்படத்திற்கு ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. இது குறிப்பாக வளர்ந்து வரும் இயக்குநர்களின் திறமைகளை அங்கீகரிக்கும் விதத்தில் முதல் மற்றும் இரண்டாவது திரைப்படங்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. இந்த அங்கீகாரத்தின் மூலம் ‘பேட் கேர்ள்’ திரைப்படம் தனது இடத்தை, தமிழில் கதை சொல்லலுக்கான சிறப்பையும் மற்றும் தமிழ் திரைப்படங்களுக்கான வலிமையையும் உலகளாவிய சினிமா அரங்கில்  உறுதிப்படுத்தியுள்ளது.

 

அனுராக் காஷ்யப் மற்றும் வெற்றி மாறன் ஆகியோரால் தயாரிக்க ப்பட்ட ‘பேட் கேர்ள்’ திரைப்படம், அதன் அழுத்தமான கதை மற்றும்  நடிப்பால் சர்வதேச பார்வையாளர்களை கவர்ந்த ஒரு தைரியமான மற்றும் அழுத்தமான படைப்பு. இந்த வெற்றியானது உலகளாவிய சினிமா வட்டாரத்தில், வளர்ந்து வரும்  தமிழ் சினிமாவின்  செல்வாக்கை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது மற்றும்  புதிய திரைப்பட படைப்பாளிகளுக்கு திறவுகோலாக அமைந்துள்ளது. 

 

உலகத் தரத்திற்கு இணையான  கதை சொல்லாடல் மற்றும் நேர்த்தியான தொழில்நுட்பம்  ஆகியவற்றால் ‘பேட் கேர்ள்’ திரைப்படமானது பாரம்பரிய தமிழ் சினிமாவின் எல்லைகளை விரிவுபடுத்தி உலக அரங்கில் மிகப்பெரிய அங்கீகாரத்தை பெற்றிருக்கிறது.  இந்த விருது திரைத்துறையின் பயணத்தில் ஒரு புதிய அத்தியாயத்தை கொடுப்பதோடு மட்டுமல்லாமல், புதிய சிந்தனைகளை கொண்ட இளம் படைப்பாளிகளுக்கு ஊக்கம் கொடுப்பதாகவும் அமைந்துள்ளது. 

 

ஒரு தமிழ் படம் உலக அரங்கில் இவ்வளவு பெரிய விருது பெற்றிருப்பதை  திரைத்துறையினரும்  ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர். IFFR 2025-ல் ‘பேட் கேர்ள்’ படத்திற்கு கிடைத்திருக்கும் வெற்றி, அந்தப் படக்குழுவிற்கான  வெற்றி மட்டும் அன்று. உலக அரங்கில் இந்திய சினிமாவிற்கும் குறிப்பாக தமிழ் சினிமாவிற்கும் கிடைத்திருக்கும் வெற்றி.

 

அஞ்சலி சிவராமன், சாந்தி பிரியா, ஹ்ரிது ஹாரூன், டீஜே அருணாசலம், சஷாங்க் பொம்மிரெட்டிப்பள்ளி, சரண்யா ரவிச்சந்திரன் ஆகியோர் நடித்திருக்கும் இப்படத்திற்கு அமித் திரிவேதி இசையமைத்துள்ளார். ப்ரீதா ஜெயராமன் (ISC) ஜெகதீஷ் ரவி, பிரின்ஸ் ஆண்டர்சன் ஆகியோர் ஒளிப்பதிவு செய்ய, ராதா ஸ்ரீதர் படத்தொகுப்பு செய்துள்ளார்.

 

கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி சார்பில் இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் இயக்குநர் அனுராக் காஷ்யப் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தை வர்ஷா பாரத் எழுதி இயக்கியுள்ளார்.