’லவ் இங்க்’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தொடங்கியது!

எம்ஆர் பிக்சர்ஸ், தயாரிப்பாளர் ஏ. மகேந்திரன் நல்ல கதையம்சம் சார்ந்த படங்களைத் தயாரிக்க வேண்டும் என்ற முனைப்புடன் 'லவ் இங்க்' படத்தைத் தயாரித்து வருகிறார். இந்தப் படத்தில் ராஜ் ஐயப்பா கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக டெல்னா டேவிஸ் நடிக்கிறார். சரியான திட்டமிடலுடன் குறுகிய காலத்தில் படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பை இயக்குநர் மேகராஜ் தாஸ் நேர்த்தியாக படமாக்கியுள்ளார். இப்போது படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. இதில் நடிகர்கள் சுனில் ரெட்டி, கேபிஒய் புகழ் ராமர் மற்றும் இயக்குநர்-நடிகர் ரவி மரியா ஆகியோரும் இணைந்துள்ளனர்.
இயக்குநர் மேகராஜ் தாஸ் கூறும்போது, “படப்பிடிப்பு தொடங்கிய நாள் முதலே சரியான திட்டமிடல் இருந்ததால் எளிதில் எங்களால் படப்பிடிப்பை முடிக்க முடிந்தது. தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பில் இருக்கிறோம். படப்பிடிப்பு திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செய்யாறு மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் தொடங்கியுள்ளது. கேபிஒய் ராமர் மற்றும் ரவி மரியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இவர்களோடு நடிகர் சுனில் ரெட்டி ('டாக்டர்', 'ஜெயிலர்', 'பீஸ்ட்' படப்புகழ்) வில்லனாக நடிக்கிறார்".
நடிகர் அஜித் குமாரின் 'வலிமை', டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் வெப் சீரிஸ் ‘உப்பு புளி காரம்’ ஆகியவற்றில் தனது அற்புதமான நடிப்பிற்காக ராஜ் ஐயப்பா பாராட்டப்பட்டார். பல சீரியல்கள் மூலம் ரசிகர்களைக் கவர்ந்த டெல்னா டேவிஸ் இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.
ஒரு சில திரைப்படங்களில் இணை இயக்குநராகப் பணியாற்றிய மேகராஜ் தாஸ் எழுதி இயக்கியிருக்கும் இந்தப் படம் ஃபீல்-குட் ரொமாண்டிக் காமெடி ஜானரில் உருவாகிறது. நடிகர் யோகி பாபு இந்த படத்தில் டாக்டராக ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவரது நடிப்பு நிச்சயமாக ரசிகர்களை சிரிப்பில் ஆழ்த்தும்.
பட்டிமன்றம் ராஜா, மாறன், சுபாஷினி கண்ணன், கேபிஒய் வினோத், டிஎஸ்ஜி ('மார்க் ஆண்டனி' பட வில்லன். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்), மவுரிஷ் தாஸ், வினோத் முன்னா மற்றும் பலர் நடித்துள்ளனர்.