மீண்டும் ஒரு போராட்டக்களம்! - விஜய்குமாரின் புதிய படத்தின் முதல் பார்வை வெளியானது

‘உறியடி’ படத்தின் மூலம் இயக்குநர் மற்றும் நாயகனாக அறிமுகமான விஜய்குமார், சமீபத்தில் வெளியான ‘ஃபைட் கிளப்’ படம் மூலம் ஆக்ஷன் ஹீரோவாக அவதாரம் எடுத்தார். இதற்கிடையே, ‘சேத்துமான்’ பட புகழ் இயக்குநர் தமிழ் இயக்கத்தில் விஜய்குமார் நாயகனாக நடித்து வரும் படம் அரசியல் பின்னணியை கதைக்களமாக கொண்ட படம் என்பதால் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தனது முதல் படம் மூலம் சாதி மற்றும் சமூக அரசியல் குறித்து அதிரடியாக பேசிய இயக்குநர் தமிழ் மற்றும் அதே சாதி அரசியல் மற்றும் சமூக பிரச்சனைகள் குறித்த படங்களில் நடித்து கவனம் ஈர்த்த நடிகர் விஜய்குமார், இணைந்திருக்கும் படம் என்பதால், இந்த படத்தின் மீதும், இதற்கு என்ன தலைப்பு வைப்பார்கள் என்பதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது இந்த படத்தின் முதல்பார்வை போஸ்டர் மற்றும் தலைப்பை படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. அதன்படி, படத்திற்கு ‘எலக்சன்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. முதல் பார்வை போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
விஜய்குமார் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக 'அயோத்தி' படப் புகழ் நடிகை ப்ரீத்தி அஸ்ராணி நடிக்கிறார். இவர்களுடன் நடிகை ரிச்சா ஜோஷி, நடிகர்கள் 'வத்திக்குச்சி' திலீபன், பாவெல் நவகீதன், ஜார்ஜ் மரியம் மற்றும் நாச்சியாள் சுகந்தி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
எழுத்தாளர் அழகிய பெரியவன் வசனம் எழுத, மகேந்திரன் ஜெயராஜு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை சி. எஸ். பிரேம்குமார் கையாள, கலை இயக்கத்தை ஏழுமலை மேற்கொண்டிருக்கிறார். வேலூர் மாவட்டத்தில் நடைபெறும் உள்ளாட்சித் தேர்தல் அரசியலை மையப்படுத்தித் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ரீல் குட் ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆதித்யா தயாரித்திருக்கிறார்.
முதல்பார்வை போஸ்டரில் கதையின் நாயகனான விஜய்குமாரின் தோற்றம் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டிருப்பதாலும், அரசியவாதி கெட்டப்பில் விஜய்குமார் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருப்பதாலும், இந்த படத்தின் மூலமாகவும் அவர் மீண்டும் போர்க்களமான கதைக்களத்தில் அதிரடிக்கு தயாராகிவிட்டார் என்றே தெரிகிறது.
இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து தற்போது இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் இப்படத்தின் டீசர், சிங்கிள் ட்ராக் , லிரிக்கல் வீடியோ, டிரைலர் மற்றும் வெளியீட்டு தேதி உள்ளிட்ட கூடுதல் விவரங்கள் வெளியிடப்படும் என படக்குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள்.