கைகோர்த்த ‘ப்ளூ ஸ்டார்’ மற்றும் ‘சிங்கப்பூர் சலூன்’ படக்குழு!

இயக்குநர் பா.இரஞ்சித் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் எஸ்.ஜெயக்குமார் இயக்கத்தில், அசோக் செல்வன், சாந்தனு, கீர்த்தி பாண்டியன், பிரித்வி ஆகியோரது நடிப்பில் உருவாகியிருக்கும் ‘ப்ளூ ஸ்டார்’ மற்றும் ஐசரி கே.கணேஷ் தயாரிப்பில், இயக்குநர் கோகுல் இயக்கத்தில், ஆர்ஜே பாலாஜி நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘சிங்கப்பூர் சலூன்’. இவ்விரண்டு திரைப்படங்களும் ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருப்பதோடு, நாளை (ஜனவரி 25) இரண்டு படங்களும் திரையரங்குகளில் வெளியாகிறது.
பொதுவாக ஒரே நாளில் வெளியாகும் படங்களுக்கு இடையே போட்டி ஏற்படுவது வழக்கம் தான். அதிலும், எந்த படத்திற்கு அதிக திரையரங்குகள் என்பதில் பெரும் போட்டி நிலவும். அப்படிப்பட்ட போட்டி இவ்விரு படங்களுக்கு இடையே இருந்ததோ இல்லையோ, ஆனால், இவ்விரு படக்குழுவினரும் இரண்டு படங்களும் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக ஆக்கப்பூர்வமான செயல் ஒன்றை செய்துள்ளார்கள். ஆம், இரண்டு படக்குழுவினரும் இணைந்து நட்புக்காக கிரிக்கெட் விளையாடியுள்ளார்கள். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருவதோடு, படத்திற்கான விளம்பரமாகவும் அமைந்துள்ளது.
இளைஞர்களின் இத்தகைய செயல், அவர்களின் திரைப்படங்களின் வியாபார வெற்றிக்கு பெரிதும் கைகொடுக்கும் என்பதால் திரையுலகினர் இரண்டு படக்குழுவினரையும் பாராட்டி, வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
இந்த கிரிக்கெட் போட்டியில் இயக்குநர் பா.ரஞ்சித், நடிகர்கள் அசோக் செல்வன், ஆர்ஜே பாலாஜி, பிரித்வி, சாந்தனு, கிஷன் தாஸ், நடிகை கீர்த்தி பாண்டியன், படத்தொகுப்பாளர் செல்வா மற்றும் இரண்டு திரைப்படங்களின் தொழில்நுட்ப கலைஞர்கள் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக்கொண்டார்கள்.