பான் இந்தியா படமாக உருவாகியுள்ள ’மட்கா’ டீசர் வெளியானது!

மெகா பிரின்ஸ் வருண் தேஜ் தனது அடுத்த படமான மட்காவுக்காக இதுவரை செய்யாத புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளார். கருணா குமார் இயக்கத்தில், வைரா என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் எஸ்ஆர்டி என்டர்டெயின்மென்ட் நிறுவனங்களின் சார்பில் டாக்டர் விஜேந்தர் ரெட்டி தீகலா மற்றும் ரஜனி தல்லூரி ஆகியோர் இப்படத்தை தயாரித்துள்ளனர். மட்கா மன்னனாக உயரும் ஒரு சாதாரண மனிதனின் பயணத்தை விவரிக்கிறது.
இந்த டீஸர் கதாநாயகனின் வளர்ச்சியை அடுக்கடுக்காக எடுத்துக்காட்டுகிறது, சிறையில் இருக்கும் போது, ஜெயிலர் ஒருவரின் வார்த்தைகளால் ஈர்க்கப்படும் நாயகன், நாட்டில் 90% செல்வத்தைக் கட்டுப்படுத்தும், ஒரு சதவீத பணக்கார குழுவில் தானும் இணைய வேண்டுமெனத் தீர்மானிக்கிறார், லட்சியத்தின் பாதையில், மனித பேராசை பற்றிய புரிதலால் உந்தப்படும் நாயகன், இரக்கமற்ற உலகில் வெற்றியை அடையப் புறப்படுகிறார், செல்வத்தை தேடி அடையும் ஆசை, அவரது வளர்ச்சியை அடுத்தடுத்த கட்டத்திற்கு கூட்டிச் செல்கிறது.
மட்கா திரைப்படத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவில் மிகக் கடினமான சவாலை எதிர்கொண்டு நடித்துள்ளார் வருண் தேஜ், இளமை முதல் முதுமை வரையிலான கதாபாத்திரத்தின் பயணத்தை வெளிப்படுத்தும் கதையில், நான்கு வித்தியாசமான மேக்ஓவர்களுடன் மாறுபட்ட தோற்றங்களில் கலக்கியுள்ளார். ஒவ்வொரு லுக்கிலும் அவரது உடல் மொழியும், டயலாக் டெலிவரியும், நம்மை மயக்குகிறது. அவர் தனது பதின்ம வயதிலும், இருபதுகளிலும் உள்ள இளைஞனாக தூள் கிளப்புகிறார், அதே சமயம் நடுத்தர வயதுடைய நபராக, அவர் மாறுவது நம்ப முடியாத வகையில் நம்மை ஆச்சரியப்படுத்துகிறது. மேலும் வயதான தோற்றம் நம்மை மிரட்டுகிறது. ஒரு முக்கிய சண்டைக் காட்சியின் போது பூர்ணா தியேட்டர் மற்றும் சூப்பர் ஸ்டார் கிருஷ்ணாவின் கட்அவுட் உள்ளிட்டவை காட்டப்படுவது, நம் ஆவலைத் தூண்டுகிறது.
இந்த டீஸர் நோரா ஃபதேஹி, மீனாட்சி சவுத்ரி மற்றும் நவீன் சந்திரா உள்ளிட்ட நட்சத்திர துணை நடிகர்களையும் அறிமுகப்படுத்துகிறது.
கருணா குமார் முதல் முறையாக ஒரு வெகுஜன வணிக விஷயத்தை திறமையாக கையாண்டு திரையில் அசத்தலாக வெளிப்படுத்தியுள்ளார். மாஸ் பஞ்ச் மற்றும் அழுத்தமான டயலாக்குகள் அடங்கிய அவரது கதைசொல்லல் மிக வித்தியாசமானது, இயக்குனரின் பார்வை மற்றும் படக்குழுவின் அர்ப்பணிப்பு மிக்க உழைப்பில், பழமையான காலகட்டம் தத்ரூபமாக திரையில் விரிகிறது.
ஒளிப்பதிவாளர் ஏ.கிஷோர் குமார் தனது தனித்துவமான திறமையில், மாறுபட்ட காலகட்டங்களை வெகு அற்புதமாக படம்பிடித்துள்ளார், அதேசமயம் ஜி.வி.பிரகாஷ் குமார் தனது அட்டகாசமான ஸ்கோர் மூலம், ஹீரோயிசத்திற்கும், கதைக்கும் வலு சேர்த்துள்ளார். எடிட்டர் கார்த்திகா ஸ்ரீனிவாஸ்.ஆர், மிகச் சிறப்பாக எடிட் செய்துள்ளார். உலகளாவிய அளவிலான தரத்தில், வைரா என்டர்டெயின்மென்ட்ஸ், எஸ்ஆர்டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனங்கள் இப்படத்தை தயாரித்துள்ளன.
இந்த டீஸர் ஒரு அற்புதமான பயணத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது, இது படத்தின் மீதான ஆவலை அதிகரித்துள்ளது. எதிர்கால விளம்பரங்களில் கதாநாயகனின் பரிமாணத்தை பற்றி இன்னும் இன்னும் அதிகமாக எதிர்பார்க்கலாம்.
தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் பான் இந்தியப் படமாக பலத்த எதிர்பார்ப்புகளுக்கிடையில் மட்கா வரும் நவம்பர் 14ஆம் தேதி வெளியாகிறது.