Mar 13, 2025 04:24 AM

நன்றி தெரிவித்து வெற்றியை கொண்டாடிய ‘எமகாதகி’ படக்குழு!

நன்றி தெரிவித்து வெற்றியை கொண்டாடிய ‘எமகாதகி’ படக்குழு!

ஆணவக்கொலை தான் கதைக்களம் என்றாலும், அதை மற்றொரு வித்தியாசமான களத்தின் மூலம் மிக நேர்த்தியாக சொல்லியிருக்கும் ‘எமகாதகி’ திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி பெற்று திரையர்னக்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. 

 

நைசாத் மிடியா ஒர்க்ஸ் சார்பாக ஸ்ரீனிவாசராவ் ஜலகம் தயாரிப்பில், கணபதி ரெட்டி இணைந்து தயாரித்துள்ள ’எமகாதகி’ திரைப்படத்தை, யெஷ்வா பிக்சர்ஸ் உலகம் முழுவதும்  வெளியிட்டுள்ளது. உமா மகேஸ்வர உக்ர ரூபஸ்யா  மற்றும் மிஸ்டர்.பிரக்னெண்ட் படப்புகழ்  ரூபா கொடவாயூர்  முன்னணி பாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தை, அறிமுக இயக்குநர் பெப்பின் ஜார்ஜ் இயக்கியுள்ளார். நடிகை கீதா கைலாசம் மற்றும் பிளாக்‌ஷீப் புகழ் நரேந்திர பிரசாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

 

துருவங்கள் பதினாறு, டியர் காம்ரேட், முதல் நீ முடிவும் நீ, கணம்,  படப்புகழ் சுஜித் சாரங் ஒளிப்பதிவு செய்துள்ளார், ஸ்ரீஜித் சாரங் எடிட்டிங் பணிகளைச் செய்துள்ளார், அனிமல், அமரன், லியோ போன்ற பல படங்களின் சவுண்ட் டிசைனிங் நிறுவனமான சிங் சினிமாஸ், ஒலி வடிவமைப்பைச் செய்துள்ளது. உயர்தர தொழில்நுட்ப தரத்தில், மிகச்சிறப்பான படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது. 

 

இந்த நிலையில், இப்படத்தின் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓட்டிக்கொண்டிருக்கும் இப்படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக படக்குழு சமீபத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். 

 

இந்நிகழ்வில் தயாரிப்பாளர் ஸ்ரீனிவாசராவ் ஜலகம் பேசுகையில், “இப்படத்திற்கு பெரும் ஆதரவு அளித்த உங்கள் அனைவருக்கும் நன்றி. நான் 20 வருடங்களாகத் தமிழ் நாட்டில் வேலை பார்த்து வருகிறேன். இது கலாச்சாரத்தைப் போற்றும் நிலம். இந்த தமிழ் நாட்டிற்கு ஏதாவது பணியாற்ற வேண்டும் என்பது என் ஆசையாக இருந்தது. இயக்குநர் பெப்பின் ஜார்ஜ் இந்தக்கதையைச் சொன்ன போது, அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இப்படத்தை இணைந்து தயாரித்த கணபதி ரெட்டிக்கு என் நன்றி. இப்படத்திற்காக உழைத்திட்ட இயக்குநர், நடிகர்கள்,, தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. பெப்பின் ஜார்ஜ் மிகத் திறமையானவர். இப்படத்தில் அவரது திறமையை நிரூபித்துள்ளார்.  அவருக்கு நல்ல எதிர்காலம் உள்ளது. அனைத்து ரசிகர்களும் எங்களது இப்படத்தைப் பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி.” என்றார்.

 

பாடலாசிரியர் ஞானக்கரவேல் பேசுகையில், “எமகாதகி திரைப்பட இயக்குநர் பெப்பின் ஜார்ஜுக்கு வாழ்த்துக்கள். இந்த மூன்று நாட்களில் இப்படத்தின் நடிகர்கள், தொழில் நுட்ப கலைஞர்கள், தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் இத்திரைப்படம், மிகுந்த மன மகிழ்ச்சியைத் தந்திருக்கிறது என்றால், அதற்கு மிக முக்கிய காரணம் பத்திரிக்கையாளர்கள் ஆகிய நீங்கள் தான். உங்களது பாராட்டுக்கள் தான் மக்களிடம் இப்படத்தை எடுத்துச் சென்றுள்ளது. இன்னும் இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற, நீங்கள் ஆதரவு தர வேண்டும் அனைவருக்கும் நன்றி.” என்றார்.

 

வசனகர்த்தா ராஜேந்திரன்  பேசுகையில், “இந்த சிறந்த திரைப்படத்தை உருவாக்கிய தயாரிப்பாளர்கள், படத்தில் நடித்த நடிகர்கள்,  தொழில்நுட்ப கலைஞர்கள், இப்படத்தை உருவாக்கிய இயக்குநர் பெப்பின் ஜார்ஜ் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.  இப்படத்தின் கதையை முதன் முதலில் பெப்பின் ஜார்ஜ் சொன்ன போது,  யார் ஹீரோ? என்ன மாதிரி கதை? என்று கேட்டேன்.  அவர் இது பெண்ணின் மீது பயணமாகும் கதை என்றார், அதுவும் நாயகி பிணமாக நடிக்க உள்ளார் என்றார்,  எப்படி நாயகியைப் பிணமாக வைத்து, இந்தக் கதையைச் சொல்ல முடியும் என்று கேட்டேன்.  அதைச் சிறப்பாக ஒரு திரைக்கதை ஆக்கித் தந்தார்.  வெகு திறமையாளரான பெப்பின் ஜார்ஜ் அவர்களுக்கு மிகப்பெரிய எதிர்காலம் உள்ளது.  அவர் இன்னும் சிறப்பான படங்கள் செய்ய வேண்டும்.” என்றார்.

 

சவுண்ட் டிசைனர் சச்சின் சுதாகர் பேசுகையில், “எங்களுக்கு ஆதரவு தந்த பத்திரிக்கை ஊடகங்களுக்கு நன்றி. இப்படத்திற்கு  பெரும் ஆதரவைத் தந்த வெங்கட் ராகுலுக்கு நன்றி. நான் வேலை பார்த்ததில், மிக பிரில்லியண்டான இயக்குநர் பெப்பின் ஜார்ஜ். மேலும் அவர் சிறந்த படங்கள் செய்ய வேண்டும்.” என்றார்.

 

சவுண்ட் மிக்ஸ் அரவிந்த் மேனன் பேசுகையில், “எங்களுக்கு ஆதரவு தந்த பத்திரிக்கை ஊடகங்களுக்கு நன்றி. மிக அழுத்தமான ஒரு கதையை மிகச்சிறப்பாகச் செய்துள்ளார், இயக்குநர் பெப்பின் ஜார்ஜ். மிக அட்டகாசமான ஒளிப்பதிவு செய்த சுஜித் சாரங் மற்றும் என்னுடன் உழைத்த சச்சினுக்கு நன்றி. ரூபா கொடவாயூர் பிணமாக நடித்தாலும் மிக அட்டகாசமாக நடித்திருந்தார். இப்படத்தைச் சிறப்பான படமாக உருவாக்க, உழைத்திட்ட அனைவருக்கும் நன்றி.” என்றார். 

 

நடிகை ஹரிதா பேசுகையில், “பத்திரிக்கை ஊடகங்களுக்கு நன்றியும் அன்பும். இப்படம் எங்கள் மனதுக்கு மிகவும் நெருக்கமான படைப்பு. இப்பாத்திரத்தை எனக்குத் தந்த பெப்பின் ஜார்ஜுக்கு நன்றி. ஒளிப்பதிவாளர், எடிட்டர், சவுண்ட் டிசைன் ஆகிய அனைவருக்கும் நன்றி. இப்படத்தை உருவாக்கிய தயாரிப்பாளருக்கு நன்றி. 36 மெயின் கேரக்டர்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். உடன் நடித்த, ஆதரவு தந்த அனைவருக்கும் நன்றி. எங்கள் உழைப்பைப் பாராட்டிய அனைவருக்கும் நன்றி.” என்றார்.

 

நடிகர் சுபாஷ் பேசுகையில், “இப்படத்தில் வாய்ப்பு தந்த இயக்குநர் தயாரிப்பாளருக்கு நன்றி. எனக்கு முழு ஆதரவு தந்த வெங்கட்டுக்கு நன்றி. ஷூட்டிங்க் ஸ்பாட்டில் பெப்பின் எனக்கு தந்த இடம் மிகப்பெரிது. அவர் இப்போது வேறோரு படத்தில் உழைத்துக் கொண்டிருக்கிறார். அவர் எனக்குத் தந்து வரும் ஆதரவுக்கு நன்றி. ஒளிப்பதிவாளர் சுஜித் சாரங்க்கிற்கு நன்றி. உடன் நடித்த அனைத்து நடிகர்களுக்கும் நன்றி. படத்தை எடுத்து, ரிலீஸ் செய்வது, மக்களிடம் கொண்டு சேர்ப்பது கடினமாக உள்ளது, அதற்கான தீர்வை பெரியவர்கள் முன்னெடுக்க வேண்டும். எங்கள் படத்தை மக்களிடம் கொண்டு சென்ற அனைவருக்கும் நன்றி.” என்றார்.

 

ஒளிப்பதிவாளர்சுஜித் சாரங் பேசுகையில், “பத்திரிகை ஊடக  நண்பர்களுக்கு மிகப்பெரிய நன்றி. உங்களால்தான் இந்த திரைப்படம் திரையரங்கிற்கு வந்திருக்கிறது. ஒரு நல்ல திரைப்படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்த உங்களுக்கு என் கோடான கோடி நன்றி.  என்னிடம் ஏன் சின்ன படங்கள் செய்கிறாய்? பெரிய படங்கள் செய்துவிட்டு ஏன் அறிமுக நடிகர்களின் படங்கள் செய்கிறாய்? என்கிற கேள்வி கேட்பார்கள்.  அதற்கு நான் சொல்வது ஒன்றே ஒன்றுதான், என்னைப் பொறுத்தவரைச் சின்ன படம், பெரிய படம் என்று ஏதுமில்லை, எனக்குப் பணம் முக்கியம் இல்லை, நல்ல தரமான படைப்பு தான் முக்கியம்.  ஜார்ஜ் மிகத் திறமையான ஒரு இயக்குநர். அவரும் நானும் சேர்ந்து முன்பே சில படங்கள் செய்வதற்காகப் பேசிக் கொண்டிருந்தோம், அது சில காரணங்களால் நடைபெறவில்லை, இந்தக் கதை அவர் சொன்ன போது மிகவும் பிடித்திருந்தது. இதில் நிறையப் புதிதான விஷயங்கள் செய்ய முடியும் என்ற நம்பிக்கை இருந்தது. இப்போது இது முழுப்படமாக வந்ததற்கு உழைத்திட்ட அனைவருக்கும் நன்றி.  இப்படத்தின் கதையை புரிந்துகொண்டு தயாரித்த ஸ்ரீனிவாசராவ் ஜலகம்  மற்றும் கணபதி ரெட்டி  இருவருக்கும் நன்றி. இப்படத்தை எங்கு எடுக்கலாம் எனப் பேசியபோது, பெப்பின் அவரது சொந்த ஊரான தஞ்சைக்குக் கூட்டிப் போனார். அந்த வீடு பார்த்த உடனே எனக்கு மிகவும் பிடித்து விட்டது. இந்தப்படத்தில் பிணமாக நடிக்க நடிகையைத் தேடிய போது ரூபா நடித்த படம் பார்த்தோம், அவர் டான்ஸர் என்பதால் எங்களுக்கு இன்னும் சாதகமாக இருந்தது. அவரும் மிரட்டலாக நடித்துள்ளார். பெப்பின் ஒரு நல்ல ரைட்டர், இப்போது மிகச்சிறந்த இயக்குநரும் ஆகிவிட்டார். நரேந்திர பிரசாத்  மிக அட்டகாசமாக நடித்துள்ளார். இப்படம் தியேட்டரில் மிக நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. பத்திரிகை ஊடக நண்பர்களுக்கு நன்றி.” என்றார். 

 

நடிகர் ராஜு ராஜப்பன் பேசுகையில், “பத்திரிகை ஊடக நண்பர்களுக்கு முதல் நன்றி. உங்களால்தான் இந்த திரைப்படம்  மக்களுக்குத் தெரிந்தது,  ஒரு நல்ல திரைப்படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்த உங்களுக்கு என் கோடான கோடி நன்றி. இப்படத்தில் மிகப்பெரிய உழைப்பைத் தந்து பெரிய படமாக்கிய ஒளிப்பதிவாளர் சுஜித் சாரங்கிற்கு நன்றி. இயக்குநர் பெப்பின் மிகத் திறமை மிக்கவர்.  அவர் ஒரு கதையை எழுதும் விதமும் அதைப் படப்பிடிப்பில் எடுக்கும் விதமும், கேரக்டர்களிடம் நடிப்பை வாங்கும் விதமும் அருமை. இந்தப்படத்தில் உழைத்த அனைத்து கலைஞர்களுக்கும் நன்றி.” என்றார். 

 

நடிகை கீதா கைலாசம் பேசுகையில், “பத்திரிக்கை ஊடக நண்பர்களுக்கு மிகப்பெரிய நன்றி. எமகாதகி மிக முக்கியமான படம், பெப்பினுக்கு என் நன்றி. இந்தக்கதை சொன்னபோதே எனக்கு மிகவும் பிடித்திருந்தது. டயலாக் ஒரு இடத்தில் மட்டுமே இருந்தாலும், படம் முழுக்க எனக்கான இடம் இருந்தது. இந்த கேரக்டரை என்னை நம்பி தந்ததற்கு பெப்பினுக்கு நன்றி. ஒரு கிராமத்தில் கிட்டதட்ட 45 பேரும் ஒன்றாக இருந்தது மிக இனிமையான நினைவுகள், அந்த ஊர் மக்கள் எல்லோரும் நண்பர்களாகிவிட்டனர்.  35 நாட்கள் ரூபா டெட்பாடியாக நடித்தார் அவரது அர்ப்பணிப்பு பிரமிப்பாக இருந்தது. இந்தப்படம் என் வாழ்வில் மிக முக்கியமான படம். இப்படத்தில் உழைத்த அனைவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது என்னுடைய படம் என்று தான் எனக்கு தோன்றுகிறது. இப்படம் எப்போது ரிலீஸ் என மிகுந்த ஆவலுடன் இருந்தோம். இப்படம் மூலம் அனைவருக்கும் வாய்ப்புக் கிடைக்கும். இது பெப்பினின் முதல் படம் போலவே இல்லை, மிக நன்றாக எடுத்துள்ளார். இந்தப்படத்தை மக்களிடம் சேர்த்த பத்திரிக்கையாளர்களுக்கு நன்றி. அனைவருக்கும் நன்றி.” என்றார்.

 

நடிகர் நரேந்திர பிரசாத் பேசுகையில், “மிகவும் மகிழ்ச்சியாகவும் பதட்டமாகவும் இருக்கிறது. எமகாதகி மனதுக்கு மிக நெருக்கமான படம், இப்படத்திற்கு அன்பைத் தந்த அனைவருக்கும் நன்றி. இயக்குநர், தயாரிப்பாளர், மற்றும் இப்படத்தின் குழுவினர் அனைவருக்கும் நன்றி. என்னை அடையாளப் படுத்திய பிளாக் ஷிப்பிற்கு நன்றி. இனி நல்ல படங்கள் செய்வேன் என நம்புகிறேன்.” என்றார்.

 

நடிகை ரூபா கொடவாயூர் பேசுகையில், “பத்திரிக்கை ஊடக நண்பர்களுக்கு மிகப்பெரிய நன்றி. இப்படத்தை எங்கள் குழுவைத் தாண்டி முதல் முதலில் உங்களுக்குத் தான் காட்டினோம்,  மூன்றாவதாகப் படத்தைப் பார்ப்பவர்கள் என்ன நினைப்பார்கள் என்று ஆவலாக இருந்தோம்.  நீங்கள் கொடுத்த வரவேற்பு மிகப்பெரியதாக இருந்தது.  பலர் என்னை அழைத்து இண்டர்வியூ எடுத்தார்கள்,  நீங்கள் தந்த ஆதரவு அனைத்துக்கும் மிக்க நன்றி. என் முதல் படம் இது, இப்படி ஒரு நல்ல திரைப்படத்தில் எனக்கு வாய்ப்பு தந்த இயக்குநர், தயாரிப்பாளர் இருவருக்கும் நன்றி. பெப்பின் சார் கதை சொன்ன போது எனக்குப் பல விசயங்கள் புரியவில்லை ஆனால் ஸ்ரீனிவாசராவ் ஜலகம் சார் எனக்குப் புரிய வைத்தார். இதை மிஸ் செய்திருந்தால் மிகவும் வருத்தப்பட்டிருப்பேன். பெப்பின் சார் எனக்கு லீலா பாத்திரத்தை தந்ததற்கு மிக்க நன்றி. ஒளிப்பதிவாளர்  சுஜித் சாரங் சார், பெரிய பெரிய படங்கள் செய்பவர் ஆனால் அவர் அவருக்குப் பிடித்த சின்னப்படங்களும் செய்வது மகிழ்ச்சி. படத்தில் உழைத்த அனைத்து கலைஞர்களும் மிகக் கடினமான உழைப்பைத் தந்தனர். சவுண்ட் மிக அற்புதமாக இருந்தது. சச்சின், அரவிந்த் மேனன் இருவருக்கும் நன்றி.  என்னுடன் நடித்த நடிகர்கள் அனைவரும் எனக்குப் பெரிய ஒத்துழைப்பு தந்தார்கள். நரேந்திர பிரசாத்திற்கு நிறையப் பெண் ரசிகைகள் உள்ளனர், அவர் மிக அட்டகாசமாக நடித்துள்ளார். கீதா மேடம் அமரனுக்கு அப்புறம் இப்படத்தில் மிக அற்புதமாக நடித்துள்ளார். படத்தைப் பாராட்டிய  அனைவருக்கும் நன்றி.” என்றார். 

 

எடிட்டர் ஸ்ரீஜித் சாரங் பேசுகையில், “மூன்று வருடங்களுக்கு முன் ஆரம்பமான புராஜக்ட் இது. இப்படத்தைப் புரிந்து தயாரித்த தயாரிப்பாளர்களுக்கு நன்றி. பெப்பின் மிகத் திறமையாக இப்படத்தை இயக்கியுள்ளார். ராகுலுக்கு என் நன்றிகள். படத்திற்கு ஆதரவு தந்த அனைவருக்கும் நன்றி.” என்றார். 

 

தயாரிப்பாளர் கணபதி ரெட்டி பேசுகையில், “எனக்குத் தமிழ் தெரியாது மன்னிக்கவும், எனக்குத் தமிழ்த் திரையுலகம் மிகவும் பிடிக்கும் இங்குள்ள கலைஞர்கள் திரைப்படங்கள் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளார்கள். பெப்பின் மிகத் திறமையானவர். இப்படத்தை மிக அட்டகாசமாக எடுத்துள்ளார். ஒளிப்பதிவாளர் சுஜித் எங்கள் பட்ஜெட்டுக்குள் மிக அட்டகாசமாகப் படத்தை எடுத்துத் தந்தார். சவுண்ட் டிசைன் பிரமாதமாகச் செய்த,  சச்சின், அரவிந்த் இருவருக்கும் நன்றி. ராகுலுடன் இனி எல்லாப் படத்திலும் இணைந்து செயல்படுவேன். எங்கள் தெலுங்கு நடிகை ரூபா கலக்கியுள்ளார். அவருக்கு என் நன்றி.  எங்கள் படத்திற்கு முழு ஆதரவைத் தந்த பத்திரிக்கை ஊடக நண்பர்களுக்கு நன்றி. தமிழ் ரசிகர்கள் அனைவருக்கும் என் நன்றி.” என்றார். 

 

இயக்குநர் பெப்பின் ஜார்ஜ் பேசுகையில், “எமகாதகி எங்களுக்கு மிகவும் முக்கியமான படைப்பு.  இப்படம் முழுமையாக வந்ததற்கு இம்மேடையில் இருப்பவர்கள் தான் காரணம், அதே போல் இப்படம் மக்களிடம்  சென்று சேர்ந்ததற்குப் பத்திரிக்கையாளர்களாகிய நீங்கள் தான் காரணம். உங்கள் அனைவருக்கும் என் நன்றிகள்.  ராகுல் மற்றும் ஸ்ரீனிவாசராவ் சார் இருவரிடமும் இந்த கதையை ஒரு ஐடியாவாக தான் சொன்னேன், அவர்கள் உடனே இதை டெவலப் செய்யுங்கள் கண்டிப்பாகச் செய்யலாம் என்றனர், பின் ஒளிப்பதிவாளர் சுஜித்திடம்  இதே கதையைச் சொன்ன போது, அவரும் ஊக்கம் தந்தார்.  இப்படித்தான் இந்த திரைப்படம் ஆரம்பமானது. சுஜித் நட்பு ரீதியாக மிக நெருங்கிய பழக்கம், அவர் பெரிய பட்ஜெட் படங்கள் செய்து தன்னை நிரூபித்து விட்டார், எனக்குத் தயக்கம் இருந்தது. ஆனால் மிகவும் ஊக்கம் தந்தார், இப்போது வரை அவர்  தந்து வரும் ஆதரவிற்கு நன்றி. பல காட்சிகளை எப்படி எடுக்கப் போகிறேன் எனப் பயந்தேன். சுஜித் அதை மிகச்சுலபமாகச் சாதித்து விட்டார். இப்படத்தில் நிறைய கேரக்டர்கள், 36 குடும்பங்களாகப் பிரித்து வைத்துத் தான் வேலை பார்த்தோம் அனைவரும் மிகப்பெரும் ஒத்துழைப்புத் தந்தனர். எடிட்டிங்கில் ஸ்ரீஜித் சாரங் பல ஆச்சரியங்களைச் செய்து காட்டினார். இசையமைப்பாளர் ஜெசின் மிக அட்டகாசமாகச் செய்துள்ளார். அவருக்கு நன்றி.  சவுண்டில் மிரட்டிய சச்சின், அரவிந்த் இருவருக்கும் நன்றி.  உங்களுக்குத் திரையிட்டவுடனே இப்படத்தின் தலையெழுத்து மாறிவிட்டது. நீங்கள் தந்த மிகப்பெரிய ஆதரவுக்கு நன்றி. நல்ல படங்களைத் தொடர்ந்து தருவேன் நன்றி.” என்றார். 

 

தயாரிப்பாளர் ராகுல் வெங்கட் பேசுகையில், “எங்கள் படத்தை மிகப்பெரிய படமாக மாற்றித் தந்த பத்திரிக்கை ஊடக நண்பர்களுக்கு நன்றி. இப்படத்தின் கதையை பெப்பின் சொல்லி 3 வருடம் ஆகிவிட்டது. இப்படம் உருவாக என் அம்மாவும் அப்பாவும் தந்த ஆதரவு மிக முக்கியம். அவர்களுக்கு சினிமா பிடிக்கும் என்பதால் எனக்கு ஆதரவு தந்தார்கள். எனக்குப் பணம் முக்கியமில்லை, பணத்துக்காக  இப்படத்தைத் தயாரிக்கவில்லை. பெப்பின் இப்படத்தில் 36 ஆர்டிஸ்டை அறிமுகப்படுத்தியுள்ளார். இந்தப்படம் குழுவாக எங்களுக்கு முக்கியமான படம். சுஜித், ஸ்ரீஜித் இருவரும் மிகப்பெரிய உழைப்பைத் தந்துள்ளனர். எல்லோருமே மிக அர்ப்பணிப்புடன் உழைத்தனர். எங்களுக்கு நிறையப் பதட்டம் இருந்தது. ஆனால் இப்படத்தை நீங்கள் பார்த்த பிறகு தான் மிகப்பெரிய நிம்மதி வந்தது. நீங்கள் தந்த பாராட்டில் தான் மக்களிடம் இப்படம் சென்று சேர்ந்துள்ளது. திரையரங்குகள் அதிகரிக்கக் காரணம் நீங்கள் தான் அனைவருக்கும் என் நன்றிகள். கீதா மேடம், ரூபா,  நரேந்திர பிரசாத் எல்லோரும் மிகப்பெரிய ஆதரவைத் தந்தனர். இன்னும் இது போல் நிறைய நல்ல படங்கள் செய்வோம் ஆதரவு தாருங்கள் நன்றி.” என்றார். 

 

மார்ச் 7 ஆம் தேதி  வெளியான ’எமகாதகி’ திரைப்படம் உலகமெங்கும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.