Jul 19, 2022 07:16 AM

ரிலீஸுக்கு முன்பே பொதுமக்களின் பாராட்டை பெற்ற ‘துரிதம்’! - உற்சாகத்தில் படக்குழு

ரிலீஸுக்கு முன்பே பொதுமக்களின் பாராட்டை பெற்ற ‘துரிதம்’! - உற்சாகத்தில் படக்குழு

இயக்குநர் எச்.வினோத்திடம் உதவி இயக்குநராக பணியாற்றிய சீனிவாசன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘துரிதம்’. தமிழகத்தில் நடைபெறும் சாலை பயணத்தை மையப்படுத்திய திரைப்படமான இதில் ‘சண்டியர்’ படத்தில் ஹீரோவாக நடித்த ஜெகன் ஹீரோவாக நடிக்கிறார். ஹீரோயினாக மிஸ் சவுத் இந்தியா பட்டம் வென்ற ஈடன் நடித்துள்ளார். இவர்களுடன் இயக்குநர் ஏ.வெங்கடேஷ், பாலசரவணன், பூ ராமு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

 

அறிமுக இசையமைப்பாளர் நரேஷ் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு வாசன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். நாகூரான் படத்தொகுப்பு செய்ய, மணி ஆக்‌ஷன் காட்சிகளை வடிவமைத்துள்ளார்.

 

இப்படம் குறித்து படத்தின் நாயகனும் தயாரிப்பாளருமான ஜெகன் கூறுகையில், “உளுந்தூர்பேட்டையில் தங்கி, அங்கிருந்து சென்னை, மதுரை கோவை, சேலம் என அனைத்து திசையிலும் தினசரி பயணித்து படப்பிடிப்பு நடத்தினோம்.. குறிப்பாக வாகனங்கள் பரபரப்பாக சென்றுகொண்டு இருக்கும்போத லைவ்வாக படப்பிடிப்பு நடத்தினோம்.. இதில் ஒரு காட்சியை படமாக்கும்போது சிறிய தவறு  நிகழ்ந்தாலும், ரீடேக் எடுப்பது தான் எங்களுக்கு சவாலான விஷயமாக இருந்தது. காட்சியை படமாக்கிய இடத்திற்கே திரும்பி வருவதற்காக மீண்டும் சில கிலோமீட்டர்கள் பயணித்து சுற்றிவர வேண்டி இருந்தது.

 

அதேபோல இப்படி ஒருமுறை மிகவும் சிரமப்பட்டு செலவு செய்து ரயில் சம்பந்தப்பட்ட காட்சி ஒன்றை படமாக்கினோம்.. ஆனால் அந்த காட்சியை ஹார்ட் டிஸ்க்கில் காபி பண்ணிவிட்டோம் என நினைத்து தவறுதலாக அழித்து விட்டார்கள். மீண்டும் செலவு வேண்டாமே என்கிற எண்ணத்தில் அதை எப்படியாவது வேறு விதமாக மேட்ச் பண்ணிவிடலாம் என இயக்குனர் கூறினார். ஆனால் செலவானாலும் பரவாயில்லை என மீண்டும் அந்தக்காட்சியை மறுநாள் படமாக்கினோம்.   

 

இந்தப்படத்தை முடித்ததும், இயக்குனர் ஹெச்.வினோத்திடம் படத்தை போட்டு காட்டினோம்.. படம் பார்த்துவிட்டு நன்றாக வந்திருப்பதாகபாராட்டினார். மேலும், தான் சதுரங்க வேட்டை படம் எடுத்தபோது கூட, பலதரப்பட்ட கருத்துக்களை சொன்னார்கள். அதன் பிறகு தியேட்டர் சூழ்நிலையில் பொதுமக்கள் மத்தியில் வரும் போது மிகவும் பாராட்டப்பட்டது. அதனால்  படம் எப்படி வந்துள்ளது என்கிற கருத்துக்களை தெரிந்துகொள்ள நினைத்தால் பொதுமக்களை அழைத்து தியேட்டரில் திரையிட்டு அவர்களது கருத்துக்களை கேளுங்கள்.. அதுதான் சரியாக இருக்கும் என ஆலோசனையும் கூறினார்.

 

அதனால் வழக்கமாக சென்னையில் திரையுலகினர் மற்றும் நண்பர்கள் வட்டாரத்தை அழைத்து சிறப்பு காட்சியை திரையிட்டு காட்டுவதற்கு பதிலாக திருநெல்வேலி ஆலங்குளத்தில் உள்ள பிரபல திரையரங்கம் ஒன்றில் அந்தப்பகுதி மக்களை அழைத்து இந்தப்படத்தை திரையிட்டு காட்டினோம்.. எங்கள் வேலைக்கான அங்கீகாரம், அந்த சராசரி மக்களின் பாராட்டுக்களிலேயே கிடைத்தபோது இன்னும் நம்பிக்கை ஏற்பட்டது. சென்னையில் சிறப்பு காட்சி திரையிட்டபோதும் அதே ரிசல்ட் கிடைத்ததில் இன்னும் நம்பிக்கை ஆனோம். இதை தொடர்ந்து, இந்தப்படத்தை தியேட்டர்களில் தான் ரிலீஸ் செய்யவேண்டும் என முடிவு செய்தோம்.  விரைவில் அதுகுறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும்.” என்றார்.