Sep 28, 2017 05:21 PM

அல்பத்தனமாக நடந்துக்கொண்ட டி.ஆர் - அழுதுக்கொண்டே ஓடிய தன்ஷிகா!

அல்பத்தனமாக நடந்துக்கொண்ட டி.ஆர் - அழுதுக்கொண்டே ஓடிய தன்ஷிகா!

‘அவள் பெயர் தமிழரசி’ படத்தை இயக்கிய மீரா கதிரவன், இயக்கியுள்ள படம் ‘விழித்திரு’. விதார்த், கிருஷ்ணா ஆகியோர் ஹீரோக்களாக நடித்துள்ள இப்படத்தில் இயக்குநர் வெங்கட் பிரபு, பாடகரும் தயாரிப்பாளருமான எஸ்.பி.பி.சரண், தம்பி ராமைய்யா, பேபி சாரா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிதிருக்க, தன்ஷிகா, அபிநயா ஆகியோர் ஹீரோயின்களாக நடித்துள்ளார்கள். இதில் நடிகரும் இயக்குநருமான டி.ராஜேந்தர் ஒரு பாடலை பாடி நடனம் ஆடியுள்ளார்.

 

வரும் அக்டோபர் மாதம் 6 ஆம் தேதி வெளியாக உள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று மாலை நடைபெற்றது.

 

நிகழ்ச்சியில் தன்ஷிகா, கிருஷ்ணா, விதார்த், வெங்கட்பிரபு உள்ளிட்ட படக்குழுவினருடன் டி.ராஜேந்தரும் கலந்துக்கொண்டார். நிகழ்ச்சியில் தன்ஷிகா பேசும் போது, டி.ஆர் பற்றி பேசாமல் விட்டுவிட்டார். கடைசியாக பேசிய டி.ஆர், எப்போதும் போல, அடுக்கு மொழி, தனது தலை முடி பற்றியெல்லாம் பேசி கடுப்பேற்றியவர், தன்ஷிகா தனது பெயரை சொல்லாததை சுட்டிக்காட்டி அவரை மேடையிலேயே திட்ட ஆரம்பித்துவிட்டார்.

 

“கபாலியில் நடித்ததால் நீ என்ன பெரிய ஆளா, பண்பாட கத்துக்கனும். ரஜினி கூட நடிச்சா இந்த டி.ஆரை தெரியாதா?, நான் பல அரசியல் மேடைய பாத்தவன், மேடையில யார் இருக்கா என்று பார்த்து ஒருத்தரை விடாமல் அனைவரை பற்றியும் பேசுவேன். ஆனால், அந்த நாகரிகத்த கத்துக்கணும். நான் எல்லாம் ஹன்சிகாவையே விரட்டனவன், நீ என்ன தன்ஷிகா” என்று நிகழ்ச்சி மேடையிலேயே பேச தொடங்கிவிட்டார்.

 

உடனே மைக்கை எடுத்த தன்ஷிகா, “சார் உங்க மேல நான் ரொம்ப மரியாதை வச்சிருக்கேன். ஆனால், ஏதோ பதட்டத்துல உங்கல மறந்துட்டேன். மன்னிச்சிடுங்க” என்று மன்னிப்பு கேட்ட பிறகும், விடாமல் பேசிய டி.ஆர், மைக்க வச்சிடு, முதல்லயே நீ பேசி இருக்கணும். பத்து மாசத்துல தான் புள்ள பெத்தக்கணும், மத்து மாசம் கழிச்சி பெத்துக்க முடியுமா?” என்று அநாகரிகமாக பேசியதோடு, நீ புடவை கட்டினு வரல, என்று சம்மந்தம் இல்லாமல் பேசினார்.

 

தனது பெயரையும், தன்னை பற்றியும் அனைவரும் பேச வேண்டும் என்ற அல்பத்தனத்தோடு, தொடர்ந்து தன்ஷிகாவை டி.ஆர் திட்டிக்கொண்டிருக்க, ஒரு கட்டத்தில் தன்ஷிகா அழுதுவிட்டார். அவரால் அழுகையை கட்டுப்படுத்த முடியாமல், தொடர்ந்து அழுதுக்கொண்டிருந்ததோடு, நிகழ்ச்சி முடிந்ததும் புகைப்பட கலைஞர்களுக்கு போஸ் கொடுக்காமல், அந்த இடத்தில் இருந்து அழுதுக்கொண்டே சென்று விட்டார்.

 

டி.ஆர்-ன் இத்தகைய நடவடிக்கையால் அங்கிருந்த பத்திரிகையாளர்கள் அதிருப்தி அடைந்தனர். பேட்டி கேட்டாலோ, புகைப்பட கலைஞர்கள் போட்டோ எடுக்க வேண்டும், என்று கேட்டாலோ, எந்தவித பந்தாவும் காட்டாமல் உடனே ஓகே சொல்லும் தன்ஷிகா போன்ற ஒரு நடிகையை டி.ஆர் இப்படி பொது இடத்தில் வைத்து அவமானப்படுத்தியது, அவரை அவர் கேவளப்படுத்திக் கொண்டதற்கு சமமாகும்.

 

தன்ஷிகா செய்தது தவறாக இருந்தாலும், அதை அவரிடம் நாசுக்காக சொல்லியிருக்கலாம். அதைவிட்டுவிட்டு, நிகழ்ச்சி மேடையிலேயே அவரிடம் வாக்கு வாதம் செய்வது போலவும், அடுக்கு மொழியில் பேசியும் அவரை அவமானப்படுத்திய டி.ஆர் அவரை ஒரு நடிகையாக பார்க்காமல் பெண்ணாக பார்த்திருக்க வேண்டும்.