கொள்ளைகார கூட்டத்துக்கு சவுக்கடி கொடுக்கும் 'நரிவேட்டை' - ட்ராபிக் ராமசாமி ஆவேசம்..!
சேனல் ஆகாஷ் ஸ்டுடியோ என்னும் புதிய நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘நரிவேட்டை’. இந்தப்படத்தின் கதை திரைக்கதை எழுதி இயக்கியுள்ளதுடன் கதாநாயகனாகவும் நடித்துள்ளார் ஆகாஷ் சுதாகர். நாயகியாக புதுமுகம் மகாலட்சுமி நடிக்க, இவர்களுடன் நெல்லை சிவா, போண்டா மணி, கிங்காங், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
சார்லஸ் தனா இசையமைத்துள்ள இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக ட்ராபிக் ராமசாமி, ஜாக்குவார் தங்கம், தயாரிப்பாளர் அசோக் லோதா. ‘அய்யனார் வீதி’ பட இயக்குநர் ஜிப்ஸி ராஜ்குமார் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தி பேசினார்கள்.
பொதுவாக போராட்ட களங்களில் மட்டுமே கலந்துகொள்கின்ற, இதுபோன்ற திரைப்பட நிகழ்வுகளில் அதிகம் கலந்துகொள்ளாத ஐயா ட்ராபிக் ராமசாமி, இந்த விழாவில் கலந்துகொண்டார் என்றால் அது இயக்குநர் ஆகாஷ் சுதாகருக்காகவும் ‘நரிவேட்டை’ படத்தில் சொல்லப்பட்டிருக்கும் சமூக கருத்துக்காகவும் தான்.
இந்தப்படம் குறித்து ட்ராபிக் ராமசாமி பேசும்போது, “இன்றைக்கு பல நடிகர்கள் நிஜத்திலும் நடிச்சிட்டு இருக்காங்க. ஆனால் நான் நடிப்பை செயல்ல காட்டுறவன். சமூகத்துல நடக்கிற அவலங்களுக்கு எதிரா தனி ஆளா போராடினா மட்டும் பத்தாது. மொத்தமா ஒன்று திரண்டு போராடணும் என்பதை நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். அதே கருத்தை வலியுறுத்தி தான் இந்தப்படத்தை இயக்கியுள்ளார் ஆகாஷ் சுதாகர். இந்தப்படத்தில் இவர் நடித்துள்ள வேம்புலி கேரக்டரை பார்க்கும்போது ட்ராபிக் ராமசாமி என்கிற பெயரைத்தான் வேம்புலி என்கிற பெயராக மாற்றிவிட்டாரோ என்று நினைக்கிறன். இந்தப்படம் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு, நம்மைச்சுற்றி இருக்கும் கொள்ளைக்கார கூட்டத்துக்கு சவுக்கடிகொடுக்கும் விதமாக இருக்கும் என நம்புகிறேன்” என்று தெரிவித்தார்.
அடுத்ததாக வாழ்த்திப் பேசிய ஜாக்குவார் தங்கம், “இந்தப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘வேம்புலி வர்றான்’ பாடலுக்கு தியேட்டரில் பலரும் சாமியாட்டம் ஆடப்போவது உறுதி. இந்தப்படத்தின் ரிலீஸுக்கு என்னால் முடிந்த உதவிகளை தயங்காமல் செய்வேன். அதுமட்டுமல்ல, தற்போது சிறு பட்ஜெட் பட தயாரிப்பளர்களை நட்டத்தில் இருந்து காப்பாற்றுவதற்கு புதிய திட்டம் ஒன்றை செயல்படுத்த இருக்கிறோம்.
இதன்படி சிறு பட தயாரிப்பாளர்கள் ரிலீஸுக்கு முன்பே எங்களிடம் படத்தை ஒப்படைத்துவிட்டால், தமிழ்நாடு முழுதும் உள்ள கேபிள் டிவிக்களில் ஒளிபரப்பும் முறையில் சுமார் ஐந்து கோடி வரை ஒரு படத்துக்கு வருமானம் பார்க்க முடியும். அதில் தயாரிப்பாளரின் பங்காக சுமார் இரண்டரை கோடி ரூபாய் இந்த முறையிலேயே கிடைத்துவிடும். இன்னும் நான்கு மாதங்களுக்குள் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட இருக்கிறது.” என்று படக்குழுவினருக்கு நம்பிக்கை ஊட்டும் விதமாக பேசினார்.
இறுதியாக மேடையேறிய ’அய்யனார் வீதி’ இயக்குநர் ஜிப்ஸி ராஜ்குமார், படக்குழுவினரை வாழ்த்தி பேசியதுடன், அடுத்ததாக அவர்கள் எதிர்கொள்ள வேண்டியுள்ள யதார்த்த நிலையையும் சுட்டிகாட்டினார். “பல நரிகள் ஒன்று சேர்ந்தால் பலம் வாய்ந்த சிங்கத்தையே சாய்த்துவிடும் என்று ஜாக்குவார் தங்கம் சொன்னார். அவ்வளவு ஏன் ஒரே ஒரு நரி மட்டும் கூட தனது தந்திரத்தால் ஒரு சிங்கத்தை வீழ்த்திவிடும். இன்று இந்த விழாவில் இயக்குநரின் நண்பர்கள், ஊர்க்காரர்கள் என பலரும் வந்து ஆதரவாக நின்று வாழ்த்துகின்றீர்கள். ஆனால் வெறும் கைதட்டலுடன் இந்த விழாவுடன் அப்படியே இந்த ஆதரவு நின்று போய்விட கூடாது. நாளை இந்தப்படம் ரிலீசாவதற்குள் பல பிரசன்னைகளை எதிர்கொள்ள நேரிடலாம். அப்போதும் இதே ஆதரவை ஒட்டுமொத்தமாக நீங்கள் அளிக்க வேண்டும். பார்த்தால் பசிதீரும் என்று காமராஜர் சொன்னார். அதே மாதிரி நீங்க பார்த்துக்கிட்டே இருந்தால் தான் பசி தீரும். உலகமே எதிர்த்தாலும் ஊர்க்காரங்க துணையிருந்தா எந்த மோதலையும் ஜெயிக்கலாம்” என படக்குழுவினருக்கு உத்வேகம் ஊட்டியதுடன், ஊர்மக்களின் ஆதரவும் இயக்குநருக்கு தொடர்ந்து இருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
பாலியல் வன்கொடுமைக்கு எதிராக இந்த ‘நரிவேட்டை’ படம் உருவாக்கப்பட்டுள்ளது. ஓர் ஊரில் உள்ள முக்கியமான நான்கு பேரால் ஒரு பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்படுகிறார். அந்தபெண்ணின் நிலை அடுத்து என்ன ஆனது, அந்த நான்கு பேரும் என்ன ஆனார்கள் என்பதுதான் இந்தப்படத்தின் கதை,
நகைச்சுவை நடிகர் போண்டாமனியின் மகன் இந்தப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். படத்தின் கதாநாயகி மகாலட்சுமி வேகமாக பைக் ஓட்டுவதில் கைதேர்ந்தவராம். இந்தப்படத்தின் ஷூட்டிங் ஏற்காட்டில் நடைபெற்றபோது, அங்கே ‘வேம்புலி வர்றான்’ என்கிற சாமி பாடல் படமாக்கப்பட்டபோது இந்தப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள சீனியர் நடிகரான விஜய் கண்ணன், நிச்சயமாக மழை பெய்யும் பாருங்கள் என கூறினாராம். படக்குழுவினர் யாரும் அதை நம்பாத நிலையில், மழை அடித்து ஊற்றியதாம். இதைப்பார்த்து மகிழ்ந்துபோன ஊர்மக்கள் கிடாவிருந்து அளித்து படக்குழுவினரை திக்குமுக்காட வைத்துவிட்டார்களாம்.
இயக்குநர் (ஆகாஷ்) சுதாகர், கேன்சரினால் உயிர்நீத்த தனது மகன் ஆகாஷின் நினைவாக தனது பெயரை ஆகாஷ் சுதாகர் என மாற்றிக்கொண்டவர். மகனின் கவிதைகளுக்கு இசை வடிவம் கொடுப்பதற்காகவே திரைப்படம் எடுக்க முன்வந்தவர். இந்த நரிவேட்டை படத்தை முடித்த கையுடன், அடுத்ததாக ஒரு படத்தையும் இயக்கி முடித்துவிட்டு, இப்போது மூன்றாவதாக ஒரு படத்தையும் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமல்ல, ஆதரவற்ற ஐம்பதுக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு தான் நடத்திவரும் காப்பகம் மூலம் படிக்க வசதி செய்துகொடுத்தும் வருகிறார். அந்த குழந்தைகள் தன்னை அன்போடு அப்பா என்று அழைப்பதில் தனது சொந்த சோகத்தை மறக்கிறார்.
அந்த ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்திற்காக உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு ஏலகிரி, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் சென்னை, அதன் சுற்றுப்புறங்களில் நடைபெற்று, தற்போது ரிலீசுக்கு தயார் நிலையில் உள்ளது.