Sep 13, 2022 04:36 PM

சேலம் மக்களுக்கு உதவிதொகை வழங்கிய ’மாமன்னன்’ உதயநிதி!

சேலம் மக்களுக்கு உதவிதொகை வழங்கிய ’மாமன்னன்’ உதயநிதி!

’நெஞ்சுக்கு நீதி’ திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் ‘மாமன்னன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். ‘பரியேறும் பெருமாள்’ மற்றும் ‘கர்ணன்’ படங்களை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்க, வடிவேலு முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கிறார்.

 

சட்டமன்ற உறுப்பினராக தனது தொகுதி மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்த உதயநிதி, மக்களின் குறைகளை கேட்டு உடனுடக்குடன் செய்து கொடுத்து வருகிறார். மேலும், தான் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நடைபெறும் தமிழக பகுதிகளிலும் மக்களுக்கு பல நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். அந்த வகையில், ‘மாமன்னன்’ படப்பிடிப்பு நடைபெற்று வரும் சேலம் மக்களுக்கு உதயநிதி ஸ்டாலின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்துள்ளார்.

 

சேலம் மாவட்டம், ஜருகுமலையில் உள்ள அரசு பள்ளிக் கட்டிடம் ‘நமக்கு நாமே’ திட்டத்தில் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. அதற்காக உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை சார்பில், ரூ.13,60,000 வழங்கப்பட்டுள்ளது. மேலும், ஜருகுமலை மலைப் பாதையில் வளைவில் எதிர்வரும் வாகனங்கள் தெரிந்து கொள்ளும் வகையில் (குவியாடி) Convex Mirror 10 அமைத்துக் கொடுக்கப்படுகிறது.

 

Udhayanithi

 

ஜருகுமலையில் வசிக்கும் இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் மற்றும் மாற்றுத் திறனாளி பெண்ணுக்கு மளிகை கடை வைக்க மளிகை பொருட்கள் ஆகியவை வழங்கப்பட்டது.

 

மாணவ, மாணவிகள், கைம்பெண்கள், திருநங்கைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் என மொத்தம் 55 நபர்களுக்கு உதவித் தொகை என அனைத்து நலத்திட்ட உதவிகள் மற்றும் நிதி உதவி ஆகியவை ’மாமன்னன்’ படப்பிடிப்பு தளத்தில் வழங்கப்பட்டது.

 

maamannan

 

இந்த நிகழ்வில் அடிசனல் கலெக்டர் பால்சந்தர், சேலம் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி முருகன், ரெட் ஜெயண்ட் மூவிஸின் இணை தயாரிப்பாளர் எம்.செண்பகமூர்த்தி, ‘மாமன்னன்’ படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜ், நடிகர் பஹத் பாசில், ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர், உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை அறங்காவலர் பி.கே.பாபு, ராஜா, ராஜ்குமார், தர்மராஜ், நடராஜ் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டார்கள்.