Oct 12, 2021 03:34 AM

சாதி படம் எடுப்பவர்களுக்கு சவுக்கடி கொடுக்க வரும் ‘வா பகண்டையா’

சாதி படம் எடுப்பவர்களுக்கு சவுக்கடி கொடுக்க வரும் ‘வா பகண்டையா’

சினிமா என்பது பொழுதுபோக்கையும் தாண்டி, மக்களிடம் செய்திகளை கொண்டு சேர்க்க கூடிய மிக்கப்பெரிய ஊடகமாகும். அதை வைத்துக்கொண்டு மக்களை நல்வழிப்படுத்தவும் முடியும், நாசமாக்கவும் முடியும், என்பதை தமிழ் சினிமாவில் சமீபத்தில் வெளியான சில படங்கள் நிரூபித்துக் கொண்டு வருகிறது. அந்த வகையில், கமர்ஷியலாக உருவாகியிருந்தாலும், சமூக அவலங்களை பேசும் ஒரு திரைப்படமாக உருவாகியுள்ளது ‘வா பகண்டையா’.

 

அறிமுக இயக்குநர் ப.ஜெயகுமார் கதை, திரைக்கதை வசனம் எழுதி இயக்கியிருப்பதோடு, தனது ஒளி ரெவல்யூசன் நிறுவனம் சார்பில் தயாரித்தும் இருக்கிறார்.

 

‘வா பகண்டையா’ என்பது ஒரு கிராமத்தின் பெயர். விழுப்புரம் மாவட்டத்தில் இருக்கும் அந்த கிராமம் தான் கதைக்களம் என்பதால் படத்தின் தலைப்பாக அந்த பெயரையே வைத்துவிட்டேன், என்று கூறிய இயக்குநரும் தயாரிப்பாளருமான ப.ஜெயகுமார், சமூகத்தில் நடக்கும் அவலங்களை தான் இப்படம் பேசுகிறது என்றாலும், காதல், காமெடி, நகைச்சுவை என அனைத்து ஜனரஞ்சகமான அம்சங்களும் நிறைந்த ஒரு முழுமையான பொழுதுபோக்கு படமாக இருக்கும், என்றும் கூறினார்.

 

படம் குறித்து மேலும் கூறியவர், இன்று சாதியை மையப்படுத்திய திரைப்படங்களின் வருகை அதிகரித்துள்ளது. ஒரு தரப்பினர் தாங்கள் அனுபவித்த இன்னல்களை சொல்லி படம் எடுக்கிறார்கள். மற்றொரு தரப்பினர், ஒடுக்கப்பட்டவர்களை காப்பாற்ற போடப்பட்ட, வன்கொடுமை தடுப்பு சட்டம் வேண்டாம், என்ற கருத்தை முன்னிலைப்படுத்தி படம் எடுக்கிறார்கள். இதன் மூலம் சாதி பாகுபாடே இல்லாத ஒரு இடமாக இருந்த சினிமாவில் சாதி பிரிவினையை உருவாக்கிய இவர்களை முதலில் ஒழிக்க வேண்டும். இவர்களின் கருத்துக்களை மக்கள் மனதில் இருந்து அழிக்க வேண்டும், என்பது தான் என் கருத்து. அந்த கருத்தை அழுத்தமாக படத்தில் பேசியிருக்கிறோம், என்றார்.

 

உங்கள் படத்திலும் சாதியை பற்றி பேசியிருக்கிறீர்களா? என்று ப.ஜெயகுமாரிடம் கேட்டதற்கு, “சாதியை பற்றி மட்டும் நான் பேசவில்லை. இந்து கடவுல்களால் தான் சாதி பிரிவினை உருவானது என்ற பொய்யான குற்றச்சாட்டை உடைத்தெரிந்திருக்கிறேன். இங்கு சாதியை காட்டி இந்துக்களை மதம் மாற்றம் செய்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், இங்கு மாறவேண்டியது மதம் அல்ல மக்கள் தான். மக்களின் மனங்களில் இருக்கும் சாதி உணர்வை மாற்றிக்கொள்ள வேண்டுமே தவிர, மதத்தை அல்ல. நம் இந்து மதம் மிகவும் புனிதமானது. ஆனால், அதை சிலர் கொச்சைப்படுத்தும் வகையில் பேசிக்கொண்டிருப்பதோடு, மக்கள் மனதில் பல தவறான கருத்துக்களை விதைக்கிறார்கள். அவர்களுக்கு என் படம் சவுக்கடி கொடுப்பது உறுதி, என்று பதில் அளித்தார்.

 

வன்கொடுமை தடுப்பு சட்டம் குறித்து உங்கள் படத்தில் என்ன பேசியிருக்கிறீர்கள்? என்று கேட்டதற்கு, வன்கொடுமை தடுப்பு சட்டம் வேண்டாம், என்று சொல்லும் கருத்தை நான் ஏற்க மாட்டேன். அதே சமயம், வன்கொடுமை தடுப்பு சட்டத்தால் சில அப்பாவிகள் பாதிக்கப்படக்கூடாது. அதனால், அந்த சட்டத்தில் சில மாற்றங்களை செய்ய வேண்டும். தாழ்த்தப்பட்டவர்களை பாதுகாப்பதற்காக இயற்றப்பட்ட அந்த சட்டத்தைக் கொண்டு, உயர் சாதி என்று சொல்லக்கூடிய சில அப்பாவிகளை, பலர் பழிவாங்குவது, மிரட்டுவது போன்ற சம்பவங்கள் நடக்கின்றன. அதை தடுக்க வேண்டும், என்று என் படம் வலியுறுத்தியுள்ளது.

 

அதுமட்டும் அல்ல, இன்று பலர் எதிர்க்கும் மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்தால், இஸ்லாமியர்களுக்கு பாதிப்பு என்ற தவறான கருத்துக்களை மக்கள் மனதில் பலர் பரப்புகிறார்கள். ஆனால், அந்த சட்டங்களால் இஸ்லாமியர்களுக்கும், நம் நாட்டுக்கும் எத்தகைய பாதுகாப்பு கிடைக்கிறது, என்பதை மிக தெளிவாக பேசியிருக்கிறேன். பிரதமர் மோடி மற்றும் அவர் கொண்டு வரும் திட்டங்களை தமிழகத்தில் தொடர்ந்து எதிர்த்து வருவதோடு, அதை தவறாகவும் சித்தரித்து வருகிறார்கள். ஆனால், என் படம் வெளியான பிறகு பிரதமர் மோடியையும், அவருடைய திட்டத்தையும் தமிழக மக்கள் கொண்டாடுவார்கள், என்றார்.

 

Vaa Pagandaya

 

’வா பகண்டையா’ படத்தின் புதிய டிரைலர் பார்க்க இங்கே க்ளீக் செய்யவும்

 

இந்த படம் பா.ஜ.க-வுக்கு ஆதரவான அல்லது அவர்களுடைய கருத்துக்களை மக்களிடம் கொண்டு செல்லும் படம் தெரிகிறதே...அப்படிப்பட்ட படம் தானா? என்றதற்கு, நிச்சயம் இல்லை. மக்களுக்கு நல்ல விஷயங்களை சொல்ல வேண்டும். அவர்களை முட்டாளாக்கும் சிலரின் முகத்திறயை கிழிக்க வேண்டும், என்பதே என் நோக்கம். அதற்கான விஷயங்களை மட்டுமே படத்தில் பேசியிருக்கிறோம். இப்போது எதையும் விரிவாக சொல்ல முடியாது. படம் பார்த்தால் உங்களுக்கே புரியும். குறிப்பாக பெண்களுக்கு ஆதரவாகவும், தனிமனித பொருளாதாரத்தின் அடிப்படையிலேயே தீண்டாமை உருவாகிறது, என்பதை பற்றி படம் பேசும். தாழ்த்தப்பட்ட சமூகத்தில் மட்டும் அல்ல, உயர் சாதியில் இருந்தால் கூட, இங்கு பெண்களை ஒருவித அடிமைகளாகத்தான் நடத்துகிறார்கள். அப்படி இருக்க கூடாது, என்று படம் குரல் கொடுக்கும். மொத்தத்தில், ‘வா பகண்டையா’ சமூகத்திற்கான ஒரு படம், என்றார்.

 

படத்தில் ஏகப்பட்ட சர்ச்சையான விஷயங்கள் இருக்கும் போலிருக்கு, எதிர்ப்பு வந்தால் என்ன செய்வீர்கள்? என்று கேட்டதற்கு, எப்படிப்பட்ட எதிர்ப்புகள் வந்தாலும், அதை சட்ட ரீதியாக எதிர்கொள்ள நான் தயாராக இருக்கிறேன். சர்ச்சையை உருவாக்கி அதன் மூலம் பணம் சம்பாதிக்கும் எண்ணம் எனக்கு இல்லை. என் படம் ஓடவில்லை என்றால் கூட நான் கவலைப்பட மாட்டேன், காரணம் நான் பணத்திற்காக படம் எடுக்கவில்லை. மக்களை நல்வழிப்படுத்தவும், என் இந்து சமயத்தை காப்பாற்றவும் தான் படம் எடுக்கிறேன். அதை தொடர்ந்து செய்துக்கொண்டு தான் இருப்பேன். இதற்கு தடையாக வருபவர்களை நிச்சயம் எதிர்த்து நிற்பேன். அதே சமயம், எனக்கு ஆதரவு கொடுப்பவர்களை பின்னாடி வைத்துக்கொண்டு என் படத்தை வியாபாரம் செய்யும் வேலையை என்றும் செய்ய மாட்டேன். மொத்தத்தில் நான் மக்களுக்காக படம் எடுக்கிறேன். இது என் படம் என்பதை விட, மக்கள் படம் என்று தான் சொல்வேன், என்றார்.

 

’வா பகண்டையா’ படத்தின் இசை வெளியீட்டு விழா கோலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு, அன்று வெளியிடப்பட்ட டிரைலர் பலரது புருவத்தை உயர்த்தியது. தற்போது வெளியாகியிருக்கும் புது டிரைலரால் தமிழகத்தின் முக்கிய பிரமுகர்களின் பார்வை இயக்குநரும், தயாரிப்பாளருமான ப.ஜெயகுமார் மீது விழுந்திருப்பதோடு, படத்தின் மீது பெரும் எதிர்ப்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

 

ஹீரோவாக அறிமுக நடிகர் விஜய தினேஷ் நடிக்க, அறிமுக நடிகை ஆர்த்திகா ஹீரோயினாக நடித்திருக்கிறார். வில்லனாக அறிமுக நடிகர் நிழன் நடிக்க, மற்றொரு வில்லனாக மும்பை நடிகர் யோகி ராம் நடிக்கிறார். இவர்களுடன் ஆர்.சுந்தர்ராஜன், நிழல்கள் ரவி, மீரா கிருஷ்ணன், ‘வெண்ணிலா கபடி குழு’ புகழ் நித்திஷ் வீரா, பவர் ஸ்டார் சீனிவாசன், மனோபாலா, காதல் சுகுமார், பிளாக் பாண்டி, போண்டா மணி ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

 

எஸ்.ஏ.ராஜ்குமார் இசையமைத்து பாடல்கள் எழுதியுள்ளார். ஆரி ஆர்.ஜே.ராஜன் ஒளிப்பதிவு செய்ய, சுரேஷ் அர்ஸ் படத்தொகுப்பு செய்கிறார். சிவசங்கர், அக்‌ஷை ஆனந்த், விஜி ஆகியோர் நடனம் அமைக்க, இடி மின்னல் இளங்கோ சண்டைக்காட்சிகளை வடிவமைக்கிறார். மக்கள் தொடர்பாளராக கோவிந்தராஜ் பணியாற்றுகிறார்.

 

படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து வெளியீட்டுக்கு தயாராக உள்ள ‘வா பகண்டையா’ விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.