Feb 22, 2022 09:25 AM

’மேதகு’ பட இயக்குநரின் இயக்கத்தில் உருவாகும் ‘சல்லியர்கள்’ படத்தின் டீஸர் வெளியானது

’மேதகு’ பட இயக்குநரின் இயக்கத்தில் உருவாகும் ‘சல்லியர்கள்’ படத்தின் டீஸர் வெளியானது

ஈழத்தமிழர்களின் வரலாற்றை ’மேதகு’ படம் மூலம் மிக தெளிவாக படம்பிடித்து உலகத்தமிழர்களிடம் பாராட்டு பெற்ற இயக்குநர் கிட்டு இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘சல்லியர்கள்’.

 

நடிகர் கருணாஸ்  தயாரித்து முக்கியமான கதாப்பாத்திரம் ஒன்றில் நடித்திருக்கும் இப்படத்திற்கு கருணாஸின் மகன் கென், ஈஸ்வர் என்பவருடன் இணைந்து இசையமைத்துள்ளார். சிபி சதாசிவம் ஒளிப்பதிவு செய்ய,  சி.எம்.இளங்கோவன் படத்தொகுப்பு செய்கிறார். சரவெடி சரவணன் மற்றும் பிரபாஹரன் வீரராஜ் சண்டைக்காட்சிகளை வடிவமைக்க, முஜிபூர்  ரஹ்மான் கலை இயக்குநராக  பணியாற்றியுள்ளார்.

 

போர்க்களத்தில் காயம்பட்ட தமிழ் வீரர்கள் மட்டுமல்லாது எதிரி வீரர்களையும் காப்பாற்றி, போரில் கூட தமிழர்கள் எவ்வாறு அறம் சார்ந்து செயல்பட்டுள்ளனர் என்பதை மையப்படுத்தி, குறிப்பாக போர் மருத்துவ பின்னணியில் இந்தப்படம் உருவாகியுள்ளது.

 

சத்யா தேவி என்பவர் டாக்டர் நந்தினியாக முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரது தந்தையாக கருணாஸும், ஆர்மி வில்லன் களவாணி புகழ் திருமுருகனும் மற்றும் டாக்டர் செம்பியனாக மகேந்திரனும் நடித்துள்ளனர். மற்றபடி பெரும்பாலும் புதுமுகங்களே இந்தப்படத்தில் நடித்துள்ளனர்.

 

படத்தில் முக்கால் மணி நேரம் ஒரு முக்கிய பகுதியில் காட்சிகள் நடைபெறும். அதாவது முதன்முறையாக இந்தப்படத்திற்காக பதுங்கு குழிக்குள் மருத்துவம் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கி இருக்கின்றனர். இதற்காக நிஜமாகவே மண்ணுக்கு கீழே பதுங்கு குழி தோண்டி அதில் மருத்துவ முகாம் அமைத்து படப்பிடிப்பு நடத்தியுள்ளனர்.

 

இப்படத்தின் டீஸரை கவிப்பேரரசு வைரமுத்து நேற்று (பிப்.21) மாலை 6 மணிக்கு வெளியிட்டு படக்குழுவினரை வாழ்த்தினார். டீஸர் வெளியான சில மணி நேரங்களில் லட்சக்கணக்கான பார்வையாளர்களை கடந்து பெரும் வரவேற்பு பெற்றது.

 

 

தற்போது டீஸர் வெளியாகியுள்ள நிலையில் படத்தை தியேட்டர்களில் ரிலீஸ் செய்யும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.