Feb 11, 2023 05:05 PM

24 மணி நேரத்தில் 2 மில்லியனுக்கு மேலான பார்வையாளர்களை கடந்த ‘விடுதலை 1’ பட பாடல்!

24 மணி நேரத்தில் 2 மில்லியனுக்கு மேலான பார்வையாளர்களை கடந்த ‘விடுதலை 1’ பட பாடல்!

ஆர்எஸ் இன்ஃபோடெயின்மெண்ட் எல்ரெட் குமார் தயாரிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய்சேதுபதி மற்றும் சூரி முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ’விடுதலை- பாகம் 1’ படத்தில் இருந்து ”உன்னோட நடந்தா...” முதல் பாடல் வெளியாகியுள்ளது. இதன் அறிவிப்பு வந்ததில் இருந்து  பாடல் குறித்தான எதிர்பார்ப்பு அதிகம் நிலவியது. குறிப்பாக இசைஞானி இளையராஜா மற்றும் தனுஷ் இருவரின் பாடல் பதிவு செய்யும் புரோமோ வீடியோவுக்கான காட்சிகளும் இளையராஜா மற்றும் தனுஷ் இருவரின் நகைச்சுவைப் பேச்சும் என இந்த பாடலுக்கான எதிர்பார்ப்பு இன்னும் அதிகமாகியது.

 

நீண்ட காலமாக மனதை மயக்கும் மெலோடி பாடலை எதிர்பார்த்து காத்திருந்த இசை ஆர்வலர்களுக்கு இந்த பாடல் உடனடி இசை போதையாக மாறியிருக்கிறது. தனுஷின் கவர்ச்சியான குரல், பாடலாசிரியர் சுகாவின் மயக்கும் வரிகள், அனன்யா பட்டின் தேன் கலந்த குரல், வசீகரிக்கும் இசை போன்றவை இந்தப் பாடலை மேலும் பிடிக்கச் செய்திருக்கிறது.

 

உலக அளவில் இந்தப் பாடல் வெற்றிப் பெற்றிருப்பதோடு இப்போதைய தலைமுறையும் இசைஞானியின் இசை விருந்தை கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர். பாடல் வெளியாகி 24 மணி நேரத்திற்குள்ளேயே 2 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை கடந்துள்ளது.

 

”உன்னோட நடந்தா” பாடலுக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய வரவேற்பைப் பார்த்து, ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மெண்ட், தயாரிப்பாளர் எல்ரெட் குமார் மற்றும் இயக்குநர் வெற்றிமாறன் இருவரும் இசைஞானி இளையராஜாவை நேரில் சந்தித்து  மலர்கொத்துகளைக் கொடுத்து நன்றி தெரிவித்தனர். இப்போது வெளியாகியுள்ள இந்தப் பாடல் படத்தில் இருந்து வெளியாக இருக்கும் மற்ற பாடல்கள் மீதான எதிர்பார்ப்பையும் கூட்டியுள்ளது. அவையும் வெகுவிரைவில் வெளியாக இருக்கிறது.

 

'விடுதலை பாகம் 1' படத்தின் டப்பிங் பணிகள் சமீபத்தில் தொடங்கி, போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விஜய் சேதுபதி மற்றும் சூரி முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க, பவானி ஸ்ரீ, பிரகாஷ் ராஜ், கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

 

ரெட் ஜெயண்ட் மூவிஸ் இப்படத்தை வெளியிட, ஆடியோ, ட்ரெய்லர் மற்றும் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடுவது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.