விஜய் மற்றும் அஜித் குறும்படங்களில் நடிக்க வேண்டும் - வின் ஸ்டார் விஜய் அறிவுறுத்தல்
’எப்போதும் ராஜா’ படத்தின் மூலம் இயக்குநராகவும், நாயகனாகவும் தமிழ் சினிமாவில் அறிமுகமான வின் ஸ்டார் விஜய், தற்போது ‘மக்கள் தொடர்பாளன்’ என்ற படத்தில் நாயகனாக நடித்து வரும் நிலையில், ‘ஏழையின் சிரிப்பில்’ என்ற குறும்படத்தை இயக்கி நடித்திருக்கிறார்.
உதயசூரியன் கிரியேஷன்ஸ் சார்பில் பி.சோமசுந்தரம் தயாரித்திருக்கும் இந்த குறும்படத்தில் வின் ஸ்டார் விஜய்க்கு ஜோடியாக ஹேமலாதா நடித்திருக்கிறார். இவர்களுடன் பி.சோமசுந்தரம், சாந்தி, தமிழ்காமாட்சி, பிரேம் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அரசு பெண்கள் முன்னேற்றத்திற்கான பல நலத்திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருவதோடு, மக்களின் அத்தியாவாசிய தேவைகளை பூர்த்தி செய்யும் வகையிலும் பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த திட்டங்களை பயன்படுத்தி, குறைந்த பொருளாதாரத்தில் நிறைவாக வாழ்வது எப்படி? என்ற ரகசியத்தை சொல்லும் வகையில் உருவாகியிருக்கும் ‘ஏழையின் சிரிப்பில்’ குறும்படம் வரும் மே 10 ஆம் தேதி யூடியுப் சேனலில் வெளியாக உள்ளது.
இந்த நிலைய்ல், ‘ஏழையின் சிரிப்பில்’ குறும்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில், நாயகன் மற்றும் இயக்குநர் வின் ஸ்டார் விஜய் உள்ளிட்ட படக்குழுவினர்கள் கலந்துக்கொண்டு குறும்படம் பற்றிய தகவல்களை பகிர்ந்துக்கொண்டார்கள்.
நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் மற்றும் நாயகன் வின் ஸ்டார் விஜய், “தமிழக அரசின் பெண்கள் உரிமை திட்டம் உள்ளிட்ட பெண்கள் முன்னேற்றத்திற்கான திட்டங்கள் மற்றும் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் திட்டங்கள் குறித்து மக்களிடம் எடுத்துச் சொல்லும் நோக்கத்தில் தான் இந்த குறும்படத்தை இயக்கியிருக்கிறேன். தற்போதைய காலக்கட்டத்தில் குறைவான பொருளாதாரம் கொண்டு நிறைவாக வாழலாம் என்பதையும், இந்த படத்தில் சொல்லியிருக்கிறோம். 20 நிமிடம் ஓடும் இந்த குறும்படம் மக்களுக்கு தேவையான நல்ல விசயங்களை சொல்லும் குறும்படமாக இருக்கும்.
‘எப்போதும் ராஜா’ என்ற படத்தை இயக்கி நடித்துவிட்ட பிறகு, குறும்படம் இயக்கியது ஏன்? என்று கேட்கிறார்கள். தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருக்கும் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், அசோக் செல்வன் உள்ளிட்ட பலர் குறும்படங்கள் நடித்து அதன் மூலம் முகவரி பெற்றார்கள். குறும்படங்கள் மூலம் மக்களுக்கு பல நல்ல விசயங்களை எளிமையாகவும், வலிமையாகவும் சொல்ல முடியும், எனவே தான் நான் தமிழக அரசின் பல நலத்திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கில் இந்த குறும்படத்தை இயக்கி நடித்திருக்கிறேன். விஜய், அஜித் போன்றவர்கள் விளம்பர படங்களில் நடித்திருக்கிறார்கள், ஆனால் இதுவரை எந்த ஒரு குறும்படங்களிலும் அவர்கள் நடிக்கவில்லை, அவர்களும் குறும்படங்களில் நடித்து மக்களுக்கு நல்ல செய்திகளை சொல்லலாம், தவறில்லை.” என்றார்.
குறும்படத்தை தயாரித்து முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் பி.சோமசுந்தரம் பேசுகையில், “அண்ணாவின் கனவை நினைவாக்கும் விதத்தில் ஏழையின் சிரிப்பில் குறும்படத்தை தயாரித்திருக்கிறோம். 12 வருட முயற்சி மற்றும் கடின உழைப்பால் இயக்குநர் மற்றும் நடிகராக உயர்ந்திருக்கும் வின் ஸ்டார் விஜய், இந்த குறும்படத்தை மிக சிறப்பாக இயக்கியிருக்கிறார். ஏழைகளின் வாழ்க்கை மற்றும் அவர்களின் சிரிப்பில் இறைவனை காண்கிறேன் என்ற அண்ணாவின் கனவுக்கு ஏற்ப இந்த குறும்படம் உருவாகியிருக்கிறது. மே 10 ஆம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளோம்.” என்றார்.
நாயகியாக நடித்திருக்கும் ஹேமலதா பேசுகையில், “மீனா என்ற கதாபாத்திரத்தில் இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்திருக்கிறேன். இப்படி ஒரு வேடத்தில் நான் நடித்தது இது தான் முதல் முறை என்றாலும், ஒரு நல்ல வேடத்தில் நடித்த மனநிறைவு கிடைத்தது, நன்றி.” என்றார்.
மற்றொரு நாயகியாக நடித்திருக்கும் சாந்தி பேசுகையில், “எனக்கு இந்த குறும்படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்த இயக்குநர் வின் ஸ்டார் மற்றும் தயாரிப்பாளருக்கு நன்றி. இந்த குறும்படம் மக்கள் பார்க்க வேண்டிய படம்.” என்றார்.
இணை இயக்குநராக பணியாற்றிய வி.லாவண்யா பேசுகையில், “எனக்கு இது தான் முதல் மேடை, இணை இயக்குநராக எனக்கு வாய்ப்பளித்த படக்குழுவினருக்கு நன்றி. ஏழைகளின் சிரிப்பில் குறும்படம் மக்களுக்கான படமாக இருக்கும்.” என்றார்.
இசையமைப்பாளர் சந்தோஷ் ராம் பேசுகையில், “நான் இரண்டு படங்களுக்கு இசையமைத்துக் கொண்டிருக்கிறேன். இந்த சமயத்தில் தான் இந்த குறும்பட வாய்ப்பு வந்தது. இதில் இரண்டு பாடல்களும் இருக்கிறது. நான் பல குறும்படங்களுக்கு இசையமைத்து கொடுத்திருக்கிறேன். ஆனால், முதல் முறையாக குறும்படத்திற்கு பத்திரிகையாளர் சந்திப்பு என்பதை இப்போது தான் பார்க்கிறேன். இதற்கு வின் ஸ்டார் விஜய் தான் காரணம். அவர் எதையும் பெரிய அளவில் செய்யக்கூடியவர், அப்படி தான் இது குறும்படமாக இருந்தாலும் இதை மக்களிடம் கொண்டு சேர்க்க பல பெரிய விசயங்களை செய்து வருகிறார். நன்றி.” என்றார்.
படத்திற்கு டிஐ செய்திருக்கும் அகரன் பேசுகையில், “வின் ஸ்டார் விஜய் எனக்கு இந்த படத்தின் டிஐ பணிகளை செய்யக்கூடிய வாய்ப்பை கொடுத்தார். படம் சிறப்பாக வந்திருக்கிறது. எந்த ஒரு விசயத்தையும் வித்தியாசமாக செய்யக்கூடியவர் வின் ஸ்டார் விஜய். அதனால் தான் அவர் இந்த இடத்திற்கு முன்னேறியிருக்கிறார். குறும்படத்தை இப்படிப்பட்ட முறையில் விளம்பரப்படுத்துவது என்பது சாதாரண விசயம் அல்ல, அதை மிக சிறப்பாக செய்திருக்கும் வின் ஸ்டார் விஜய், மக்கள் தொடர்பாளன் என்ற படத்தில் நடித்து வருகிறார். அந்த படம் விரைவில் வெளியாகி வெற்றி பெறும்.” என்றார்.
சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்ட பி.ஆர்.ஓ சங்கத்தின் முன்னாள் செயலாளர் பெருதுளசி பழனிவேல் பேசுகையில், “வின் ஸ்டார் விஜய் முருகன் பி.ஆர்.ஓ-வாக இருந்து, பத்திரிகையாளராகி, நடிகராகி, இயக்குநராகி, தயாரிப்பாளராக உயர்ந்தார். இப்படி ஒரு நிலைக்கு வருவது சாதாரண விசயம் இல்லை. இன்று சினிமாவுக்காக சென்னையை நோக்கி லட்சக்கணக்கானோர் வருகிறார்கள், ஆனால் அவர்களால் நினைத்ததை செய்ய முடியாமல் திரும்ப சென்றுவிடுகிறார்கள், சிலர் இறந்து கூட போகிறார்கள். அப்படிப்பட்ட மிக கடினமான சினிமா துறையில் வின் ஸ்டார் விஜய் செய்திருப்பது மிகப்பெரிய சாதனை. இதற்காக அவரை நிச்சயம் பாராட்டியாக வேண்டும்.
விஜய் அரசியலுக்கு செல்வதாக அறிவித்த போது அவர் இடத்தில் நான் வருவேன், என்று வின் ஸ்டார் சொன்னது குறித்து பத்திரிகையாளர்கள் கேட்டார்கள், நான் கேட்கிறேன் ஏன்? அவரால் வர முடியாது, இப்படி ஒரு நிலைக்கு வந்திருக்கும் வின் ஸ்டார் நிச்சயம் ஒருநாள் விஜய் இடத்திற்கு செல்வார், அவர் மட்டும் அல்ல முயற்சி செய்யும் அனைவருக்கும் அந்த இடம் கிடைக்கும். அது உடனடியாக கிடைக்கும் என்று சொல்லவில்லை, அவருடைய தொடர் முயற்சியினால் அவர் நினைத்தது நிச்சயம் நடக்கும், என்று கூறி ‘ஏழையின் சிரிப்பில்’ படக்குழுவினரை வாழ்த்தி விடைபெறுகிறேன்.” என்றார்.
ஏ.சி.மணிகண்டன் மற்றும் பிச்சைக்கனி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த குறும்படத்திற்கு ஆனந்த் 360 ஸ்டுடியோ படத்தொகுப்பு பணிகளை கவனித்துள்ளது. செல்வராஜ் மூக்கையா பாடல் பாடியுள்ளார்.