ஒரே படத்தில் விஜய் - மகேஷ் பாபு : இயக்க ரெடியான ஏ.ஆர்.முருகதாஸ்!
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு நடித்துள்ள ‘ஸ்பைடர்’ 27 ஆம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகிறது. தமிழ்ப் பதிப்பை லைகா நிறுவனம் வெளியிடுகிறது. தமிழகம் முழுவதும் சுமார் 450 திரையரங்குகளில் படத்தை வெளியிட லைகா திட்டமிட்டு வருகிறது.
இந்த நிலையில், நேற்று நடைபெற்ற இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில், விஜையும், மகேஷ் பாபுவையும் ஒன்றாக வைத்து படம் இயக்குவீர்களா? என்று முருகதாஸிடம் நிருபர்கள் கேட்டதற்கு, “மகேஷ் பாபு - விஜய் இருவரையும் நான் தனி தனியாக இயக்கிவிட்டேன். இவர்களை ஒன்றாக வைத்து ஒரே படத்தில் இயக்க நான் ரெடியாக தான் இருக்கிறேன். அவர்கள் இதற்கு சம்மதம் தெரிவித்தால் உடனே தொடங்கி விடலாம்.
ஆனால், அப்படி இருவரையும் வைத்து ஒரு படம் எடுப்பது மிகவும் சிரமமானது. தெலுங்கில் அதை பார்த்தால் மகேஷ் பாபு ரசிகர்கள், அவருக்கு முக்கியத்துவம் இருக்க வேண்டும் என்று எதிர்ப்பார்ப்பார்கள், தமிழில் விஜய் ரசிகர்கள் அப்படி எதிர்ப்பார்ப்பார்கள். நான் ரெடியாகத்தான் இருக்கிறேன், ஆனால் அது நடப்பது ரொம்ப சிரமமான விஷயம்.” என்று பதில் அளித்தார்.
நிகழ்ச்சியில் பேசிய மகேஷ் பாபு, “ஸ்பைடர் மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டுள்ள படமாகும். அதனால் போட்ட முதலீட்டை எடுக்க வேண்டும் ஆனால், தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் படம் ரிலிஸானால் தான், அது முடியும் என்பதால் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியிடுகிறோம். இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா சாரில் கதாபாத்திரம் ரொம்ப நன்றாக வந்திருக்கிறது. அதேபோல் பரத் கேரக்டரும் நன்றாக வந்திருக்கிறது.
இப்படத்தின் மூலம் சந்தோஷ் சிவன் சார் உடன் பணிபுரிந்தது ரொம்ப மகிழ்ச்சி. நீண்ட நாட்களாக அவரது படத்தில் பணியாற்ற நான் ஆசைப்பட்டுக்கொண்டிருந்தேன். ரசிகர்களுக்கான விருந்தாக இருக்கும்படி இப்படத்தை முருகதாஸ் சார் இயக்கியிருக்கிறார். இது நிச்சயம் ரசிகர்களை கவரும்.” என்றார்.