’திமிரு புடிச்சவன்’ படத்திற்காக சிலம்பம் கற்றுக்கொள்ளும் விஜய் ஆணடனி!
கிருதிகா உதயநிதியின் இயக்கத்தில் ‘காளி’ படத்தில் நடித்து முடித்துள்ள விஜய் ஆண்டனி, அடுத்ததாக எஸ்.எஸ்.ராஜமெளலியின் முன்னாள் உதவி இயக்குநர் கணேஷா என்பவரது இயக்கத்தில் நடிக்கிறார். ‘திமிரு புடிச்சவன்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது.
வரும் பிப்ரவரி 7 ஆம் தேதி முதல் படப்பிடிப்பு தொடங்க உள்ள இப்படத்தில் முதல் முறையாக விஜய் ஆண்டனி போலீஸ் வேடம் ஏற்றிருக்கிறார். மேலும், இந்த படத்தின் ஆக்ஷன் காட்சிகளுக்காக அவர் சிலம்பம் பயிற்சியிலும் ஈடுபட்டு வருகிறாராம்.
இது குறித்து இயக்குநர் கணேஷா கூறுகையில், “எல்லா துறைகளிலும் தன்னுடைய மொத்த உழைப்பையும் கொடுக்க முயற்சிக்கும் விஜய் ஆண்டனியின் ஆர்வம் என்னை மிகவும் கவர்ந்தது. அவருடைய அர்ப்பணிப்பும், பர்ஃபெக்ஷனும் பாராட்டுக்குரியது. ஒரு சின்ன விஷயமாக இருந்தாலும் அதையும் தெளிவாகவும், சரியாகவும் செய்யக்கூடியவர். இந்த சிறந்த பண்பு தான் அவரின் கேரியரில் இந்த உயரத்திற்கு உயர்த்தியிருக்கிறது.
மேலும் இந்த படம் வழக்கமான போலீஸ் வெர்சஸ் வில்லன் கதையாக இல்லாமல், மைண்ட் கேம் கூறுகளை உள்ளடக்கி, அதிலும் பயணிக்கும் படம். சமகால இளைஞர்களின் நோக்கங்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தும் படமாக இருக்கும்." என்றார்.