விஜய் தேவரகொண்டாவின் குடும்ப பொழுது போக்கு படமான ‘ஃபேமிலி ஸ்டார்’ வெளியீட்டு தேதி அறிவிப்பு!

இளசுகளின் பேவரைட் நாயகனாக விஜய் தேவரகொண்டா தெலுங்கு சினிமா மட்டும் இன்றி தென்னிந்தியாவையும் கடந்து இந்திய அளவில் தனக்கென்று மிகப்பெரிய ரசிகர் வட்டத்தை உருவாக்கியுள்ளார். இதற்கு காரணம், அவரது காதல் படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றது தான். அவரது நடிப்பில் வெளியான ‘குஷி’ திரைப்படத்தின் பாடல்கள் இன்னமும் இளைஞர்களின் செல்போன்களின் ரிங் டோனாக ஒலித்துக்கொண்டிருக்கும் நிலையில், தற்போது குடும்ப ரசிகர்களை ஈர்ப்பதற்கான பணியில் அவர் இறங்கி விட்டார்.
ஆம், முழுக்க முழுக்க குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக விஜய் தேவரகொண்டாவின் ‘ஃபேமிலி ஸ்டார்’ உருவாகியுள்ளது. ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் தில்ராஜூ மற்றும் சிரிஷ் தயாரிக்கும் இப்படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக ‘சீதா ராமம்’ பட புகழ் மிருணாள் தாக்கூர் நடிக்கிறார். கோபிசுந்தர் இசையமைக்கிறார்.
பரசுராம் பெட்லா இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படம் வரும் ஏப்ரல் மாதம் 5 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஏற்கனவே படத்தின் தலைப்பை அறிவிக்கும் விதத்தில் வெளியான டீசர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், இன்று வெளியான படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு போஸ்டரில், நடிகர் விஜய் தேவரகொண்டா ஆதார் கார்டை வாயில் கடித்தப்படி, சாக்கு பையை தோளில் போட்டுக்கொண்டு, லுங்கியுடன் அவசரமாக ஓடும் புகைப்படம், ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
எப்போதும் ஸ்டைலிஷாகவும், மாஸாகவும் இருக்கும் விஜய் தேவரகொண்டா, இந்த போஸ்டரில் முழுக்க முழுக்க குடும்பத்திற்காக உழைக்கும் இளைஞராக சித்தரிக்கப்பட்டிருப்பது அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்திருக்கிறது.