தியேட்டரை தொடர்ந்து ஒடிடி-யிலும் பிரம்மாண்ட வரவேற்பு பெற்ற ‘விக்ரம்’!
கமல்ஹாசன் நடித்து தயாரித்த விக்ரம் திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. லோகேஷ் கனகராஜின் அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக உருவான இப்படம் பல படங்களின் வசூல் சாதனையை முறியடித்து பல புதிய சாதனைகளையும் நிகழ்த்தியது.
இந்த நிலையில், ஜூலை 8 ஆம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஒடிடி தளத்தில் வெளியான ‘விக்ரம்’ ஒடிடி தளத்திலும் மிகப்பெரிய ஓபனிங்கை பதிவு செய்துள்ளது. தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் என ஐந்து மொழிகளிலும் மிகப்பெரிய சாதனைகளை முறியடித்ததாக, டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த வருடத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வெளியீடுகளில் ஒன்றான ’விக்ரம்’ தனது பிளாக்பஸ்டர் ஓட்டத்தை ஓடிடியிலும் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் ரசிகர்கள் இந்த ஓடிடி ரிலீஸை உற்சாகத்துடனும் ஆர்வத்துடனும் கொண்டாடுகிறார்கள். மெகா ஆக்ஷன் திரைப்படத்திலிருந்து அவர்களுக்குப் பிடித்த சிறந்த தருணங்களை மீண்டும் அனுபவிக்க அவர்களுக்கு அருமையான வாய்ப்பு இது.
நடிகரும் தயாரிப்பாளருமான கமல்ஹாசன் கூறுகையில், “விக்ரம் மீது நாடு முழுவதும் உள்ள ரசிகர்கள் பொழியும் அன்பும் பாசமும் இதயத்தை தொடுகிறது. நாடு முழுவதும் உள்ள பார்வையாளர்களை மகிழ்விக்கும் நோக்கத்துடன் தான் விக்ரம் உருவாக்கப்பட்டது. டிஸ்னி+ ஹாட்ஸ்டார் அதை ஒவ்வொரு பார்வையாளர்களின் வீடுகளிலும் கைகளிலும் கொண்டு சேர்த்துள்ளது. டிஸ்னி+ ஹாட்ஸ்டாருக்கு தேசிய அளவில் பிரம்மாண்ட வரவேற்பை பெற்று இதுவரையிலான, சாதனைகளை இப்படம் முறியடித்து வருவது, கொண்டாட்ட தருணமாகும். ஒட்டுமொத்த விக்ரம் குழுவிற்கும் எனது வாழ்த்துக்கள்.” என்றார்.
டிஸ்னி ஸ்டார், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் & HSM என்டர்டெயின்மென்ட் நெட்வொர்க்கின் கண்டெண்ட் ஹெட் கௌரவ் பானர்ஜி கூறுகையில், “உலகெங்கிலும் பாக்ஸ் ஆபிஸில் சாதனை வெற்றிக்குப் பிறகு, டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் விக்ரம் படத்திற்கு கிடைத்து வரும் அற்புதமான வரவேற்பு எங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பார்வையாளர்கள் படத்தின் ஒவ்வொரு தருணத்தையும் தனித்தனியே கொண்டாடி, பாராட்டி வருகின்றனர். இப்படம் தேசிய அளவில் ஓடிடி தளத்தில் மிகப்பெரிய வெளியீடாக அமைந்தது. கமல்ஹாசன் போன்ற ஒரு நட்சத்திரம் மீது பார்வையாளர்கள் இதயத்தில் வைத்திருக்கும் உண்மையான அன்புக்கு இதுவே சாட்சி. விக்ரம் படத்தினை இன்னும் அதிகமான பார்வையாளர்களுக்கு டிஜிட்டல் முறையில் கொண்டு செல்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.” என்றார்.