’விரூபாக்ஷா’ ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை கொடுக்கும் - நடிகை சம்யுக்தா மேனன் நம்பிக்கை
அறிமுக இயக்குநர் கார்த்திக் வர்மா டண்டூ இயக்கத்தில், சாய் தரம் தேஜ் நாயகனாகவும், ‘வாத்தி’ பட புகழ் சம்யுக்தா மேனன் நாயகியாகவும் நடித்திருக்கும் படம் ‘விரூபாக்ஷா’. ஏப்ரல் 21 ஆம் தேதி தெலுங்கில் வெளியான இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. தற்போது வரை தெலுங்கு சினிமாவின் வெற்றி திரைப்படமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் இப்படம் தமிழிலும் மொழி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்த திரைப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பி வி எஸ் என் பிரசாத் மற்றும் சுகுமார் ரைட்டிங்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் இயக்குநரும், தயாரிப்பாளருமான சுகுமார் ஆகியோர் இணைந்து பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்தை தமிழில் ஸ்டுடியோ கிரீன் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல்ராஜா வெளியிடுகிறார். தமிழிலும் ‘விரூபாக்ஷா’ என்ற தலைப்புடன் வரும் மே 5 ஆம் தேதி வெளியாகிறது.
இந்த நிலையில், இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் நாயகன் சாய் தரம் தேஜ், நாயகி சம்யுக்தா மேனன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக்கொண்டார்கள்.
நிகழ்ச்சியில் நடிகை சம்யுக்தா மேனன் பேசுகையில், “நடிகை சம்யுக்தா பேசுகையில், ”எனக்கு தமிழ் மொழியும், தமிழ்நாடும் எனக்கு மிகவும் பிடிக்கும். 'வாத்தி' படத்திற்கு அளித்த ஆதரவிற்கு நன்றி. அதனைத் தொடர்ந்து தெலுங்கில் ‘விரூபாக்ஷா’ எனும் திரைப்படத்தில் நடித்திருக்கிறேன். இந்த திரைப்படம் திரையரங்கில் கண்டு ரசிக்க வேண்டிய திரைப்படம். ஒரு திரைப்படம் வெளியாகி அதனை ஓடிடியில் காண்பதற்கான வாய்ப்பு இருக்கிறது. ஆனால் '‘விரூபாக்ஷா’ திரையரங்கில் கண்டு மகிழ வேண்டிய படம். ஏனெனில் இது தொழில்நுட்ப ரீதியாக புதிய அனுபவத்தை வழங்கக்கூடியது. இப்படத்தில் இடம்பெற்றிருக்கும் பிரம்மாண்டமான காட்சி அமைப்புகள், ஒலி... என அனைத்தின் சிறப்பம்சங்களும் திரையரங்கில் மட்டுமே சாத்தியம். இந்த அனுபவம் ஓ டி டி மற்றும் சிறிய திரையில் கிடைக்காது. இந்த வாய்ப்பை வழங்கிய தயாரிப்பாளர், இயக்குநர், நாயகன், தமிழில் வெளியிடும் ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா உள்ளிட்ட அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார்.
நாயகன் சாய் தரம் தேஜ் பேசுகையில், “நான் சாதாரண சென்னை தி. நகர் பையன் தான். 91ல் அடையாறில் உள்ள பள்ளியில் தான் படித்தேன். தெலுங்கில் நாயகனாக அறிமுகமாகி, பல வெற்றிகளை பெற்றிருந்தாலும் தமிழில் நாயகனாக வெற்றி பெற வேண்டும் என நீண்ட நாட்களாக நினைத்திருந்தேன். அந்தக் கனவு ‘விரூபாக்ஷா’ படத்தின் மூலம் நிறைவேறி இருக்கிறது. இந்தத் திரைப்படம் தெலுங்கில் வெற்றியை பெற்றது போல், தமிழிலும் வெற்றி பெறும் என உறுதியாக நம்புகிறேன். தமிழில் உள்ள அனைத்து நட்சத்திர நடிகர்களின் ரசிகர்களும் இந்த திரைப்படத்தை பார்த்து, எனக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். தமிழ் மக்கள் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. இந்தத் திரைப்படத்தை தமிழில் வெளியிடும் ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா, தயாரிப்பாளர் தனஞ்ஜெயன், விநியோகஸ்தர் சக்திவேலன் ஆகியோருக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படத்தில் நடித்ததற்கு ரஜினி சார் தான் இன்ஸ்பிரேஷன். அவர் நடித்த 'சந்திரமுகி' படம், கதையின் நாயகிக்குத்தான் முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கும். அதே போல் இந்த படத்திலும் கதையின் நாயகிக்கு தான் முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கிறது. இருப்பினும் இந்த திரைப்படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டதற்கு வித்தியாசமான கதையும், சுகுமாரின் விறுவிறுப்பான திரைக்கதையும் தான் காரணம்” என்றார்.
தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் பேசுகையில், ”இந்தத் திரைப்படம் ஏப்ரல் 21ஆம் தேதி அன்று தெலுங்கில் வெளியானவுடன் அன்றே பார்த்தேன். இரண்டேகால் மணி நேரத்திற்கு ஒரு புதிய உலகத்திற்கு சென்று வந்த அற்புதமான அனுபவத்தை அளித்தது. தயாரிப்பாளர் பி. வி. எஸ். என். பிரசாத் கதையின் மீது நம்பிக்கை வைத்து பிரம்மாண்டமான பட்ஜெட்டில் இந்த திரைப்படத்தை தயாரித்திருக்கிறார். 'புஷ்பா' இயக்குநர் சுகுமாரின் திரைக்கதை, அறிமுக இயக்குநர் கார்த்திக்கின் இயக்கம், சாய் தரம் தேஜ் மற்றும் சம்யுக்தாவின் நடிப்பு.. என அனைத்தும் நேர்த்தியாக இருந்தது. தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா என்னை தொடர்பு கொண்டு இந்த திரைப்படத்தை தமிழில் வெளியிட வேண்டும் என கேட்டுக்கொண்டார் மேலும் இந்த திரைப்படம் தெலுங்கில் பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது. அதேபோன்ற வெற்றியை தமிழிலும் சாத்தியமாக்க வேண்டும் என ஞான வேல் ராஜா விரும்பினார். இந்தத் திரைப்படம் 'அருந்ததி' மாதிரி கதையின் நாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகி இருக்கும் திரைப்படம். தமிழ் ரசிகர்களுக்கு மிஸ்டிக் ஹாரர் திரில்லர் படமான ‘விரூபாக்ஷா’ 'நிச்சயமாக பிடிக்கும். ‘விரூபாக்ஷா’ எனும் டைட்டில் பவர்ஃபுல்லாக இருக்கிறது. படத்தின் டப்பிங் பணிகளை விரைவாக நிறைவு செய்து படத்தை மே மாதம் 5 ஆம் தேதிக்கு வெளியாகும் வகையில் திட்டமிட்டு உழைத்த தயாரிப்பாளர் உள்ளிட்ட குழுவினருக்கு இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் இந்த திரைப்படத்தை விநியோகஸ்தர் சக்திவேலன் வெளியிடுகிறார். தமிழில் 'அருந்ததி முதல் ஆர் ஆர் ஆர் 'படம் வரை ஏராளமான படங்கள் வெளியாகி வெற்றி பெற்றிருக்கிறது. அந்த வரிசையில் இந்த ‘விரூபாக்ஷா’ படமும் இடம்பெறும்.” என்றார்.
இயக்குநர் கார்த்திக் வர்மா பேசுகையில், ”தமிழ் மொழியில் இயல்பாக பேச வராது. இருந்தாலும் தமிழ் திரைப்பட ஆளுமைகளான மணிரத்னம், ஷங்கர், கார்த்திக் சுப்புராஜ், லோகேஷ் கனகராஜ், வெற்றிமாறன் என ஏராளமான திறமையாளர்கள் மீது அதிக ஈடுபாடு உண்டு. தமிழ் மக்களின் திரைப்பட ஆர்வம் எனக்கு மிகவும் பிடிக்கும். தமிழில் வெளியான 'பீட்சா', நயன்தாரா நடித்த 'மாயா' ஆகிய படங்களை பார்த்திருக்கிறேன். இந்த திரைப்படத்திற்கு சுகுமார் சாரின் திரைக்கதை வெற்றி பெற வைத்திருக்கிறது. முதலில் நாயகனை சந்தித்தபோது அவர் என்னிடமிருந்து காதல் கதையைத்தான் எதிர்பார்த்தார். ஆனால் நான் '‘விரூபாக்ஷா’ கதையைச் சொல்லும் போது, முதலில் தயங்கி பிறகு ஒப்புக்கொண்டார். இந்த திரைப்படம், திரையரங்கிற்கு வருகை தந்து கண்டு ரசிக்க வேண்டிய திரைப்படம். தெலுங்கு ரசிகர்கள் ரஜினி சார், கமல் சார், சூர்யா சார், கார்த்தி சார்.. ஆகியோருக்கு வரவேற்பும், ஆதரவும் அளித்தது போல், தமிழ் ரசிகர்கள் சாய் தரம் தேஜுக்கும் ஆதரவும், வரவேற்பும் அளிப்பார்கள்.” என்றார்.
தயாரிப்பாளர் பிரசாத் பேசுகையில், ”தமிழில் திரைப்படத்தைத் தயாரிக்க வேண்டும் என முப்பத்தைந்து ஆண்டுகளாக முயற்சி செய்து வருகிறேன். இயக்குநர் எஸ் பி முத்துராமன், அகத்தியன் உள்ளிட்ட பலருடன் பணியாற்ற விரும்பினேன். ஆனால் சரியான வாய்ப்பு அமையவில்லை. தற்போது ' ‘விரூபாக்ஷா’ மூலம் தமிழில் அறிமுகமாகிறேன். இந்த திரைப்படத்திற்கு கதை தான் நாயகன். தமிழ் ரசிகர்களுக்கு பிடிக்கும் என நம்புகிறேன்.” என்றார்.
சம்ஹத் சாய்நூதீன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு, 'காந்தாரா' புகழ் அஜனீஸ் லோக்நாத் இசையமைத்திருக்கிறார். தமிழ் பதிப்பிற்கு என்.பிரபாகர் வசனம் எழுதியிருக்கிறார்.