Jun 05, 2022 04:57 AM

யானையின் பலம் பாசத்தை மையப்படுத்திய ரொமாண்டிக் ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக உருவாகியுள்ள ‘வேழம்’

யானையின் பலம் பாசத்தை மையப்படுத்திய ரொமாண்டிக் ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக உருவாகியுள்ள ‘வேழம்’

‘ஓ மை கடவுளே’, ‘மன்மதலீலை’ என்று தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வரும் அசோக் செல்வன், ஆக்‌ஷன் ஹீரோவாக களம் இறங்கும் படம் ‘வேழம்’. படத்தின் தலைப்பை போல் வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகியுள்ள ரொமாண்டிக் ஆக்‌ஷன் த்ரில்லர் படமான இப்படத்தை அறிமுக இயக்குநர் சந்தீப் ஷாம் இயக்கியுள்ளார். கே 4 கிரியேஷன்ஸ் சார்பில் கேசவன் தயாரித்திருக்கும் இப்படத்தில் ஜனனி ஐயர், ஐஸ்வர்யா மேனன் ஆகியோர் ஹீரோயின்களாக நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் சங்கிலி முருகன், பி.எல்.தேனப்பன், ஷ்யாம் சுந்தர் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

 

வரும் ஜூன் 24 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள இப்படம் குறித்து இயக்குநர் சந்தீப் ஷாம் மற்றும் தயாரிப்பாளர் கேசவன் பத்திரிகையாளர்களிடம் பகிர்ந்துக்கொண்டனர்.

 

தயாரிப்பாளர் கேசவன் பேசுகையில், “நான் 30 வருடங்களாக ஐடி துறையில் இருக்கிறேன். சொந்தமாக சாப்ட்வேர் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறேன். புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் ஒரு முயற்சியாக தான் இந்த படத்தை தயாரித்தேன். எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்ததால் தான் சாப்ட்வேர் துறையில் சாதிக்க முடிந்தது. அப்படி சினிமா துறையில் சாதிக்க துடிக்கும் சந்தீப் போன்ற இளைஞர்களுக்கு ஒரு வாய்ப்பாக அதே சமயம் எனக்கும் ஒரு புதிய தொழிலில் ஈடுபடும் அனுபவமாக இருக்கும் என்று இந்த படத்தை தயாரித்திருக்கிறேன்.” என்றார்.

 

இயக்குநர் சந்தீப் ஷாம் படம் குறித்து கூறுகையில், “’வேழம்’ என்பது யானை. காட்டுக்கே ராஜாவாக சிங்கம் இருந்தாலும், யானையின் தனித்தன்மை எந்த ஒரு விலங்கிற்கும் கிடையாது. மதம் பிடித்துவிட்டால் யானையை யாராலும் கட்டுப்படுத்த முடியாது, அதனுடைய பலம் அப்படிப்பட்டது. அதே சமயம், அதிகம் பாசமுள்ள விலங்கும் யானை தான். இப்படி ஒரு குணம் கொண்ட கதாப்பாத்திரங்களுக்கு இடையே நடக்கும் கதை தான் ‘வேழம்’. யானைக்கு ஞாபக சக்தியும் அதிகம், அதையும் இந்த படத்தில் முக்கியமானதாக பயன்படுத்தியிருப்பதால் படத்திற்கு ‘வேழம்’ என்று தலைப்பு வைத்திருக்கிறோம். படம் முடிந்துவிட்டது 24 ஆம் தேதி ரிலீஸ். நிச்சயம் ரசிகர்களுக்கு பிடித்த ஒரு த்ரில்லர் படமாக இருப்பதோடு, அசோக் செல்வனை வித்தியாசமான முறையில் பார்க்க கூடிய படமாகவும் இருக்கும்.

 

படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு ஊட்டியில் நடத்தினோம். இரவு நேரங்களில் காட்டு பகுதியில் படப்பிடிப்பு நடத்த அனுமதி இல்லாததால், தனியார் இடத்தில் இரவு நேரங்களில் படப்பிடிப்பு நடத்தினோம். அப்போதும் அங்கு இரவு நேரங்களில் படப்பிடிப்பு நடத்துவது என்பது பாதுகாப்பனது அல்ல என்று பலர் சொன்னார்கள். இருந்தாலும், நாங்கள் சுமார் 15 நாட்கள் படப்பிடிப்பை எந்தவித பிரச்சனையும் இல்லாமல் பாதுகாப்பாக நடத்தி முடித்தோம். இதையே பலர் பாராட்டினார்கள்.” என்றார்.

 

முதல் படம் அனுபவம் பற்றி கூறிய இயக்குநர் சந்தீப் ஷாம், “நான் 10 வருடங்களாக சினிமாவில் பயணித்து வருகிறேன். ஆரம்பத்தில் விளம்பர படங்களை இயக்கி வந்தேன். பிறகு பல குறும்படங்களை இயக்கினேன். விளம்பரத்துறையில் இருந்தாலும், திரைப்படம் இயக்க வேண்டும் என்பது தான் என் நோக்கம். அதை நோக்கி தான் நான் பயணித்திக்கொண்டிருந்தேன். கேசவன் சாருக்கு விளம்பர படங்களை இயக்கி கொடுத்திருக்கிறேன். அப்போது அவரிடம் என் கதையை சொன்னேன். அதை கேட்டவுடன் அவருக்கு படம் தயாரிக்க வேண்டும் என்ற ஐடியா வந்தது. சொன்ன நேரத்தில் படத்தை முடித்ததோடு, தயாரிப்பாளருக்கு முழு திருப்தியாக இருக்கும்படி படத்தை இயக்கியிருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.” என்றார்.

 

முதல் படம் தயாரித்த அனுபவம் பற்றி தயாரிப்பாளர் கேசவனிடம் கேட்டதற்கு, “சினிமா பற்றி பலர் பலவிதமாக சொன்னார்கள். ஆனால், எனக்கு எந்த ஒரு கசப்பான அனுபவமும் ஏற்படவில்லை. இயக்குநர் உள்ளிட்ட படக்குழுவினர் புத்துணர்ச்சியோடு உழைத்ததை பார்த்து எனக்கு வியப்பாக தான் இருந்தது. வெற்றி பெற வேண்டும் என்பதற்காக அனைவரும் கடுமையாக உழைத்ததோடு, சொன்ன பட்ஜெட்டில் படத்தை சிறப்பாகவும் எடுத்து கொடுத்திருக்கிறார்கள். எனக்கும் சினிமாவை பற்றி கற்றுக்கொள்ள இந்த படம் உதவியாக இருந்தது. எனவே, சினிமாவில் தொடர்ந்து பயணிக்க முடிவு செய்திருக்கிறேன்.” என்றார்.

 

‘விக்ரம்’ படத்துடன் வெளியாகியிருக்கும் ‘வேழம்’ டிரைலர் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருப்பதோடு, படத்தை பிரம்மாண்டமான விளம்பரத்தோடு வெளியிடவும் படக்குழு திட்டமிட்டு பணியாற்றி வருகிறது.