திரைப்படத்தின் இசை மற்றும் பாடல்கள் யாருக்கு சொந்தம்? - விளக்கம் அளிக்கும் KRIA Law-வின் குழு விவாதம்!

திரைப்படங்களில் இடம்பெறும் பாடல்கள் படம் வெளியீட்டுக்குப் பிறகு அதன் மூலம் கிடைக்கும் வருமானம் யாருக்கு சொந்தம்? என்பது குறித்த சர்ச்சை தமிழ் சினிமாவில் கடந்த சில மாதங்களாக பேசுப்பொருளாகியுள்ளது. குறிப்பாக இசையமைப்பாளர் இளையராஜா தனது பாடல்களை தனது அனும்தி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது, என்று அறிவித்திருந்தார். இதையடுத்து, பணம் போட்டு படம் எடுக்கும் தயாரிப்பாளருக்கு இல்லாத உரிமை எப்படி இளையராஜவுக்கு மட்டும் இருக்கும், என்று சில தயாரிப்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இருப்பினும், இந்த விவகாரம் இன்னமும் தீர்வு இல்லா பிரச்சனையாக இருக்கும் நிலையில், இதற்கு மட்டும் அல்ல திரைப்பட இசை மற்றும் பாடல்களை தவிர, தனி பாடல்கள் உள்ளிட்ட இசை சம்மந்தமான அனைத்துக்குமான உரிமம், ராயல்டி எனப்படும் வருமான பங்கு போன்றவற்றுக்கு யார் யார் சொந்தம் கொண்டாட முடியும், இவைகளைத்தாண்டி பாடல்கள் மற்றும் இசையை பயன்படுத்துபவர்கள் எப்படி அதை முறையாக வாங்கலாம், யாரிடம் வாங்கலாம், இவற்றுக்காக இயங்கும் அமைப்புகள் உள்ளிட்ட அனைத்து சந்தேகங்களையும் தீர்த்து வைக்கும் விதமாக, சென்னையில் உள்ள முன்னணி IPR Law நிறுவனமான KRIA Law, இசைக்கான உரிமம் தொடர்பான குழு ஆலோசனை நிகழ்வை மார்ச் 1 ஆம் தேதி சென்னையில் நடத்துகிறது.
* சுயாதீன கலைஞர்கள், லேபிள்கள், தயாரிப்பாளர்களின் உரிமைகள் (Rights of Independent Artists, Labels, Producers)
* இசை நிறுவனங்கள் மற்றும் சங்கங்களின் பங்கு (Role of Music Organisations & Societies)
* திரைப்படம் மற்றும் வணிக இசையில் AI-ன் தாக்கம் (AI's impact on Film & Commercial Music)
* உரிமங்களை சமநிலைப்படுத்துதல் (Balancing Licenses)
ஆகிய தலைப்புகளில் நடக்க இருக்கும் குழு விவாதங்களில் இசைத்துறையைச் சேர்ந்த பல முன்னணி கலைஞர்கள், திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள், இசை நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கலந்துக் கொண்டு தங்களது கருத்துகளை முன் வைக்க உள்ளனர்.
இது குறித்து இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த KRIA Law நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் நிர்வாக பங்குதாரர் எம்.எஸ்.பரத் கூறுகயில், “உலக ஐபி தினமாக ஏப்ரல் 26 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் உலக ஐபி தினத்தின் இந்த வருட கருப்பொருள் இசை மற்றும் ஐபி. நம் சென்னையில் இசை என்றால் மார்கழி மாதம் தான். ஆனால், அன்றைய தினம் இசைக் கலைஞர்கள் வெளிநாடுகளுக்கு சென்று விடுவதால் மார்ச் மாதம் இந்த நிகழ்வை வைத்திருக்கிறோம்.
ஒரு பாடல் உருவாவதற்கும், இசை உருவாவதற்கும் ஒருவர் மட்டும் போதாது, சுமார் பத்து பேர் தேவைப்படுவார்கள். இதில், இசைக்கலைஞர்கள், பாடலாசிரியர்கள், இசையமைப்பாளர்கள், பாடகர்கள் என பல் கலைஞர்கள் பணியாற்றுவார்கள். ஆனால், இவர்கள் அனைவரையும் ஒருங்கிணைப்பது தயாரிப்பாளர் தான். ஆனால், இதில் அனைவருக்கும் உரிமை உண்டு. ஆனால், இவற்றுக்கு முதலாளி தயாரிப்பாளர் தான். எங்களுடைய காப்பிரைட் சட்டத்தில் யார் கிரியேட்டர்?, யார் முதலாளி? என பல்வேறு உரிமைகள் இருக்கிறது. இவை அனைத்துக்கும் முதலாளி தயாரிப்பாளர் என்றாலும், பாடலாசிரியர், இசைக்கலைஞர்கள், பாடகர்கள் என அனைவருக்கும் ராயல்டி என்ற பங்கு வழங்கப்பட வேண்டும். அதே சமயம் இவர்கள் தனிதனியாக சென்று ராயல்டி வாங்க முடியாது. எனவே, இவர்களுக்காக ஒரு அமைப்பு இருக்கிறது, அவர்கள் மூலமாக இவர்களுக்கு ராயல்டி பெற்றுத்தரப்படுகிறது. இந்த அமைப்பினரோடு இதுபோன்ர பல்வேறு அமைப்பினர் நாளைய நிகழ்வில் கலந்துக்கொள்கிறார்கள்.” என்றார்.
ஒரு திரைப்படத்தின் இசை மற்றும் பாடல்களுக்கு அந்த படத்தின் தயாரிப்பாளர் முதலாளியாக இருந்தாலும், அதை வேறு ஒரு ஆடியோ நிறுவனத்திடம் விற்பனை செய்த பிறகு, அதன் உரிமையாளர் அந்த ஆடியோ நிறுவனம் தானா ? என்ற கேள்விக்கு பதில் அளித்த எம்.எஸ்.பரத், “ஆடியோ நிறுவனத்திடம் விற்பனை செய்யும் போது போடப்படும் ஒப்பந்தத்தை படிக்க வேண்டும். அந்த ஒப்பந்தத்தில் எதற்கெல்லாம் உரிமம் கொடுக்கப்பட்டிருக்கிறது, எத்தனை வருடங்கள் உரிமம் கொடுக்கப்பட்டிருக்கிறது, என்பதை பார்க்க வேண்டும். ஐந்து வருடங்களுக்கு உரிமம் கொடுக்கப்பட்டால், அந்த காலக்கட்டட்தில் மட்டுமே அந்த ஆடியோ நிறுவனம் பயன்படுத்த முடியும், அதன் பிறகு மீண்டும் அந்த உரிமம் தயாரிப்பாளருக்கு தான் வந்தடையும். அதே போல், சம்மந்தப்பட்ட தயாரிப்பாளருக்குப் பிறகு அவரது குடும்ப உறுப்பினர்களிடம் அந்த உரிமம் இருக்கும்.” என்றார்.
சமீப காலமாக இளையராஜா அவரது பாடல்களை யாரும் பாடக்கூடாது என்கிறார், அது சரியா? என்ற கேள்விக்கு, “நான் அவருடைய வழக்கறிஞர் இல்லை. அதனால், அதைப்பற்றி பேச முடியாது. ஆனால், பொதுவாக சொல்ல வேண்டும் என்றால், இளையராஜாவின் பாடல்களை ஒரு கல்லூரி நிகழ்ச்சிகளில் பாடுகிறார்கள், ஓட்டலில் பாடுகிறார்கள் என்றால், அந்த பாடலின் இசைக்கு மட்டும் தான் உரிமம் பெற வேண்டும், பாடலை மீண்டும் பாடுவது இளையராஜா அல்ல, வேறு பாடகர்கள் பாடுவதால், அந்த பாடலில் இருக்கும் இசைக்கு தான் உரிமம் பெற வேண்டும். ஆனால், அந்த உரிமத்தை முதலாளியிடம் தான் பெற வேண்டும், முதலாளி யார் ? என்பது குறித்து தெரிந்துக்கொள்ள ஒப்பந்தத்தை பார்க்க வேண்டும். அதில் ஒரு பாடலுக்கான உரிமம் மற்றும் ராயல்டி யார் யாருக்கு சொந்தம் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறதோ, அவர்களிடம் தான் உரிமம் பெற வேண்டும். எனவே, ஒப்பந்தம் என்பது மிக முக்கியம்.” என்று எம்.எஸ்.பரத் பதிலளித்தார்.
சர்வதேச வர்த்தக முத்திரை சங்கத்தின் (International Trademark Association) வருடாந்திர சந்திப்பு அமெரிக்காவின் கலிபோர்னியாவில் மே 17 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அதற்கான ஒரு ஆரம்பக்கட்ட நிகழ்வு தான் நாளை நடைபெறும் KRIA Law நடத்தும் ஐபி மற்றும் இசை, என்பது குறிப்பிடத்தக்கது.