இயக்குநர் லோகேஷ் கனகராஜை தேர்வு செய்தது ஏன்? - நடிகை ஸ்ருதி ஹாசன் விளக்கம்
நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில், ஸ்ருதி ஹாசன் இசையமைப்பில் ‘இனிமேல்’ என்ற சுயாதீன வீடியோ பாடல் வெளியாகியுள்ளது. இப்பாடல் வரிகளை நடிகர் கமல்ஹாசன் எழுதியுள்ளார். இதில், ஸ்ருதி ஹாசனுக்கு ஜோடியாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடித்துள்ளார்.
துவாரகேஷ் பிரபாகர் இயக்கியிருக்கும் இந்த வீடியோ பாடலுக்கு புவன் கவுடா ஒளிப்பதிவு செய்ய, பிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்துள்ளார். சவுந்தர் நல்லுசாமி கலை இயக்குநராக பணியாற்றியுள்ளார்.
ஆண், பெண் உறவை மையமாக கொண்டு உருவாகியுள்ள ‘இனிமேல்’ வீடியோ பாடல் நேற்று வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெர்றுள்ள நிலையில், ஸ்ருதி ஹாசன் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்து இனிமேல் பாடல் மற்றும் அதில் நடித்த அனுபவங்களை பகிர்ந்துக் கொண்டார்கள்.
நிகழ்ச்சியில் நடிகை ஸ்ருதி ஹாசன் பேசுகையில், “இந்த பாடலை நான் முதலில் ஆங்கிலத்தில் தான் எழுதினேன். ஆண், பெண் உறவை மையமாக கொண்டு நான் எழுதிய பாடலில் சில தமிழ் வார்த்தைகளை சேர்த்தேன். அப்போது தான் அப்பா இந்த பாடலை கேட்டுவிட்டு நன்றாக இருப்பதாக சொன்னது மட்டும் அல்லாமல், முழுக்க முழுக்க தமிழ் வரிகளை எழுதிக்கொடுத்தார்.
ரொம்ப நாளைக்கு முன்னாடி, அதாவது ‘விக்ரம்’ படப்பிடிப்பு தளத்தில் நான் இயக்குநர் லோகேஷ் கனகராஜை சந்தித்தேன். அப்போது கேமரா முன்பாக அவரது லுக் நன்றாக இருந்தது. அப்போது தான் அவரை இந்த பாடலில் நடிக்க வைக்க தேர்வு செய்தேன்.
என்னோடு முதல் இசை பயணம் சினிமா இசை மூலமாகத்தான் தொடங்கியது. ஆனால், சுயாதீன இசையும் முக்கியம் என்று நினைக்கிறேன். திரை இசைக்கு மிகப்பெரிய மார்க்கெட் இருந்தாலும், சுயாதீன இசையிலும் கொஞ்சம் பயணிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். இதற்கு ஒத்துழைத்த அப்பாவுக்கு நன்றி.
ஒரு படைப்பு பற்றி அப்போ எப்போதும் நேர்மையாக கருத்து சொல்வார். அப்படி தான் இந்த பாடலுக்கும் அவர் கருத்து கூறினார். பாடல் நன்றாக வந்திருப்பதோடு, சொல்ல வேண்டிய கருத்தை மக்களிடம் சேர்க்கும் விதத்தில் வீடியோ அமைந்திருப்பதாக சொன்னார்.” என்றார்.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது நடிப்பு அனுபவம் பற்றி கூறுகையில், “நான் நடிக்க வேண்டும் என்று விரும்பியதில்லை. ஸ்ருதி சொல்லும் போது எனக்கு சர்பிரைஸாக தான் இருந்தது. ஆனால், அவங்க கதை சொன்ன விதம், இயக்குநர் துவாரகேஷ் சொல்லும் போது, ஏன் பண்ணக் கூடாது?, என்று தோன்றியது. அதுமட்டும் அல்ல, எனக்கு கமல் சாரை ரொம்ப பிடிக்கும் என்பது உங்களுக்கு தெரியும். அவரோட வாய்ஸ் இந்த பாடலில் இடம்பெறப் போகிறது என்றதுமே நடிக்க வேண்டும் என்று தோன்றியது. அதேபோல் ராஜ்கமல் நிறுவனம் என் வீடு மாதிரி அவங்க அழைத்தால் என்னால் மறுக்க முடியாது. கமல்சார் எனக்காக பெரிய விசயத்தை செய்திருக்கிறார். அதற்காக அவருக்கு நான் இது கூட செய்யவில்லை என்றால் எப்படி, அதான் நடித்தேன். ஆனால், இயக்குநர் வேலையை விட நடிப்பு வேலை ஈஸியாகத்தான் இருந்தது.
இதன் பிறகு நான் தொடர்ந்து நடிப்பேனா? என்றால் இல்லை. நான் நடிக்க வேண்டும் என்று விரும்பியிருந்தால் அதற்காக ஒரு கதை நானே எழுதி நடித்திருப்பேன். எனக்கு ‘பொல்லாதவன்’ படம் மிகவும் பிடித்த படம். நடிக்க வேண்டும் என்று நினைத்தால் அப்படி ஒரு கதையை நானே எழுதி, என் உதவியாளர்களை இயக்க சொல்லி நடித்திருப்பேன்.” என்றார்.
மேலும், நீங்க நடித்தது பற்றி உங்கள் மனைவி என்ன சொன்னாங்க? என்ற கேள்விக்கு பதில் அளித்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ், “தனிப்பட்ட வாழ்க்கை பற்றிய கேள்விகளை தொடக்கத்தில் இருந்தே நிராகரித்து வருகிறேன், அதனால் இது பற்றி நான் பேச விரும்பவில்லை. நான் சினிமாவுக்குள் வந்ததில் இருந்தே, குடும்பம் தொடர்பாக பேசக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறேன். இது எனக்கும், உங்களுக்குமான நேரடி தொடர்பாக மட்டுமே இருக்க வேண்டும். நீங்க என்னை விமர்சனம் பண்ணுங்க, பாராட்டுங்க அது போதும். அதை விட்டுவிட்டு என் வீடு, அங்கு நடப்பவை பற்றி பேசக்கூடாது என்பதில் நான் மிகவும் உறுதியாக இருக்கிறேன். அதனால் இந்த கேள்விக்கு என்னால் பதில் சொல்ல முடியாது.” என்றார்.