’கருடன்’ மூலம் சூரி உயரத்திற்கு செல்வாரா? - பில்டப் ஓவரா இருக்கே!
காமெடி நடிகர் சூரி, தற்போது கதாநாயகனாகிவிட்டார், அதிலும் வெற்றிமாறன் மூலம் கதாநாயகன் அந்தஸ்த்து பெற்ற சூரிக்கு, இன்னமும் தன் மீது நம்பிக்கை வரவில்லை என்பது அவர் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் பேசும் போது தெரிகிறது. இருந்தாலும், அவர் உடன் இருப்பவர்கள் அவரை “நீங்க தான் மண்ணின் மைந்தன் நாயகன்” என்று சொல்லி தைரியம் கொடுத்து வருகிறார்கள். அதன்படி, சிவகார்த்திகேயன் நடிப்பில் கொட்டுக்காளி என்ற படத்தில் நடித்திருப்பவர், தற்போது இயக்குநர் வெற்றிமாறன் கதையில், துரை செந்தில்குமார் இயக்கத்தில் ‘கருடன்’ என்ற படத்திலும் நாயகனாக நடித்திருக்கிறார்.
சூரிக்கு காமெடி வருவதே பெரிய விசயம் என்ற போதில், அவர் ஹீரோவாக என்ன செய்ய முடியும்? என்ற கேள்வி ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது. ‘விடுதலை’ படத்தை வெற்றிமாறன் படமாக மட்டுமே ரசிகர்கள் பார்த்த நிலையில், தற்போது சூரி நடித்திருக்கும் ‘கருடன்’ படத்தையும் வெற்றிமாறன் கதை, சசிகுமார், மலையாள நடிகர் உன்னி முகுந்தன் ஆகியோரது படமாகவே பார்க்கிறார்கள். இந்த பிம்பத்தை உடைப்பதற்காகவே சூரி, மிகப்பெரிய பில்டப் ஒன்றை இன்று நடைபெற்ற படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில் வெளிக்காட்டினார்.
ஒரு பக்கம் சிவகார்த்திகேயன் மறுபக்கம் விஜய் சேதுபதி என்று முட்டுக்கொடுத்ததோடு, மதுரையில் இருந்து இரண்டு பேருந்துகளில் கூட்டத்தை அழைத்து வந்து, தனது ரசிகர்கள் என்று அடையாளப்படுத்திக் கொண்டவர், அவர்களுக்கு வழக்கம் போல் பிரியாணி பாக்கெட் கொடுத்து வழி அனுப்பி வைத்தார்.
சரி நாம் விசயத்துக்கு வருவோம், ”ஊர் குருவி உயர பறந்தாலும் பருந்தாகாது” என்ற பழமொழி ஒன்று இருக்கிறது. (எனக்கு மிகவும் பிடிக்காத பழமொழிகளில் இதுவும் ஒன்று) ஆனால், இந்த படத்தின் தலைப்பே ’கருடன்’ கிட்டதட்ட இதுவும் பருந்து தான். படத்தின் தலைப்பிலேயே பருந்து வைத்திருக்கும் நடிகர் சூரி நிச்சயம் இப்படத்தின் மூலம் உயரத்திற்கு சென்றால் நல்லது தான், ஆனால் அதற்குள்ளேவே ஓவராக பில்டப் கொடுப்பதை தான் சகிதித்துக்கொள்ள முடியவில்லை. இது சூரிக்கு தன் மீது இருக்கும் பயத்தை வெளிக்காட்டினாலும், அவருக்கே இது கொஞ்சம் ஓவராக இருப்பது தெரிகிறது. ஆனால், சூரியின் பயம் என்னவென்றால், இந்த படத்திற்குப் பிறகு கொட்டுக்காளி வரும், அதன் பிறகு? அந்த கேள்வி தான் அவரை இவ்வளவு பில்டப் கொடுக்க வைத்திருக்கிறது.
சூரியிடம் இருக்கும் பயம் மற்றும் சந்தேகத்தின் வெளிப்பாடு தான் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், நான் மீண்டும் காமெடியனாக நடிப்பேன், என்னை உங்க படத்தில் நடிக்க வைக்க வேண்டும், என்று சிவகார்த்திகேயனிடம் வாய்ப்பு கேட்டார். அதனால், கருடன் தன்னை உயரத்திற்கு அழைத்துச் செல்லுமா? என்ற கேள்வி சூரியிடமே இருக்கும் போது, ரசிகர்களிடம் இருகாமல் இருக்குமா?, அத்துடன் படத்தின் டிரைலரை பார்த்தால், முதலாளிக்கு விஸ்வாசமாக இருக்கும் தொழிலாளி, அதே தொழிலாளிக்கு அந்த முதலாளி செய்யும் துரோகம், அதன் பிறகு அந்த தொழிலாளி என்ன செய்தார்? என்ற கேள்வி தான் படத்தின் கதையாக இருக்கும் என்று தோன்றுகிறது.
இப்படி ஒரு கதையில் சூரி தன் உழைப்பு மூலம் தன்னை நிரூபித்தாலும், அவருக்கு தொடர்ந்து இதுபோன்ற கதைகள் தான் வரும், ஆனால் இப்படிப்பட்ட கதைகளை எத்தனை பேர் எழுதுவார்கள், என்ற நிலை இருக்க சூரியின் நாயகன் அவதாரம், கொஞ்சம் கஷ்ட்டம் தான் என்று கோலிவுட்டில் சில பேச்சுகள் அடிபட்டாலும், ‘கருடன்’ வெளியீட்டுக்கு பிறகே தெரியும் சூரி நாயகனாக உயரப்பறப்பாரா? என்று.
- சுகுமார் ஜெயராமன்
இயக்குநர் ஆர். எஸ். துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'கருடன்' திரைப்படத்தில் சூரி, சசிகுமார், உன்னி முகுந்தன், சமுத்திரக்கனி, ரேவதி சர்மா, ரோஷினி ஹரி பிரியன், பிரிகிடா, துஷ்யந்த் ஜெயபிரகாஷ், மைம் கோபி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள் ஆர்தர் ஏ. வில்சன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை லார்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் K.குமார் தயாரித்திருக்கிறார்.
மே 31 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவிருக்கும் இந்த திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதற்காக சென்னையில் நடைபெற்ற பிரத்யேக வெளியீட்டு விழாவில் சூரி, சசிகுமார், சமுத்திரக்கனி, தயாரிப்பாளர் K.குமார், இயக்குநர் ஆர். எஸ். துரை செந்தில்குமார், துஷ்யந்த் ஜெயப்பிரகாஷ், மைம் கோபி, ரோஷினி ஹரி ப்ரியன், பிரிகிடா, ரேவதி ஷர்மா, ஒளிப்பதிவாளர் ஆர்தர் ஏ. வில்சன், கலை இயக்குநர் துரைராஜ், படத்தொகுப்பாளர் பிரதீப் ஈ. ராகவ், சண்டை பயிற்சி இயக்குநர் மகேஷ் மேத்யூ, திரைப்பட விநியோகிஸ்தர் பைவ் ஸ்டார் K. செந்தில், பாடலாசிரியர்கள் சினேகன் மற்றும் சூப்பர் சுப்பு உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.