எதிர்ப்பார்ப்பில் பிரியா பவானி சங்கர்! - ஏமாற்றிய இயக்குநர் ஹரி
இயக்குநர் ஹரி இயக்கத்தில் முதல் முறையாக அருண் விஜய் நடித்திருக்கும் படம் ‘யானை’. இதில் நாயகியாக பிரியா பவானி சங்கர் நடித்திருக்கிறார். இவர்களுடன் சமுத்திரக்கனி, ராமசந்திரராஜு, ராஜேஷ், ராதிகா, அம்மு அபிராமி, சஞ்சய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். டிரம்ஸ்டிக்ஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் வெடிக்காரன்படி எஸ்.சக்திவேல் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்க, கோபிநாத் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
வரும் ஜூன் 17 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பேசிய இயக்குநர் ஹரி, “நானும், அருண் விஜய் இணைந்து பணியாற்ற வேண்டும் என பல ஆண்டுகளாக விரும்பினோம். அது அமையவில்லை. இந்த கதை நாங்கள் இணைய மிக முக்கியமான காரணமாக இருந்தது. இந்த வாய்ப்பு அமைய காரணம் தயாரிப்பாளர் வெடிக்காரன்பட்டி S.சக்திவேல் அவர்கள்தான். இந்த படம் பெரிய படம், பட்ஜெட் வகையில் இது அதிகம். இது உணர்வுகள் மிகுந்த கதை. ஒரு மனிதன் எல்லாவற்றையும் பொறுத்துக் கொள்வான், அப்படியானவன் கோபப்படும் தருணம் எப்படி இருக்கும் என்பது தான் கதை. கடந்த 3 வருடங்கள் எனக்கு நிறைய கற்று கொடுத்தது. படத்தை கொஞ்சம் வேற மாதிரி எடுக்க விரும்பினேன். என் பாணியை மாற்றி நான் எடுத்த படம் இது. பல மொழி இயக்குநர்களிடம் பல விஷயத்தை கற்றுகொண்டேன், பின்னர் இந்த படத்தை இயக்கியுள்ளேன். சேவல் படத்திற்கு பிறகு ஜிவியுடன் பணி புரிந்துள்ளேன். படத்தில் நடித்துள்ள நடிகர்கள் பெரும் ஒத்துழைப்பு கொடுத்தனர். படத்தில் நிறைய ரிஸ்க்கான காட்சிகள் இருந்தது. எல்லோரும் இணைந்து ஒத்துழைத்து பணியாற்ற வேண்டிய காட்சிகள் இருந்தது, அனைவரும் முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றியுள்ளனர். நான் தாமிரபரணி, ஐயா படம் எடுத்த போது பின்பற்றிய வழிமுறைகளை பின்பற்றி இப்படம் எடுத்துள்ளேன். சமுத்திரகனி சார் ஒரு உதவி இயக்குனர் போல் வேலை பார்த்தார். அது எனக்கு மிக உதவியாக இருந்தது. எனது ஆரம்பகால கட்ட படங்கள் போல் இப்படம் இருக்கும். அனைவருக்கும் நன்றி.
நடிகர் அருண் விஜய் பேசுகையில், “நானும், இயக்குநர் ஹரியும் ரொம்ப நாளாக பணியாற்ற விரும்பினோம். இவ்வளவு பெரிய பொருட்செலவில், பலமான தொழில்நுட்ப கலைஞர்களுடன் படத்தை உருவாக்க பெரிய தயாரிப்பாளர் தேவைப்பட்டார். அப்போது நாங்கள் அணுகிய நபர் சக்தி சார். அவருக்கு நன்றி. இந்த படத்தை உருவாக்க பெரிய தைரியம் வேண்டும். சுற்றியுள்ளவரை பாதுகாக்கும் ஒரு கதாபாத்திரம் தான், எனது கதாபாத்திரம். இந்த படத்தில் நிறைய சவால்கள் இருந்தது. ரொம்ப நாள் கழித்து கிராமம் சம்பந்தப்பட்ட படத்தில் நடித்துள்ளேன். ஹரி சார் எனக்கு பெரிய உதவியாக இருந்தார். படத்தின் ஆக்சன் பெரிய சவாலாக இருந்தது. எனக்கு அடிபட்டது, அதையும் மீறி படத்தை எடுத்து முடித்தோம். கண்டிப்பாக படம் பேசப்படும் என நம்புகிறோம். இது ஹரி சார் பேட்டர்னில் இருந்து மாறி எடுத்தபடம். படத்தில் நடித்த அனைவரும் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளனர். இந்த படம் அனைவரையும் எளிதாக ஈர்க்கும் படமாக இருக்கும். படத்தில் பல காட்சிகளை நான் உணர்ந்து அந்த பாத்திரமாக மாறி நடித்தேன். இந்த படம் காமெடி நிறைந்த, பொழுதுபோக்கு திரைப்படம். ஹரி சார் கண்டிப்பான மாஸ்டர், அவருடைய அர்ப்பணிப்பு அபாரமானது. அவருடைய வேகம் எங்களுக்கு புத்துணர்ச்சி கொடுத்தது. பல இடங்களில் இப்படத்தை எடுத்துள்ளோம். படத்தை அட்டகாசமாக எடுத்துள்ள ஒளிப்பதிவாளருக்கு நன்றி. ஜிவி உடன் இது எனக்கு முதல் படம். படத்தில் பங்குபெற்ற அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் பெரிய உழைப்பை கொடுத்துள்ளனர்.” என்றார்.
நடிகை பிரியா பவானி சங்கர் பேசுகையில், “இவ்வளவு பெரிய படத்தை சீக்கிரம் முடிக்க காரணம் இயக்குனர் ஹரி சார் தான். அவருடைய வேகம் எல்லோரையும் பிரமிக்க வைத்தது. அவருடைய உழைப்பை கணக்கிடவே முடியாது. அருண் சாருக்கு நன்றி. ஹரி சார் உடைய வேகத்திற்கு, ஒளிப்பதிவாளர் ஒத்துழைப்பு கொடுத்து பணியாற்றியுள்ளார். ராதிகா மேடம், ஐஸ்வர்யா மேடம் போன்ற மூத்த கலைஞர்களுடன் பணியாற்றியது பெரிய மகிழ்ச்சி. சமுத்திரகனி, தலைவாசல் விஜய் போன்ற கலைஞர்களின் நடிப்பை பார்த்தது பெரிய அனுபவமாக இருந்தது. இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமாரின் பெரிய ரசிகை நான். ஹரி சார் கதை சொல்ல என்னை அழைத்த போது, அவருடைய படம் இப்படி தன் இருக்கும், அதில் ஹீரோயின் வேடத்தை இப்படி தான் காட்டுவார், என்ற எண்ணத்தில் தான் நான் சென்றேன். குறிப்பாக ஒரு செட் பாடல் இருக்கும், அந்த பாடல் ரொம்ப நன்றாக இருக்கும், என்று நினைத்தேன். அவர் கதை சொல்லி முடித்த போது, சார் செட் பாடல் எங்கே சார் வரும், என்று கேட்டேன். ஆனால், அவர் அதெல்லாம் இந்த படத்தில் இல்லமா, நான் என்னை அப்கிரேட் பண்ணிக்கிட்டேன், என்றார். நான் ரொம்ப எதிர்ப்பார்ப்போடு போனேன் ஆனால் அப்படிப்பட்ட பாடல் இல்லாதது எனக்கு சற்று ஏமாற்றமாக இருந்தாலும், ஹரி சார் தன் பாணியை மாற்றி பண்ணியிருக்கும் படத்தில் நான் நடித்திருப்பது மகிழ்ச்சி. இந்தப் படம் ஹரி சார் பாணி படமாக இருக்காது. மிக நல்ல உணர்வுபூர்வமான படம், படத்திற்கு ஆதரவு தாருங்கள்.” என்றார்.
இப்படத்தில் இடம்பெறும் சண்டைக்காட்சிகள் பெரிய அளவில் பேசப்படும் விதத்தில் இருக்குமாம். குறிப்பாக இரண்டு சண்டைக்காட்சிகளை ஒரே ஷாட்டில் எந்தவித கட்டும் இல்லாமல் படமாக்கியிருக்கிறார்களாம். அந்த சண்டைக்காட்சிகள் ரசிகர்களை வியக்க வைக்கும் விதத்தில் இருக்கும், என்றும் படக்குழு தெரிவித்தனர்.