யோகி பாபு நாயகனாக நடித்துள்ள ‘பொம்மை நாயகி’ பிப்ரவரி 3 ஆம் தேதி வெளியாகிறது
‘குதிரைவால்’ படத்தை தொடர்ந்து இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் யாழி பிலிம்ஸ் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘பொம்மை நாயகி’. அறிமுக இயக்குநர் ஷன் இயக்கியிருக்கும் இப்படத்தில் கதையின் நாயகனாக யோகி பாபு நடித்திருக்கிறார். சுபத்ரா, ஹரி, ஜி என் குமார், அருள்தாஸ், ஜெயச்சந்திரன், லிசி ஆண்டனி, சிறுமி ஸ்ரீமதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.
தந்தை மகள் உறவை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படம், எளிய குடும்பத்து தகப்பனுக்கும் மகளுக்கும் இந்த சமூகத்தால் ஏற்படும் ஒரு சம்பவமும், அதை எதிர்கொள்ளும் தகப்பனின் உணர்வுப்பூர்வமான கதையை விவரிக்கிறது.
காமெடி நடிகராக மட்டும் இன்றி கதையின் நாயகனாகவும் பல வெற்றிகளை கொடுத்திருக்கும் யோகி பாபு, காமெடியை தவிர்த்து பல உணர்வுப்பூர்வமான கதைகளிலும் நடித்து வருகிறார். அந்த வகையில், யோகி பாபுவின் தனித்தன்மையான நடிப்போடு உருவாகியுள்ள இப்படம் அவருடைய வேறு ஒரு பரிணாமத்தை வெளிக்காட்டும் என்று படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். யோகி பாபுவின் மகளாக நடித்திருக்கும் சிறுமி ஸ்ரீமதியின் நடிப்பும் பாராட்டும்படி இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
கடலூர் மற்றும் சுற்றுவட்டாரங்களில் படமாக்கப்பட்டுள்ள இப்படம் வரும் பிப்ரவரி 3 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
அதிசயராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு சுந்தரமூர்த்தி இசையமைத்துள்ளார். செல்வா ஆர்.கே படத்தொகுப்பு செய்ய, ஜெயரகு கலையை நிர்மாணித்துள்ளார். கபிலன், இளையகம்பன், ஜெயமூர்த்தி, அறிவு ஆகியோர் பாடல்கள் எழுத, ஸ்டன்னர் ஷாம் சண்டைக்காட்சிகளை வடிவமைத்துள்ளார். ஏகாம்பரம் உடை வடிவமைப்பாளராக பணியாற்ற குணா மக்கள் தொடர்பாளராக பணியாற்றியுள்ளார்.