Jul 29, 2017 01:13 AM

பாக்கணும் போல இருக்கு

croppedImg_1340730325.jpeg

Casting : பரதன், அன்சிபா, கஞ்சா கருப்பு, சூரி, ஜெயப்பிரகாஷ், விஜய் ஆனந்த், ஜானகி, பிளாக் பாண்டி

Directed By : எஸ்.பி.ராஜ்குமார்

Music By : அருள்தேவ்

Produced By : எப்.சி.எஸ் கிரியேஷன்ஸ் துவார் ஜி.சந்திரசேகர்

’வீரசேகரன்’, ‘தொட்டாள் தொடரும்’, ‘கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை’, ’இருவர் உள்ளம்’ ஆகிய படங்களை தயாரித்த எப்.சி.எஸ் கிரியேஷன்ஸ் துவார் ஜி.சந்திரசேகர் தயாரித்துள்ள 5 வது படமான ‘பாக்கணும் போல இருக்கு’ படத்திற்கு கதை, திரைகக்தை, வசனம், பாடல்கள் எழுதி எஸ்.பி.ராஜ்குமார் இயக்கியுள்ளார்.

 

பி.எஸ்.சி படித்துவிட்டு நண்பர்களுடன் ஜாலிகா ஊர் சுற்றி வரும் ஹீரோ பரதன், அன்சிபாவை காதலிக்கிறார். முதலில் அவரது காதலுக்கு மறுப்பு தெரிவிக்கும் அன்சிபா பிறகு பரதனின் காதலை ஏற்றுக்கொள்ள, அவர்களது காதல் விவகாரம் இரு வீட்டார் பெற்றோருக்கும் தெரிந்துவிட, இரு வீட்டாரும் பேசி அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்கிறார்கள். பரதனுக்கு மூத்த சகோதரர் இருப்பது போல, அன்சிபாவுக்கு ஒரு அக்கா இருக்கிறார். அவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகாத நிலையில், காதலித்துவிட்டதால், பரதன் - அன்சிபா ஜோடிக்கு முதலில் திருமணம் ஏற்பாடு நடைபெறுகிறது.

 

பரதன் - அன்சிபா திருமணம் நிச்சயதார்த்தத்தின் போது, பரதினின் அண்ணன் விஜய் ஆனந்தும், அன்சிபாவின் அக்கா ஜானகியும் சந்தித்துக் கொள்வதுடன் இருவருக்கும் இடையே காதலும் மலர்கிறது. காதல் மலர்ந்த வேகத்திலேயே அவர்களது பெறோருக்கு தெரிந்துவிட, இரண்டு ஜோடிகளுக்கும் ஒரே மேடையில் திருமணத்தை நடத்திவிட வேண்டும் என்று பெற்றோர்கள் முடிவு செய்ய, அதற்கு பரதனனின் பாட்டி தடை போடுவதால், முதலில் மூத்த பிள்ளைக்கு திருமணம் நடத்திவிட்டு பிறகு இளையவர்களுக்கு திருமணம் நடத்தலாம் என்று இரு வீட்டாரும் முடிவு செய்கிறார்கள்.

 

அதன்படி, விஜய் ஆனந்த் - ஜானகி திருமணம் நடைபெறுகிறது. தம்பதிகள் சந்தோஷமாக வாழ்ந்துக் கொண்டிருக்கும் நிலையில், ஹீரோவின் பாட்டியின் சகுனி வேலையால், ஜானகி தனது மாமனார், மாமியார் மற்றும் தனது கணவரை தவறாக நினைத்து தனது பெற்றோரிடம், தனது மாமியார் வீட்டில் கூடுதலகாக நடிகை போடும்படி சொல்கிறார்கள், என்று கூற, அவரது பெற்றோர்கள் விஜய் ஆனந்த் மற்றும் அவரது குடும்பத்தாரை தவறாக நினைத்துக் கொள்கிறார்கள். பிறகு பாட்டியின் சகுனி வேலைதான் இது என்பதை புரிந்துக் கொள்ளும் ஜானகி, தனது மாமியார், மாமனார் மற்றும் தனது கணவர் நல்லவர்கள் என்பதை புரிந்துக்கொள்கிறார். இதற்கிடையில் இரவு நேரத்தில் ஏற்படும் அசம்பாவிதம் ஒன்றினால் ஜானகி தீ காயம் ஏற்பட்டு கோமா நிலைக்கு சென்றுவிட, அவரை நகைக்காக தீ வைத்து எரித்துவிட்டதாக கூறி, ஜானகியின் பெற்றோர் பரதனின் குடும்பத்தார் மீது போலீசில் புகார் அளித்து சிறைக்கு அனுப்பிவிடுகிறார்கள்.

 

தனது குடும்பத்தாரை சிறைக்கு அனுப்பியதால் அன்சிபாவின் அப்பாவை அவரது கண் முன்னே பரதன் அடித்துவிட, அவர்களது காதலில் விரிசல் விழுந்துவிடுகிறது. இப்படி குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பத்தால் பிரியும் இந்த காதல் ஜோடி மீண்டும் ஒன்று சேர்ந்தார்களா இல்லையா, என்பது தான் படத்தின் ‘பாக்கணும் போல இருக்கு’ படத்தின் மீதிக்கதை.

 

காதல் காமெடி மட்டும் அல்லாமல் குடும்ப செண்டிமெண்டோடு ஒரு பொழுதுபோக்கான படமாக இருக்கிறது இந்த ‘பாக்கணும் போல இருக்கு’

 

அறிமுக ஹீரோ பரதன், முதல் படம் போல இல்லாமல் ரொம்ப இயல்பாக நடித்திருக்கிறார். நண்பர்களுடன் சேர்ந்து ஊர் சுற்றுவது, காதலுக்காக கல்லை கடவுளாக நினைத்து வணங்குவது, தனது குடும்பத்தாருக்குக்காக காதலையும் தூக்கி எரிவது, என்று அனைத்து சூழ்நிலையிலும் அவரது நடிப்பு சிறப்பாக அமைந்துள்ளது.

 

கிராமத்தில் ஒரு மாடன் கேர்ள் என்று சொல்லும் அளவுக்கு அன்சிபா, மாடர்ன் உடையாகட்டும், தாவணியாகட்டும் இரண்டிலும் பக்கத்து வீட்டு பெண் போல இருக்கிறார். ஏதோ பாடல்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் ஹீரோயினாக அல்லாமல், கதைக்கு முக்கியத்துவம் உள்ள அவரது கதாபாத்திரம் ரசிகர்கள் மனதில் நிற்கும் வகையில் அம்மணியின் நடிப்பு அமர்க்களம்.

 

சூரி, கஞ்சா கருப்பு, பிளாக் பாண்டி இந்த மூவரின் கூட்டணி காமெடிக் காட்சிகள், நம்ம வயிறை ரனமாக்கும் விதத்தில் இருக்கிறது. அதிலும், கஞ்சா கருப்பின் அந்த சிப் காமெடி தியேட்டரே சிரிப்பு சத்தத்தில் அதிர்கிறது. 

 

ஜி.ரமேஷின் ஓளிப்பதிவு கதைக்கு ஏற்ப பயணித்திருப்பதோடு, காட்சிகளை பிரம்மாண்டப்படுத்தியிருக்கிறது. குறிப்பாக ஆரம்ப பாடல் காட்சியில் வரும் ஜல்லிக்கட்டு போட்டியும், கோவில் திருவிழாவும் ஷங்கர் பட பிரம்மாண்டத்தை நினைவு படுத்துகிறது.

 

யார் இசையமைப்பாளர்? என்று ரசிகர்களை கேட்க வைத்திருக்கிறார் இசையமைப்பாளர் அருள்தேவ். டூயட், குத்து பாட்டு என்று ஒவ்வொரு பாடல்களையும் ஒவ்வொரு விதத்தில் போட்டிருப்பவர், “குப்பம்மா மகளே...குப்பம்மா மகளே...” என்ற குத்து பாடலை கூட மெலொடி கலந்து கொடுத்து, நம்மை ஆட வைப்பதோடு, பாடலை முனுமுக்கவும் செய்திருக்கிறார்.

 

காதலை மையமாக வைத்து காமெடி, குடும்ப செண்டிமெண்ட் என்று இயக்குநர் எஸ்.பி.ராஜ்குமார் திரைக்கதை அமைத்தவிதம் படு சுவாரஸ்யம். அதுவும் அந்த பாட்டியை படத்தின் வில்லனாக்கி, காதலர்களை பிரிக்கும் காட்சி யாரும் எதிர்ப்பார்க்காத ட்விஸ்ட்.

 

பரதன் - அன்சிபா காதல் விவகாரம் அவர்களது பெற்றோர்களுக்கு தெரிவது, பிறகு அவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடப்பது, அங்கு ஏற்படும் குழப்பத்தால், அவர்களுக்கு பதிலாக அவர்களது சகோதரர், சகோதரிக்கு திருமணம் நடப்பது, அதன் பிறகு ஏற்படும் சம்பவத்தால் ஏற்படும் காதல் முறிவு, என்று படம் முழுவதும் வரும் காட்சிகள் அனைத்தையும் இயக்குநர் தொடர்பு படுத்தியுள்ள விதம் திரைக்கதையை சுவாரஸ்யமாக நகர்த்துகிறது.

 

மொத்தத்தில் ‘பாக்கணும் போல இருக்கு’ படத்தை பார்க்கும் ரசிகர்கள் அனைவரும் பார்க்க வேண்டிய படம் என்று சொல்லக்கூடிய விதத்தில், அனைத்தும் கலந்த நல்ல பொழுது போக்கு படமாக உள்ளது.

ஜெ.சுகுமார்