மீசைய முறுக்கு
Casting : ஆதி, ஆத்மிகா, விவேக், விஜயலட்சுமி, கஜராஜ், விக்னேஷ்காந்த், மாளவிகா
Directed By : ஆதி
Music By : ஆதி
Produced By : இயக்குநர் சுந்தர்.சி
தனி இசை பாடல்கள் மூலம் பிரபலமான ஹிப் ஹாப் தமிழா ஆதி, வெள்ளித்திரையில் இசையமைப்பாளராக வெற்றிக்கொடி நாட்டியதோடு, தற்போது ஹீரோவாகவும், இயக்குநராகவும் அறிமுகமாகியுள்ள படம் ‘மீசைய முறுக்கு’.
ஆதி தனது நிஜ வாழ்க்கையில், தனக்கு பிடித்த இசைத் துறையில் சாதித்தது, சாதனைக்கு முன்பாக கடந்து வந்த வேதனைகள் ஆகியவற்றில் சிறிது கற்பனை கலந்து சொல்லப்பட்டிருப்பது தான் இப்படத்தின் கதை.
ஆதியின் பள்ளி மற்றும் கல்லூரி வாழ்க்கை தான் படத்தின் பெரும்பகுதியாக உள்ளது. அதிலும் கல்லூரி வாழ்க்கை தான் படத்தின் பலமே என்று சொல்லலாம்.
சிறு வயது முதலே இசை மீது ஆர்வம் கொண்ட ஆதி, கல்லூரியிலும் பாட்டு இசை என்று அனைவர் மனதிலும் இடம் பிடிப்பது போல ஹீரோயின் ஆத்மிகா மனதிலும் இடம் பிடித்து விடுகிறார். அதே சமயம் ஆத்மிகாவின் பெற்றோரோ இன்னும் ஜாதி, சொந்தம் என்று பேசி காதலுக்கு பெரும் எதிரியாக இருப்பதால், ஆதியின் காதலில் சிக்கல் ஏற்படுகிறது. அதே சமயத்தில், தொடர்ந்து படி அல்லது வேலைக்கு போ, என்று சொல்லும் ஆதியின் பெற்றோர், அவரது லட்சியத்திற்கும் முட்டுக்கட்டை போட, ஒரு வருடத்தில் இசைத் துறையில் சாதித்துவிட்டு, தனது காதலியை கரம் பிடிப்பேன், என்ற லட்சியத்தோடு சென்னை கிளம்பும் ஆதி, தனது கனவு மற்றும் காதலில் ஜெயித்தாரா இல்லையா, என்பது தான் ‘மீசைய முறுக்கு’ படத்தின் மீதிக்கதை.
பள்ளி, கல்லூரி வாழ்க்கை, அதன் பிறகு வரும் காதல் மற்றும் நண்பர்களுடனான கும்மாளம். லட்சயத்திற்கான பயணம், என்று நாம் பல படங்களை பார்த்திருந்தாலும், இந்த படத்தின் திரைக்கதையையும், காட்சிகளையும் இயக்குநராக ஆதி கையாண்டிருப்பது, அவர் மீசையை முறுக்கிக்கொள்ளும்படியே உள்ளது.
திரைக்கதை அமைத்த விதம், காட்சிகளை சொல்லிய விதம், பாடல்கள் மற்றும் அவை இடம்பெறும் சூழ்நிலை என்று அனைத்தையும் ரசிகர்கள் பல்ஸை பார்த்து கையாண்டிருக்கும் ஆதி, இப்படத்தில் கமர்ஷியல் இயக்குநராக மட்டும் இன்றி, இளசுகளின் மனதை கவரும் ஹீரோவாகவும் வலம் வந்திருக்கிறார்.
ஹீரோயின் ஆத்மிகா மட்டும் அழகல்ல, அவரது தோழியாக வரும் மாளவிகா கூட கொள்ளை அழகு. ஒப்புக்கு ஹீரோயினாக அல்லாமல் முதல் படத்திலேயே சொந்தமாக டப்பிங் பேசி நடித்திருக்கும் ஆத்மிகா, தனது வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்.
சின்னத்திரை, இணையதளம் போன்றவைகளில் காமெடி செய்து வந்த விக்னேஷ் காந்த், வெள்ளித்திரையில் தனக்கு கிடைத்த களத்தை மிக சிறப்பாக பயன்படுத்திக் கொண்டுள்ளார். அவரது காமெடி காட்சிகள் பல ரசிகர்களை குலுங்கி குலுங்கி சிரிக்க வைக்கிறது. படத்தில் வரும் அனைத்து கதாபாத்திரங்களும் ஏதாவது ஒரு வகையில் ரசிகர்களை கவர்வது போல, ஆதிக்கு அப்பாவாக நடித்துள்ள விவேக், குணச்சித்திர நடிகராக ரசிகர்களை கவர்ந்துவிடுகிறார். பிள்ளைகளுக்கு அப்பாக்கள் தான் ஹீரோ என்ற வாக்கியத்திற்கு உயிர் கொடுப்பது போல இருக்கிறது விவேக்கின் நடிப்பு.
இயக்குநர் மற்றும் ஹீரோவாக பட்டைய கிளப்பியிருக்கும் ஆதி, இசை மற்றும் பாடல்களில் அமர்க்களப்படுத்தியிருக்கிறார். “மாட்டிக்கிச்சே...மாட்டிக்கிச்சே...” போன்ற பாடல்கள் இளைஞர்களின் ரிங் டோன்களாவதுடன், அவர்களை முனுமுனுக்க வைக்கும் பாடலாகவும் உள்ளது. கீர்த்தி வாசன் மற்றும் யு.கே.செந்தில்குமாரின் ஒளிப்பதிவில் படம் முழுவதுமே கலர்புல்லாக உள்ளது.
ஆங்கிலத்தில் மட்டுமே பேச வேண்டும் என்று சொல்லும் பள்ளி தலைமை ஆசிரியருக்கு தமிழ் குறித்து விவேக் பாடம் எடுக்கும் காட்சியை வைத்து, ’ஹிப் ஹாப் தமிழா’ என்பது தனது விசிட்டிங் கார்டு மட்டும் அல்ல, தனது உணர்வு என்பதை மிக அழுத்தமாக பதிவு செய்துள்ள ஆதி, தனது நடிப்பு மூலம் ஹீரோவாகவும், திரைக்கதை மற்றும் காட்சிகள் நகர்த்தல் மூலம் தன்னை சிறந்த இயக்குநராகவும் இப்படத்தில் பதிவு செய்திருக்கிறார்.
கல்லூரி மாணவர்கள், காதல் தோல்வி இளைஞர்கள், கனவுகளை சுமந்துக் கொண்டு சாதிக்க போராடுபவர்கள், சினிமா ரசிகர்கள் என்று அனைத்து தரப்பினரையும் இந்த ‘மீசைய முறுக்கு’ படம் மூலம் திருப்திப்படுத்தியிருக்கும் ஆதி, இசையமைப்பாளராக மட்டுமல்ல, ஹீரோ மற்றும் இயக்குநராகவும் தனது மீசையை முறுக்கிக்கொண்டு கோடம்பாக்கத்தில் வலம் வரலாம்.
ஜெ.சுகுமார்