’143’ விமர்சனம்
Casting : Rishi, Priyanka Baskar
Directed By : Rishi
Music By : Grandhala Vijay Baskar
Produced By : Sathishchandra Paled
விஜகுமாரின் மகனான நாயகன் ரிஷி வேலைக்கு செல்லாமல் தனது நண்பர்களுடன் ஊர் சுற்றிக் கொண்டு சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார். இதனால் கடுப்பாகும் விஜய் குமார் வெளியூரில் இருக்கும் தனது நண்பனின் காஃபி ஷாப்பில் ரிஷியை வேலைக்கு சேர சொல்லி வற்புறுத்துகிறார். ஒரு கட்டத்தில் ரிஷி, தனது தந்தையின் பேச்சைக் கேட்டு அந்த காஃபி ஷாப்பிற்கு வேலைக்கு செல்கிறார்.
அங்கு செல்லும் போது நாயகி ப்ரியங்கா ஷர்மாவை சந்திக்கிறார். பின்னர் நாயகியுடன் காதல் வலையிலும் விழுகிறார். ரிஷியை பார்க்கும் போதெல்லாம் கோபப்படும் ப்ரியங்கா அவரை வெறுக்கிறார். இந்நிலையில், ஒருநாள் பள்ளி சீருடையில் செல்லும் ப்ரியங்காவை பார்த்த ரிஷி அதிர்ச்சி அடைந்து அவளிடம் சென்று மன்னிப்பு கேட்கிறார்.
பள்ளி செல்வதை ப்ரியங்கா முன்னதாகவே சொல்லியிருக்கலாம் என்று ரிஷி சொல்லி மன்னிப்பு கேட்டுக் கொண்டிருக்கும் போது கத்தியுடன் அங்கு வந்த ஒருவர் ரிஷியை குத்திவிடுகிறார். குத்து பட்ட நிலையில், உயிருக்கு போராடும் ரிஷி மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். இவ்வாறாக ரிஷியின் வாழ்க்கையில் தடங்கல் வருகிறது.
ஊருக்கு புதியவரான ரிஷியை கத்தியால் குத்தியவர் யார்? ரிஷிக்கும் அந்த நபருக்கும் என்ன தொடர்பு? கடைசியில் ப்ரியங்காவுக்கு ரிஷியிடம் காதல் வந்ததா? அதன் பின்னணியில் என்னவெல்லாம் நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர், இயக்குநர் என இரு பணிகளில் கவனம் செலுத்தி இருக்கும் ரிஷி அவரது கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பை சிறப்பாக கொடுத்திருந்தாலும், இயக்கத்தில் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம் என்பது ரசிகர்களின் கருத்தாக உள்ளது. அதே போல் படத்தின் திரைக்கதையிலும் கொஞ்சம் மெனக்கட்டிருக்கலாம். அதேபோல் ஒரு இயக்குநராக கதாபாத்திரங்களை சிறப்பாக வேலை வாங்கியிருக்கிறார்.
ப்ரியங்கா ஷர்மா ஒரு மாணவியாக சிறப்பாகவே நடித்திருக்கிறார். ரிஷி - ப்ரியங்காவுக்கு இடையேயான காதல், கிளாமர் காட்சிகள் ரசிகும்படி இருக்கிறது. விஜயகுமார், கே.ஆர்.விஜயா முதிர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றனர். நக்ஷத்ரா, ராஜ சிம்மன், பிதாமகன் மகாராஜன் என மற்ற கதாபாத்திரங்களும் சிறப்பாகவே நடித்திருக்கின்றனர்.
ஜே.கே.ராஜேஷ் ஒளிப்பதிவில் காட்சிகள் ரம்மியமாக வந்திருக்கிறது. கிராண்டாலா விஜய பாஸ்கரின் இசையில் பாடல்கள் சுமார் ரகம் தான்.
மொத்ததில், நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழ் சினிமாவில் வெளியாகியிருக்கும் காதலர்களுக்கான படமாக உள்ளது இந்த 143.